மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 15 ஜன 2021

டிஜிட்டல் திண்ணை: முதல்வர் வேட்பாளர் ஓபிஎஸ் - அறிவிக்கப்போகிறாரா சசிகலா?

டிஜிட்டல் திண்ணை: முதல்வர் வேட்பாளர் ஓபிஎஸ் - அறிவிக்கப்போகிறாரா சசிகலா?

மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.

“தேனியில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் திருநாளன்று நடந்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பிறந்தநாள் விழா வழக்கத்தைவிட இந்த வருடம் கூடுதல் முக்கியத்துவத்தோடு நடைபெற்றது. தொண்டர்களில் இருந்து பிரதமர் மோடி வரை ஓ.பன்னீரை வாழ்த்தியிருக்கிறார்கள்.

கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், தென்மாவட்ட அமைச்சர்கள் ஓபிஎஸ்ஸைக் காலையிலேயே நேரில் சென்று வாழ்த்தினார்கள். அதேநேரம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சேலம் நெடுஞ்சாலை வீட்டில் இருந்து தொலைபேசி மூலமாகவே ஓ.பன்னீரை வாழ்த்தியிருக்கிறார்.

இந்த நிலையில்தான் துணைமுதல்வர் ஓ.பன்னீரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகளிடையே, ‘நீங்க வேணா பாருங்க. சசிகலா வெளியே வந்த பிறகு இந்த தேர்தலின் அதிமுக சார்பான முதல்வர் வேட்பாளராக ஓபிஎஸ்தான் இருக்கப் போகிறார் என்ற ஆச்சரிய விவாதம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக தேனியில் பன்னீருக்கு நெருக்கமானவர்கள் தரப்பில் பேசியபோது வேறு மாதிரியான தகவல்கள் கிடைக்கின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்தபோது, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று மிகப்பெரிய லாபி நடந்தது. ஆனால், அதற்கு ஓ.பன்னீர் ஒப்புக்கொள்ளவில்லை. பல அமைச்சர்கள் ஓபிஎஸ் வீட்டுக்குப் போய் பேசினார்கள். கடைசியில் அக்டோபர் 7ஆம் தேதி தலைமைக்கழகத்துக்கு வந்த ஓபிஎஸ், ‘வரும் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி’ என்று அறிவித்தார். அதற்குப்பின் இந்த மூன்று மாதங்களில் எந்த இடத்திலும், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளர் என்று ஓபிஎஸ் குறிப்பிட்டதே கிடையாது என்பது அவரை உற்று கவனித்தவர்களுக்குத் தெரியும். என்னதான் இருந்தாலும் தான் அமர்ந்த முதல்வர் ஆசனத்தில் எடப்பாடி அமர்ந்திருப்பது பன்னீருக்கு ஒருவித ஆற்றாமையை ஏற்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது.

இந்த நிலையில்தான் அண்மையில் பொதுக்குழு கூடியபோது சசிகலாவுக்கு எதிராக ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்திருக்கிறார். ஆனால் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படுவது தேவையில்லாத சலசலப்பை ஏற்படுத்தும். இப்போது அது தேவையில்லை. அப்படி தீர்மானம் கொண்டுவந்தால் நான் பொதுக்குழுவுக்கே வரவில்லை என்று கூறிவிட்டார் ஓபிஎஸ். அதன் பிறகுதான் எடப்பாடியால் அந்தத் தீர்மானம் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் சசிகலா விரைவில் விடுதலையான பின்னர் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பில் மாற்றம் ஏற்படும் என்று ஓபிஎஸ் தரப்பினர் நம்புகிறார்கள். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் அண்மை டெல்லிப் பயணத்தின்போது இந்த ஏற்பாடுகள் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அமமுகவினரும் கூறுகிறார்கள். இந்த அடிப்படையில் ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழாவுக்கு டெல்லியில் இருந்து எத்தனை விருந்தினர்கள் வந்தாலும், அதைத் திறக்க சசிகலாதான் பொருத்தமானவர் என்று ஓ.பன்னீர் கருதுகிறார். இதுபற்றியும் டெல்லிக்குச் சொல்லியிருக்கிறார். அதிமுகவையும், அமமுகவையும் இணைக்க ஜெயலலிதா நினைவிடமே சரியான இடம் என்றும் ஓபிஎஸ் கருதுகிறார். இந்தத் திட்டத்தைப் பற்றி அறிந்துதான் ஜெ. நினைவிடத்தை தன் தலைமையில் மோடியை வைத்தே திறந்துவிட வேண்டுமென எடப்பாடி வேகமான முயற்சிகள் எடுத்து வருகிறார். அதற்காகவே அவசர டெல்லி பயணத்துக்குத் திட்டமிட்டார். அதுவும் பிரதமரின் அப்பாயின்ட்மென்ட் கிடைக்காததால் இப்போது தள்ளிப்போகிறது என்கிறார்கள்.

அமமுகவிலும் ஓபிஎஸ் வட்டாரத்திலும் இப்படி பேசப்பட்டுக்கொண்டிருக்கையில் எடப்பாடி தரப்போ, ‘அண்மையில் டெல்லி சென்ற தினகரன் யாரையும் பார்க்கவே முடியவில்லை. ஆனால், அந்தப் பயணத்தில் பலரையும் பார்த்ததாக அவர்களே தகவல் பரப்புகிறார்கள். எடப்பாடிக்கும் பாஜகவுக்கும் முரண்பாடு இருப்பதாக வரும் யூகங்களையும் அவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதையடுத்துதான் எடப்பாடி டெல்லியிடம் பேச சில நாட்களுக்கு முன் பாஜக பொதுச் செயலாளர் சிடி.ரவி, ‘அதிமுகதான் கூட்டணியில் பெரிய கட்சி. அதன் முடிவை ஏற்போம்’ என்று அறிவித்தார். அதையடுத்து முருகனும் இதேபோல பேசினார். இதெல்லாம் எடப்பாடியின் முயற்சிகளால் வந்தவைதான். மேலும் சென்னைக்கு வந்த நட்டாவும் துக்ளக் விழாவில் எடப்பாடியின் ஆளுமையை வெளிப்படையாக பாராட்டிப் பேசியிருக்கிறார். எனவே எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜகவும் ஏற்றுக்கொண்டு விட்டது. இதில் வேறு மாற்றம் நடக்க வாய்ப்பே இல்லை’ என்கிறார்கள்.

இப்படி அதிமுகவுக்குள்ளேயே இரு தரப்புகள் மறைமுக யுத்தம் நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், ‘சசிகலா வெளியே வந்தபின் சுமார் 20 அமைச்சர்கள் 60 எம்.எல்.ஏ.க்களோடு பன்னீர் அவரை சந்திப்பார். ஏற்கனவே அவர் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் அந்த அடிப்படையில் பன்னீரையே முதல்வர் வேட்பாளாராக அறிவிப்பார் . அதை பன்னீரும் இப்போது நம்பிக்கொண்டிருக்கிறார்’ என்றும் அமமுக வட்டாரத்தில் கூறுகிறார்கள்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ்அப்.

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா: ஐடி விங் மாற்றப் பின்னணி!

10 நிமிட வாசிப்பு

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

வெள்ளி 15 ஜன 2021