மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 15 ஜன 2021

மண்ணின் மைந்தன் யார்? தளவாய்க்கு எதிராக நாஞ்சில் அன்பழகன்

மண்ணின் மைந்தன் யார்? தளவாய்க்கு எதிராக நாஞ்சில் அன்பழகன்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் யார் போட்டியிடுவது என்பதில் பொங்கல் அன்றே போட்டி வெளிப்படையாகத் தொடங்கிவிட்டது.

கடந்த சட்டமன்ற தேர்தலில். கன்னியாகுமரியில் அதிமுக சார்பில் தளவாய்சுந்தரம் போட்டியிட, திமுக சார்பில் ஆஸ்டின் போட்டியிட்டார். பாஜக சார்பில் மீனாதேவ் போட்டியிட்டு 24,000 வாக்குகளை பெற்றதால் தளவாய்சுந்தரம் தோல்வியடைந்தார். திமுகவின் ஆஸ்டின் வென்றார்.

முதல் சுற்றிலேயே தளவாய்சுந்தரத்தின் சொந்த ஊரான தோவாளையில் திமுக 5000 க்கும் அதிகமான வாக்குகள்பெற்றிருந்தது. அதேபோல வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக வெற்றி என்றாலும்.ஆஸ்டினின் சொந்த ஊரான இராஜாக்கமங்கலத்தில் தளவாய்சுந்தரம் அதிக வாக்குகள் பெற்றிருந்தார். ஆனாலும் பாஜக வேட்பாளரின் 24 ஆயிரம் வாக்குகளால் கடந்த முறை எம்.எல்.ஏ. ஆகும் வாய்ப்பை இழந்தார் தளவாய்.

எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சிகளில், “ தளவாய்சுந்தரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருந்தால்.சின்னம்மா தளவாய்சுந்தரத்தைத் தான் முதலமைச்சர் நாற்காலியில் அமர்த்தியிருப்பார்”என்று அவரது ஆதரவாளர்களே வெளிப்படையாகப் பேசினார்கள்.

இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட தளவாய் சுந்தரம் கிட்டத்தட்ட தயாராகிவிட்டார். இந்நிலையில், தளவாய்க்கு எதிராக வெளிப்படையாக களமிறங்கியிருக்கிறார் இயக்குனரான நாஞ்சில் பி.சி. அன்பழகன்.

அ தி மு க வின் தலைமைக் கழக நட்சத்திர பேச்சாளரும்,திரைப்பட இயக்குநருமான பி.சி.அன்பழகன் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டார். அப்போது பத்திரிகை நண்பர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருந்த அன்பழகன்,

“கன்னியாகுமரியில் மண்ணின் மைந்தருக்கு போட்டியிடும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். அய்யா வழியை சேர்ந்த72 ஆயிரம் வாக்காளர்கள் நாங்குநேரியில் இருந்த போதும். மண்ணின் மைந்தனுக்கே வாய்ப்பு என்ற நிலையில் இடைத்தேர்தலில் அங்கே எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

அப்படிப் பார்த்தால் கன்னியாகுமரியிலும் மண்ணின் மைந்தருக்கே வாய்ப்பு அளிக்க வேண்டும். தளவாய்சுந்தரம் குமரி மாவட்டத்தை சொந்த இடமாக கொண்டவர் அல்ல.நெல்லை மாவட்டம் ஊரம்பொழியை சேர்ந்தவர். இவரது தந்தை தோவாளை அரசு பள்ளியில் ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டதால் குமரிக்கு வந்தவர். மண்ணின் மைந்தர் என்ற அடிப்படையில் பார்த்தால் தளவாய் சுந்தரம் நெல்லை மாவட்டத்தில்தான் போட்டியிட வேண்டும். நான்தான் குமரியின் மண்ணின் மைந்தன். தொகுதியில் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவன்” என்று தெரிவித்தார்.

மேலும், “நான் இந்தக் காரணத்தால் தலைமையை வற்புறுத்தி சீட் கேட்கக் கூடாது என்பதற்காக இப்போது எனக்கு தூது விட்டு வருகிறார்” என்றும் கூறினார் அன்பழகன்.

இதே நேரம் பொங்கலை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே தோவாளையில் தளவாய்சுந்தரம் வீட்டில் குமரி கிழக்கு மாவட்டம் கட்சியின் ஆண்,பெண் பொறுப்பாளர்கள் கூடி தளவாய்சுந்தரத்திடம் வாழ்த்துக்கள் பெற்ற காட்சியை காண முடிந்தது. அவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, “அன்பழகன் எதையோ எதிர்பார்த்து இப்படி தகவல்களைப் பரப்பி வருகிறார்” என்று முடித்துக் கொண்டனர்.

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

வெள்ளி 15 ஜன 2021