மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 13 ஜன 2021

விவசாயக் கடன், 5 சவரன் வரையிலான நகைக் கடன் ரத்து: ஸ்டாலின்

விவசாயக் கடன், 5 சவரன் வரையிலான நகைக் கடன் ரத்து: ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 13) திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் நத்தம் ஊராட்சியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றார். இந்நிகழ்வில் ஸ்டாலின் துணைவியார் துர்கா ஸ்டாலினும் பங்கேற்று பொதுமக்களுடன் பொங்கல் வைத்துக் கொண்டாடினார்கள்.

இந்நிகழ்வில் ஸ்டாலின் ஆற்றிய உரையில்,

“ இன்னும் 4 மாதங்கள் தான் இருக்கின்றது. அந்த 4 மாதத்தில் வரப்போகிற தேர்தலில் ஒரு மாற்றத்தை இங்கே எல்லோரும் குறிப்பிட்டுச் சொன்னது போலத் தமிழக மக்கள் ஏற்படுத்தித் தருவதற்குத் தயாராக இருக்கிறார்கள். அதில் எந்த மாற்றமும் சந்தேகமும் இல்லை. அந்த தேர்தல் மாற்றத்திற்குப் பிறகு, நான் உறுதியோடு கூறுகிறேன், “நீட்” தேர்வைப் பொறுத்தவரைக்கும், எப்படி தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த வரையில் தமிழ்நாட்டில் நுழைய முடியாமல் இருந்ததோ, இன்னும் நான் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்த வரையில் கூட “நீட்” உள்ளே நுழைய வில்லை.

ஆனால் எடப்பாடி முதலமைச்சராக இருந்த நேரத்தில் அது உள்ளே நுழைந்து இருக்கிறது என்று சொன்னால் அந்த அளவிற்கு மத்திய அரசிடம் மண்டியிட்டு ஒரு அடிமையாக, அவர் செய்திருக்கக் கூடிய ஊழலிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அதை ஆதரித்துக் கொண்டிருக்கிறார். அதைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆகவே தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வருகிற போது உறுதியோடு சொல்லுகிறேன் “நீட்“ தேர்வை உடனடியாக தமிழகத்திலிருந்து விலக்குவதற்கான எல்லா முயற்சிகளிலும் கடைசி வரையில், அதில் உறுதியாக இருந்து அதை நிறைவேற்றும் முயற்சியில் நான் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதற்குத் தயாராக இருக்கக்கூடிய வந்தான் இந்த ஸ்டாலின் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறேன்” என்றவர் தொடர்ந்து பேசுகையில்,

“ 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பதற்கு முன்பு கலைஞர் வாக்குறுதிகளைத் தந்தார். அதில் முக்கியமாக விவசாயிகளை மையமாக வைத்து எவ்வாறு இலவச மின்சாரம் கொடுத்தாரோ, அதேபோல கூட்டுறவு வங்கிகளில் இருக்கக்கூடிய 7000 கோடி ரூபாய்க் கடனை முழுமையாக நான் ஆட்சிக்கு வந்தால் தள்ளுபடி செய்கிறேன் என்று அவர்கள் அறிவித்தார்கள். 7000 கோடி ரூபாய்க் கடனை எப்படி தள்ளுபடி செய்யப் போகிறார் என்ற ஐயம் எல்லோருக்கும் இருந்தது. அ.தி.மு.க.வினர் தானே அதிகமாகக் கடன் வாங்கியிருக்கிறார்கள். எப்படி கடனை தள்ளுபடி செய்யப் போகிறோம் என்று தலைவர் கலைஞர் அவர்கள் இடத்தில் கேட்டோம். நான் அவர்களை தி.மு.க.வினராக அ.தி.மு.க.வினராக காங்கிரஸ்காரர்களாக பா.ம.க.வினராக கம்யூனிஸ்ட்டுகளாக பார்க்கவில்லை; அவர்கள் அத்தனை பேரையும் தமிழகத்தைச் சேர்ந்த விவசாய பெருங்குடி மக்களாக நான் பார்க்கிறேன் என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னார்.

இதனை எதற்காகச் சொல்கிறேன் என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் போதும், விவசாயிகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கின்ற இயக்கமாக - பணியாற்றுகின்ற இயக்கமாகச் செயல்படுகிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

தலைவர் கலைஞர் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார். அதற்கான விழா நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ஆளுநர் அவர்கள் பதவி ஏற்பு செய்து வைத்தார்கள். பதவியேற்பு விழா நடைபெற்ற அந்த மேடையிலேயே தலைவர் கலைஞர் அவர்கள் கோட்டையிலிருந்து 7000 கோடி ரூபாய்க் கடன் ரத்துக்கான கோப்புகளை வரவழைத்து அதில் கையெழுத்திட்டார். இதுபோன்ற பல்வேறு திட்டங்களை விவசாயப் பெருங்குடி மக்களுக்காகக் கொண்டு வந்து சேர்த்தார்.

இப்போது இந்த அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகு, தலைவர் கலைஞர் எப்படி விவசாயக் கடனை ரத்து செய்தாரோ, அதுபோல் ரத்து செய்யுங்கள் என்று விவசாயப் பெருங்குடி மக்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உயர்நீதிமன்றமும் உத்தரவு போட்டது. அதனை நிறைவேற்ற முடியாத இந்த அரசு, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றத்தில் போய் தடை கேட்டது. இப்போது நான் சொல்கிறேன். இன்னும் 4 மாதங்களில் ஆட்சிக்கு வரப் போகிறோம். அப்போது தலைவர் கலைஞர் வழிநின்று, விவசாயிகள் கடனை ரத்து செய்வதற்கான உத்தரவைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு போடும் என்று நான் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளைச் சொன்னோம்.

அதில் குறிப்பாக, ஏழை - எளிய, நடுத்தரக் குடும்பங்களில் பிறந்த சிலர் தங்களது வறுமையின் காரணமாக தங்களது வீட்டில் இருக்கும் நகைகளை அடமானம் வைத்து அதற்கு வட்டிக்கு வட்டி கட்டும் சூழ்நிலை நிலவுகிறது. அதற்காக 5 சவரன் வரையிலான நகைக்கடனை ரத்து செய்வோம் என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது சொன்னோம். இப்போதும் சொல்கிறோம். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வர இருக்கிறோம். எப்படி விவசாயிகள் கடனை ரத்து செய்வோம் என்று சொன்னோமே அதுபோல இந்த ஐந்து சவரன் நகைக்கடன் பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் என்றும் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார் ஸ்டாலின்,

-வேந்தன்

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

புதன் 13 ஜன 2021