மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 13 ஜன 2021

அடித்து வீழ்த்த காத்திருக்கும் கொங்கு ‘பெல்ட்’ சமூக வாக்குகள் கவிழ்க்குமா...காப்பாற்றுமா?

அடித்து வீழ்த்த காத்திருக்கும் கொங்கு ‘பெல்ட்’   சமூக வாக்குகள் கவிழ்க்குமா...காப்பாற்றுமா?

–பாலசிங்கம்

பசுமைக்கும், குளுமைக்கும் பெயர்போனதாலோ என்னவோ, கொங்கு மண்டலத்துக்கும் சூரியனுக்கும் அவ்வளவாய் ஆகாது. இரட்டை இலையின் மீது அங்குள்ள மக்களுக்கு அப்படியொரு பாசப்பிணைப்பு. எம்ஜிஆர் காலத்தில் துவங்கிய இரட்டை இலைப்பாசம், ஜெயலலிதா காலத்தில் இரட்டிப்பானது. ஒன்றிரண்டு தேர்தல்களைத் தவிர, பெரும்பாலான தேர்தல்களில் அதிமுக பெற்றதெல்லாம் அசுர வெற்றிதான்.

மேற்கு மாவட்டங்களில் பெரும்பான்மைச் சமூகமாக இருக்கிற கொங்கு வேளாளர் சமூகம் மாத்திரமின்றி, பொருளாதாரரீதியாக பலம் வாய்ந்த நாயுடு சமூகத்தினர், இடைச்சாதியினர், பட்டியல் இன மக்கள், மலையாளிகள் என எல்லோரும் அதிமுகவை ஆதரிப்பதில் குறையே வைத்ததில்லை. ஆனால் அரசியல் என்று வரும்போது, அங்கு பகுத்தறிவு, பக்தி எல்லாமே தொலைந்து போகும். அங்கே பெரும்பான்மைச் சமூகமே வேட்பாளராக வெற்றிபெறும்.

மதுரை, திருச்சியைப் போல கோவையும், ஈரோடும் ‘பவர் பாலிடிக்ஸ்’ கலாச்சாரத்துக்குப் பழகியது கிடையாது. செல்வம் கொழிக்கும் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அதை கற்றுத்தந்து அதில் உச்சத்தையும் தொட வைத்த பெருமை சசிகலா குடும்பத்தையே சேரும். முக்கியமாகச் சொன்னால் சசிகலாவின் உறவினர் ராவணனுக்கு அதில் பெரும் பங்குண்டு. அவருக்குக் காணிக்கை செலுத்தி, அவரைத் தரிசிக்கக் கால்கடுக்க நின்றவர்கள், இன்றைக்கு செல்வத்திலும் செல்வாக்கிலும் இமயம் தொட்டு நிற்பதையும், ராவணன் இருக்குமிடம் தெரியாது இருப்பதையும் கோவை அதிமுகவினர் இப்போதும் பேசுகின்றனர்.

அதிமுக ஆட்சி என்றாலே முக்குலத்தோருக்கு ஆதரவான ஆட்சி என்று ஒரு காலத்தில் பேசப்பட்டதுண்டு. அதை உடைத்தது 2011–2016 அதிமுக ஆட்சிக்காலம்தான். நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி, ஊரக வளர்ச்சித்துறை, மின்சாரம், டாஸ்மாக், போக்குவரத்து என பசையுள்ள பதவிகள் அத்தனையும் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தரப்பட்டதும் அப்போதுதான். ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இவர்களுக்குள் வேறெந்த சமுதாய அமைச்சர்களுக்கு இடையிலுள்ள பிணைப்பை விட அதிகமான பிணைப்பு இருந்தாலும் ஜெயலலிதா இருக்கும் வரை அதை அவர்கள் வெளிப்படுத்திக்கொண்டதே இல்லை. அவர் மறைந்தபின்பு, சந்தர்ப்பமும் சூழ்நிலையும் இவர்களுக்குச் சாதகமாக வந்தது.

சிறைக்குப் போனார் சசிகலா. நலிவுற்றார் நடராஜன். திமிர் காட்டினார் தினகரன். கூவத்துாரில் கூடி நின்றனர் கொங்கு சகோதரர்கள். முதல் முறையாக அரசியல் அதிகாரத்தைக் கையில் எடுத்து கம்பு சுற்ற ஆரம்பித்தார்கள். டெல்லியிலிருந்து நீண்ட ஆதரவுக்கரம் அவர்களுக்கு தெம்பு கொடுத்தது. அதற்குப் பின் அவர்கள் காட்டில் பெய்ததெல்லாம் என்ன மழையென்பதை யாருக்கும் விளக்கமாகச் சொல்ல வேண்டியதில்லை.

ஐம்பதாண்டு திராவிட இயக்க அரசியல் வரலாற்றில் கொங்கு சமுதாயம் ஆட்சி அதிகாரத்தில் இத்தனை வலுவாக அங்கம் வகித்தது இப்போதுதான். அது அந்த மாவட்டங்களின் வளர்ச்சிக்கும் அடித்தளம் போட்டது உண்மை. எந்த ஆட்சிக்காலத்திலும் இல்லாத அளவில் கோவையிலும், சேலத்திலும், கரூரிலும், நாமக்கல்லிலும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வளர்ச்சிப் பணிகள் நடந்தன. புதுப்புது பாலங்கள், புறவழிச்சாலைகள், பஸ் போர்ட், ஸ்மார்ட் சிட்டி வேலைகள் என இங்கு கடந்த ஐந்தாண்டுகளில் நடந்த வேலைகளும் கொட்டிய நிதியும் ஏராளம் தாராளம். அவை பல மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய நிதியை மடை மாற்றிக் கொண்டு செல்லப்பட்டவை.

அந்தப் பணிகளில் தரமில்லை, தொலைநோக்கு இல்லை, எக்கச்சக்கமான ஊழல் நடக்கிறது என்பது போன்ற குற்றச்சாட்டுகளை திமுகவினர் குவிக்கின்றனர். ஆனால் அதையும் தாண்டி எவ்வளவு வேலை நடந்திருக்கிறது என்பதைத்தான் மக்கள் பார்க்கின்றனர். யார்தான் ஊழல் செய்யவில்லை; இவ்வளவு வேலை இதற்கு முன்பு நடந்திருக்கிறதா என்று எதிர்க்கேள்வி கேட்கும் மக்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் இத்தனையையும் மீறி, கொங்கு மண்டல மக்களிடம் மிகமிக அதிகமாக விவாதிக்கப்படுகிற சில விடயங்கள் இருக்கின்றன.

ஜெயலலிதா மறைவுக்குப் பின், இந்த அமைச்சர்கள் அப்பட்டமாக வெளிப்படுத்தும் சமூகப்பற்றுதான் அதில் முதன்மையானது. அதையடுத்து, அவர்களின் விளம்பர மோகம், அரசு நிர்வாகங்களில் காண்பிக்கும் ஆதிக்கம் எல்லாமே மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த மாற்று சமுதாய மக்களால் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன. அதற்கு சில காரணிகளும் உள்ளன. இந்த மாவட்டங்களில் பெரும்பான்மைச் சமுதாயமாக இருக்கிற கொங்கு வேளாளர் மக்கள், கட்சிப்பாகுபாடின்றி ‘இது நம்ம ஆட்சி’ என்று கொண்டாடித் தீர்க்கின்றனர். திமுகவில் பகுத்தறிவுப் புயலாக தங்களை அடையாளம் காட்டிக்கொண்ட பலரும் சத்தமே இல்லாமல் ஜாகையை மாற்றிக்கொண்டு சமூக ஊடகங்களில் சாதிப்பெருமை பேசுவதை பார்க்க முடிகிறது. பள்ளி மாணவர்கள் துவங்கி பத்திரிகையாளர்கள் வரை எல்லோரிடமும் இந்த சாதியப்பற்று ஆழமாக வேரூன்றி இருப்பதும் அப்பட்டமாகத் தெரிகிறது. சமூக ஆர்வலர்கள், பொது விஷயங்களுக்காகப் போராடுபவர்களும் கூட இந்த வட்டத்துக்குள் அடைபட்டு அமைதியாகிவிட்ட அதிசயம் நடந்துள்ளது. இது ஆளும்கட்சிக்குப் பலமாகவும் பார்க்கப்படுகிறது.

மற்றொரு கோணத்தில் பார்க்கும்போது, இதுவே பலவீனமாகவும் ஆவதற்கும் வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர, மற்ற சமுதாயத்தினர் அனைவரும் ஓரணியில் திரள்வதற்கு கடந்த சில ஆண்டுகளில் தாங்கள் பெற்றுள்ள அனுபவங்களே வழிவகுக்கும் என்று மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பல காரணிகளை அடுக்குகின்றனர். சமூகம் சார்ந்து வழிநடத்தப்படும் வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இதுபோன்ற எக்கச்சக்கமான தகவல்கள் பரிமாறப்படுவதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசு அதிகாரி ஒருவர், ‘‘இதற்கு முன்னும் திமுக ஆட்சிக்காலத்திலும், அதிமுக ஆட்சிக்காலத்திலும் இதே சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் அமைச்சர்களாகவும், எம்எல்ஏக்களாகவும், மேயர் உள்ளிட்ட பெரிய பொறுப்புகளிலும் இருந்துள்ளனர். ஆனால் கட்சி, மக்கள் நலனைத் தாண்டி, சமுதாயப்பற்றை அவர்கள் வெளியில் காட்டிக்கொண்டதில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக அதிகாரிகள் நியமனத்தில் துவங்கி, கட்சி நியமனம் வரையிலும் இவர்களின் சாதியப்பற்று பகிரங்கமாக வெளிப்பட்டிருக்கிறது.

கோவையை எடுத்துக்கொள்ளுங்கள்...மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், துணை ஆணையர், தலைமைப் பொறியாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என முக்கியப் பதவிகளில் இருப்பவர்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான். இவர்களிடம் ஒரு கோரிக்கை, புகார் என்று வரும்போது அவர்கள் சார்ந்த சமுதாயத்துக்கே முன்னுரிமை தருவார்கள் என்பதுதான் பொது நியதி, அனுபவமாக இருக்கிறது. நியமனம், பணி மாறுதல், பதவி உயர்வு என்று பலவற்றிலும் இந்த பாரபட்சம் நிலைநாட்டப்பட்டிருக்கிறது.’’ என்று கூறி, இன்னும் பல சம்பவங்களையும் சுட்டிக்காட்டினார்.

இதை மறுக்கும் திமுக நிர்வாகி ஒருவர், ‘‘சமீபத்தில் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு மாறிய முன்னாள் மேயர் ராஜ்குமாரும் அதே சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான். அவர்களின் இழுப்புக்கு அவர் ஒத்துப்போகவில்லை என்பதால் அவரை டம்மியாக்கி கட்சியை விட்டே வெளியேற்றி விட்டார்கள். அவர்களுக்கு சமுதாயப்பற்றை விட பணப்பற்றே அதிகம்’’ என்றார்.

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. சென்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிப் பொறுப்பை எட்டிப்பிடிக்க முடியாமல் அடித்து வீழ்த்திய கொங்கு ‘பெல்ட்’ இந்த முறையும் அழுத்தமாக யாரையோ அடித்து வீழ்த்தக் காத்திருக்கிறது. அது யாரை என்பது தான் விடை தெரியாத வினாவாகவுள்ளது.

தமிழகத்தில் சாதியும், மதமும் அடையாளங்களாக இருக்குமே தவிர, அது அரசியலில் ஆதிக்கம் செலுத்திய வரலாறு இதுவரையில்லை. வரும் தேர்தல் வரலாற்றை மாற்றி எழுதுமா...சாதியும் மதமும் சேர்ந்து சாதிக்கப்போகிறதா, சறுக்கப்போகிறதா...காலம் வரும்வரை காத்திருப்போம்!.

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

புதன் 13 ஜன 2021