மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 14 ஜன 2021

அடுத்த தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா?

அடுத்த தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா?

தமிழக அரசின் தற்போதைய தலைமைச் செயலாளராக இருக்கும் கே.சண்முகம் ஐ.ஏ.எஸ்.சின் பதவிக்காலம் வரும் ஜனவரி 31ஆம் தேதியோடு நிறைவடைவதை அடுத்து தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ஹன்ஸ்ராஜ் வர்மா நியமிக்கப்படவிருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய தலைமைச் செயலாளர் கே.சண்முகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே அவருக்கு இருமுறை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு விட்ட நிலையில், மூன்றாவது முறை பதவி நீட்டிப்பு கேட்பதை சண்முகமே விரும்பவில்லை என்கிறார்கள். இந்நிலையில் அடுத்த கட்டமாகத்தான் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமைச் செயலாளர் ஆக இருக்கிறார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அரசு இயந்திரத்தின் உச்சாணிக் கொம்பை அலங்கரிக்கப்போகும் இந்த ஹன்ஸ்ராஜ் வர்மா யார்?

1964ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி பிறந்த ஹன்ஸ்ராஜ் வர்மா ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், இந்திய குடிமைப்பணித் தேர்வை தமிழ்நாடு பிரிவின் கீழ் எழுதி தேர்வானவர். 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி முதல் இன்றுவரை தமிழக அரசுப் பணியிலேயே தொடரும் இவர், மாவட்ட ஆட்சியர், பத்திரப்பதிவுத்துறை, மின்னியல்துறை, மின்சாரத்துறை, கனிம வளம், டாஸ்மாக், தொழிலாளர் நலத்துறை, திட்ட அமலாக்கம், சிட்கோ, ஹட்கோ எனப்படும் சிறு தொழில்துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை போன்றவற்றில் பணியாற்றி விட்டு கடந்த 2016 செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி முதல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயலாளராக இருக்கிறார்.

தற்போது, தலைமைச் செயலர் அந்தஸ்தில் இருக்கும் இவர், தகவல் தொழில் நுட்பத்துறையின் கூடுதல் செயலாளராகவும் பொறுப்பேற்றிருக்கிறார். ஹன்ஸ்ராஜ் வர்மா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவர் என்பதும், தற்போதைய ஆட்சி பீடத்தின் ஆலோசனைக் கருவியாக இருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெயலதாவின் இலவச லேப்டாப் திட்டத்தை துல்லியமாக்கி, சிந்தாமல் சிதறாமல் வெற்றிகரமாக்கியவரும் இந்த ஹன்ஸ்ராஜ் வர்மாதான். மேலாண்மைத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பதாலும் அனுபவம் மிக்கவர் என்பதாலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் கூடுதல் பொறுப்புகளிலும் சில காலம் அமர்த்தப்பட்டு அவற்றை சீர் செய்திருக்கிறார். கடந்த 2020 அக்டோபர் மாதம் வெற்றிகரமாக நடந்த இணையவழி உலகளாவிய தொழில்நுட்ப மாநாட்டின் பின்னணியில் இருந்தவர் ஹன்ஸ்ராஜ் வர்மா. தகவல் தொழில் நுட்பத்துறையின் கூடுதல் செயலாளராக இவர் பதவியேற்ற குறுகிய காலத்திலேயே ‘டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்’ என்ற பிரிவில், ‘டிஜிட்டல் இந்தியா 2020’ தங்க விருதையும், அறநிலையத்துறையின் கோவில் மேலாண்மை திட்டம் குறித்த மென்பொருளுக்காக வெள்ளி விருதையும் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோயங்காவிடம் இருந்து பெருமையுடன் பெற்றது தமிழகம்.

2020 ஏப்ரல் மாதத்திலேயே, அடுத்த தலைமைச் செயலாளர் ரேஸ் என்கிற மின்னம்பலத்தின் செய்தியில், “இப்போதைய சீனியாரிட்டிபடி 1984 ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான மீனாட்சி ராஜகோபால், 1985 பேட்ச் அதிகரியான ஜக்மோகன் ராஜ், 1985 பேட்ச் அதிகாரியான ராஜீவ் ரஞ்சன், 1986 பேட்ச் அதிகாரியான ஹன்ஸ்ராஜ் வர்மா ஆகியோர் பட்டியலில் இருக்கிறார்கள்.

இவர்களில் மீனாட்சி ராஜகோபால் அண்மையில் ஆளுநர் மாளிகை தலைமைச் செயலாளராக இருந்து டெல்லிக்கு சென்றுவிட்ட ராஜகோபாலின் மனைவி. அவரை தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் ஆக்க பாஜக ஒருவகையில் திட்டமிடலாம். ராஜீவ் ரஞ்சனும் சீனியாரிட்டி பட்டியலில் இருக்கிறார். ஆனால் அடுத்த தலைமைச் செயலாளராக ஹன்ஸ்ராஜ் வர்மாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் மத்தியில் பேச்சு இருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தோம்.

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

வியாழன் 14 ஜன 2021