மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 12 ஜன 2021

மின்னணுப் பொருளாதாரம்- சிறப்புத் தொடர்: கொரோனாவிடம் தோல்வி; சீன நிறுவனங்களை வெளியேற்றுவதில் வெற்றி! பாகம் 7:

மின்னணுப் பொருளாதாரம்- சிறப்புத் தொடர்:  கொரோனாவிடம் தோல்வி; சீன நிறுவனங்களை வெளியேற்றுவதில் வெற்றி! பாகம் 7:

பாஸ்கர் செல்வராஜ்

கொரோனா பெரும்தொற்று வந்து பொது முடக்கம் அறிவித்த பின்பு இந்திய இணைய வர்த்தகம் பெரும் எழுச்சி கண்டது. இந்தியாவின் முறைசாரா பொருளாதாரத்தின் அடிநாதமான சில்லறை வர்த்தக சந்தையைக் கைப்பற்ற அமேசான், வால்மார்ட், ஜியோ ஆகிய மூன்று நிறுவனங்கள் போட்டியில் இறங்கின. தமது பலகீனங்களை சில நிறுவனங்களுடன் இணைத்துக்கொண்டும், மற்ற நிறுவனங்களை வாங்கி இணைத்து பலப்படுத்திக்கொண்டும் களமிறங்கின. மிக சமீபத்தில் சந்தைக்கு வந்திருந்தாலும், ஜியோ தனது சொந்த இணையம், தரவுகளின் திரட்சி, அரசின் ஆதரவு காரணமாக முதலீடுகளைப் பெருமளவு ஈர்த்தது. கூகுள், முகநூல் நிறுவனங்களின் செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருள் தொழில்நுட்ப பலமும், இந்திய இணைய விளம்பர சந்தையின் அவர்களின் ஆதிக்கமும் இம்மூவரின் கூட்டணியை எல்லோரையும்விட சந்தையில் பலமான இடத்துக்குக் கொண்டு சென்றது. ஜியோவின் அதிபர் அம்பானியை உலகின் நான்காவது பெரிய பணக்காரர் ஆக்கியது.

மூவருக்கும் பொதுவான போட்டியாளன் சீனா

இப்படி மூர்க்கமாக சந்தையைப் பிடிக்க போட்டிப்போட்டுகொண்ட இந்த நிறுவனங்கள் சீன நிறுவனங்களை இணைய தொழில்நுட்ப சந்தையை விட்டும், வர்த்தக சந்தையை விட்டும் வெளியேற்றும் புள்ளியில் ஒற்றுமை கண்டன. இணைய தொழில்நுட்ப சந்தையைப் பொறுத்தவரை, ஜியோ மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை 2016 முதல் நட்டமடைய செய்து சந்தையை விட்டு வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. சர்வதேச சந்தையில் இருந்து சீன நிறுவனமான ஹோவாவெய்யின் 5ஜி சாதனங்களை தடை செய்யும் முயற்சியில் கொரோனாவுக்கு முன்பிருந்தே அமெரிக்கா ஈடுபட்டு வந்தது. இந்தியாவில் ஜியோ நீங்கலாக மற்ற நிறுவனங்கள் எல்லாம் சீன நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி வருகின்றன. உலகின் எல்லா நிறுவனங்களும் தொடர்ச்சியாக ஒரே நிறுவனத்தின் சாதனங்களைப் பயன்படுத்துவதையே விரும்பும். ஏனெனில் இருக்கும் சாதனங்களுடன் புதிய சாதனத்தை இணைத்து அடுத்தகட்ட 5ஜி சேவையை வழங்குவது செலவு குறைவானது; சிக்கல் இல்லாதது.

குறிவைக்கப்பட்ட ஹோவாவெய்

ஹோவாவெய் நிறுவனத்தை விலக்க மற்ற நாடுகளுக்குக் கொடுக்கப்படும் அமெரிக்காவின் அழுத்தம் இந்தியாவுக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க முடியாது. ஜியோவைப் பாதிக்காமல் அதற்கு சாதகமான இந்த விலக்கத்துக்கு மோடி அரசு பெரிதும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியமுமில்லை. இந்த நிலையில் 2019இல் 5ஜி தொழில்நுட்பத்தைப் பரிட்சார்த்த முறையில் செயல்படுத்த அனுமதிக்கப்படும் நிறுவனங்களின் பட்டியலில் ஹோவாவெய் இடம்பெறவில்லை. சீனா தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தது. இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஹோவாவெய் நிறுவனத்தை அனுமதிக்க சொல்லி கடிதம் எழுதின. 2019 டிசம்பர் இறுதியில் அரசு இறுதியாக அனுமதி வழங்கியது. 5ஜி கண்காட்சி ஒன்றில் பங்கேற்ற ஏர்டெல் நிறுவன அதிபர் மிட்டல், தான் பயன்படுத்திய சாதனங்களிலேயே ஹோவாவெய் நிறுவனத்தின் சாதனங்களே சிறப்பானவை எனப் புகழ்ந்து தனது சார்பை வெளிப்படுத்தினார். இதன்பிறகு வந்த கொரோனா பெரும்தொற்று காலத்தில் இந்தியாவின் அரசியல் பொருளாதாரப் பாதை பெரும் மாற்றம் கண்டது.

எல்லை பிரச்சினையா? சந்தை பிரச்சினையா?

சீனாவும் உலக நாடுகளும் மும்முரமாக கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டியபோது, சீனாவின் மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தி அரசியல் செய்வதில் முழுமூச்சாகச் செயல்பட்டது. இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதைத் தாண்டி இந்திய சில்லறை விற்பனை சந்தையை யார் கட்டுப்படுத்துவது என்பதே முக்கியமானதாக இருந்தது. எந்த காரணமும் இன்றி 2019 ஏப்ரல் மாதத்தில் சீன முதலீடுகளை இந்தியா தடுத்து நிறுத்தியது. அமெரிக்க முதலீடுகளை மட்டும் அனுமதித்தது. இதுவரையிலும் பெயரளவில் இருந்துவந்த இந்தியாவின் சார்பற்ற வெளியுறவுக்கொள்கை முழுமையாக அமெரிக்க சார்புநிலை எடுத்தது. கொரோனா பரவல் தீவிரம் அடைந்து சந்தையைக் கைப்பற்றும் போட்டி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது யாரும் எதிர்பார்க்காத விதமாக இந்திய எல்லையில் இந்திய - சீன ராணுவ வீரர்களிடையே மோதல் வெடித்தது.

“வரலாறு காணாத பதிலடி” – செயலிகள் தடை

இதற்கு முன்பு சீன அதிபர் 100 பில்லியன் அளவுக்கு முதலீடுகளைச் செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா வந்தபோது இதேபோன்ற சம்பவம் நடைபெற்றது. பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு அவர் நாடு திரும்ப வேண்டி வந்தது இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போதைய அத்துமீறல் குறித்து இரு நாடுகளும் மாறிமாறி குற்றம்சாட்டிக்கொண்ட அதேவேளை இருவருமே பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றே சொன்னார்கள். ஆனால், எல்லை பிரச்சினை நீருபூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டே இருந்தது. ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்தும்போது பிரச்சினையைத் தீர்க்க வழிமுறைகளைப் பேசுவதும், மறுபுறம் சவடால் அடித்து பிரச்சினையை வளர்ப்பதுமாக தொடர்ந்து வந்தது. அரசின் இந்த இரட்டைத்தன்மை இருவேறு நலன்களை முன்னெடுக்கும் அதிகார மையங்கள் அங்கே வேலை செய்ததையே காட்டியது. இதை எல்லாவற்றையும்விட யாரும் நினைத்து பார்க்காத வகையில் சீன நிறுவனங்களின் செயலிகளை தடை செய்யும் விநோத பதிலடி நடவடிக்கைகளை இந்தியா கொடுக்க ஆரம்பித்தது. முதலில் 59 செயலிகளையும் பின்பு 47 செயலிகளையும் அரசு பாதுகாப்பு காரணங்களைக் காட்டி தடை செய்தது.

ஹோவாவெய் வெளியேற்றம்

2019 ஜூன் 16இல் நடைபெற்ற இந்த மோதலுக்குப் பிறகு ஜூன் 24 அன்று ஹோவாவெய்க்கு எதிரான அலை உலகெங்கும் எழுந்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு செயலர் போம்பேயோ கூறினார். ஜூன் 30 அன்று ஹோவாவெய் உள்ளிட்ட சீன நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி சாதனங்களை விற்க தடை செய்யப்படலாம் எனச் செய்திகள் வெளியாகின. இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீன நிறுவனங்களின் செயலிகளை இதே பாதுகாப்பு காரணங்களைக் கூறி அமெரிக்காவில் தடை செய்ய ஆரம்பித்தார்கள். எல்லை பிரச்சினை தீராமல் தொடர்ந்து பேசப்பட்டு, இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதான மனநிலை இந்திய மக்கள் மனதில் உருவாக்கப்பட்டது. இந்த நிலையிலேயே அமெரிக்க - இந்திய பாதுகாப்பு மற்றும் உளவு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா அதிகாரபூர்வமாக அமெரிக்க அணியாக ஆனது.

யாரை பாதுகாக்க ஒப்பந்தம்?

இந்திய ஊடகங்களும், சமூக ஊடகங்களிலும் இதை இந்தியாவின் மாபெரும் வெற்றியாக எடுத்துரைத்து நாளைக்கே இந்திய ஏவுகணை அமெரிக்கா தரும் துல்லிய வரைபடங்களை கொண்டு சீனாவின் மீது பாயப்போவதை போன்று ஆரவாரித்தார்கள். நாட்டுக்குள் புகுந்த ஒருவனை எதிர்க்க எதற்கு இன்னொருவனை நாட்டுக்குள் விடுகிறீர்கள் என்று யாரும் கேட்க துணியாத சூழல் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இது இந்தியாவைக் காக்கும் ஒப்பந்தமா இல்லை, கொரோனா காலத்தில் இந்தியாவுக்குள் நுழைந்த அமெரிக்க முதலீடுகளையும், தொழில்நுட்பங்களையும் காக்கும் ஒப்பந்தமா என்று யாருக்கும் சிந்திக்க இடமளிக்கப்படவில்லை. சீன நிறுவனங்களின் பொருட்களை வாங்குவது தேசவிரோதம் எனும் அளவுக்கு நிலை மாறியது.

சீன நிறுவனங்கள் வெளியேற்றம்

சீன முதலீட்டில் இயங்கும் பேடிஎம் செயலியை கூகுள் தனது மென்பொருள் வழியாக தரவிறக்கம் செய்ய சில விதிகளைக் காட்டி தடை செய்தது. அதைப் பயன்படுத்தும் வணிகர்கள் ஊடகங்களில் புகார் தெரிவித்தாலும் பெரிதாகப் பொதுவெளியில் கொண்டுவந்து அழுத்தம் கொடுக்க முடியாத நிலை. இந்த நிலையில் ஏர்டெல் உள்ளிட்ட தகவல்தொடர்பு நிறுவனங்கள் சீன நிறுவனங்களைத் தவிர்ப்பதை தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டன. இந்தியத் தகவல் தொடர்பு சாதனங்களுக்கான சந்தையும், வணிகம் செய்வதற்கான வாய்ப்பும் முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ள நிலையில் பேடிஎம் மற்றும் பிக்பேஸ்கட் ஆகியவற்றில் இட்டுள்ள முதலீடுகளை அலிபாபா திரும்ப பெறப்போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

வீழ்த்தப்பட்ட ஏர்டெல் வோடாஃபோன்

ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் நிறுவனங்கள் இப்போது 10% முதல் 15% வரை அதிகம் செலவு செய்து மற்ற எரிக்சன் அல்லது சாம்சங் நிறுவனத்தின் விலையுயர்ந்த 5ஜி சாதனங்களை வாங்கியே வேகமான 5ஜி இணைய சேவையை வழங்க வேண்டும். ஜியோவின் வருகையால் நட்டத்தை சந்தித்து வரும் இந்த நிறுவனங்களுக்கு இது மேலும் பின்னடைவை ஏற்படுத்தும். ஏற்கனவே சாம்சங் நிறுவனத்தின் 4ஜி சாதனங்களைப் பயன்படுத்தும் ஜியோவுக்கு ஒப்பீட்டளவில் இது வலுவான இடத்தையும், எல்லோரையும் முந்திக்கொண்டு வேகமான 5ஜி சேவையை அறிமுகப்படுத்தி அதிக வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் வாய்ப்பையும் வழங்கி இருக்கிறது. தமது மென்பொருள் மற்றும் தொழில்நுட்பப் போட்டியாளனான சீனாவை அமெரிக்க நிறுவனங்களும், உள்நாட்டு தொலைத்தொடர்பு துறை போட்டியாளர்களை ஜியோவும் வீழ்த்தி வெற்றிவாகை சூடி இருக்கின்றன. ஜியோ + கூகுள் + முகநூல் கூட்டணி தன்னிகரில்லா பலத்தைப் பெற்று இருக்கிறது.

அடுத்து திறன்பேசி சந்தை

அடுத்து இவர்களின் பார்வை சீன நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் திறன்பேசி சந்தையின் மீது விழுந்திருக்கிறது. ஜியோவும் கூகுள் நிறுவனமும் இணைந்து திறன்பேசி உற்பத்தி செய்ய முடிவெடுத்து ஏற்கனவே களமிறங்கி விட்டன. இந்து தேசத்தின் இரு தவப்புதல்வர்களில் ஒருவர் இதில் களமிறங்குகிறார் என்றால் இந்து தேசம் சும்மா இருக்குமா என்ன? இந்த உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு 45,000 கோடி ஊக்கத்தொகை அளித்து உற்சாகப்படுத்தி இருக்கிறது. இந்த ஆண்டு ஜியோ இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு இன்னும் பல சலுகைகளுடன் இது சந்தைக்கு வர இருக்கிறது. சீனா நிறுவனங்களுக்கு இது சரியான போட்டியாக விளங்கும் என்று கணிக்கிறார்கள். இதுவரையிலும் ஜியோ இணையம் வழியாகச் செல்லும் தரவுகளையே அந்நிறுவனம் கைக்கொண்டு வருகிறது. இப்போது இணையம், இணைய சாதனங்கள், கூகுள் தேடுபொறி, முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என எல்லாவற்றின் வழியாகவும் செல்லும் தரவுகள் ஒருமுகப்படுத்தப்படும்.

அடுத்த சந்தைகுறி

இந்தத் தரவுகள் இன்னும் துல்லியமாக வியாபார உத்திகளை வகுக்கவும், எந்த பொருளுக்கு சந்தையில் அதிக கிராக்கி இருக்கிறது, யார் யார் வாங்க விரும்புகிறார்கள், எந்தப் பகுதியில் அதிக தேவை இருக்கிறது என்பதை எல்லாம் கண்டறிந்து அங்கு கடையை திறந்து, அந்த நபரிடம் நேரடியாக விளம்பரம் செய்து விற்று லாபம் பார்ப்பார்கள். இந்தக் கூட்டணியை வெல்லும் கூட்டணி ஒன்று இருக்க முடியுமா? இல்லை, இவர்களை மீறித்தான் யாரும் பொருளை விற்றுவிட முடியுமா? அதுமட்டுமல்ல, எதிர்க்காலத்தில் வரப்போகும் இணையவழி கல்வி, இணையவழி மருத்துவம் ஆகியவற்றுக்கு இந்த தரவுகளின் தொகுப்புதான் மூலதனம். உதாரணமாக, ஒரு நோய்க்கான மருந்தை நவீன முறையில் வடிவமைக்க பல்வேறு பண்புகளைக் கொண்ட மனிதர்களின் தரவுகள் முக்கியம் என்கிறார்கள். அப்படி என்றால் ஜியோ இதில் இறங்க போகிறதா?

அரசும் ஜியோவும் வேறு வேறல்ல

கேள்வியே வேண்டாம். ஏற்கனவே அதற்கான அறிவிப்பை அம்பானியின் மனைவி வெளியிட்டு விட்டார். அப்போது இந்து தேசம்... என இழுக்கவே வேண்டாம். மோடி அவர்கள் ஏற்கனவே சுதந்திர தின உரையில் தேசிய மின்னணு நலவாழ்வு திட்டத்தை (National Digital health Mission) அறிவித்து, மின்னணு அடையாள அட்டை போன்று மின்னணு மருத்துவ அடையாள அட்டை உருவாக்கப்படும் என்றும், அதில் நம்முடைய எல்லா மருத்துவம் சார்ந்த தகவல்களும் சேமிக்கப்படும் என்றும் அறிவித்து இருக்கிறார். அப்படி என்றால் மின்னணு கல்வி...என்கிறீர்களா? இந்திய கல்விக் கொள்கையில் மின்னணு கல்வி குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளது. ஆதலால் கவலைக்கொள்ள வேண்டியதில்லை. இதில் இன்னும் ஒன்று மட்டும்தான் குறை. ஜியோ + கூகுள் சேர்ந்து உருவாக்கும் திறன்பேசிக்கான சந்தைக்கும், இந்த மின்னணு கல்வி மற்றும் மருத்துவத்துக்கு அடிப்படையான திறன்பேசிகளின் பயன்பாட்டை அதிகரிக்கவும் இந்து தேசம் எதுவும் செய்யாமல் இருக்கிறது.

திறன்பேசி வாங்க பணம் சேருங்கள்!

அதற்கும் ஒரு வழி இருக்கிறது. நாட்டில் 35 கோடி பேர் இன்னும் அடிப்படையான 2ஜி அலைபேசிகளையே பயன்படுத்துகிறார்கள். அந்த 2ஜி பயன்பாட்டையே இந்தியாவில் நிறுத்திவிட்டால்? இவர்கள் வேறு வழியின்றி அத்தனை பேரும் திறன்பேசிகளை வாங்கியே ஆக வேண்டும். இப்படி நிறுவனங்களின் தேவைக்கு வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தி வதைப்பது சரியா என்று யார் கேட்க போகிறார்கள். சொந்த பணத்தை காகிதமாக்கி தெருவில் நிறுத்தியபோது கூட பெரிதாகக் கேள்வி எழுப்பவில்லை. இதற்கு எல்லாம் யார் அலட்டிக்கொள்ள போகிறார்கள். இப்படை செய்வதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஜியோ ஆரம்பிக்கும்போதே 3G சேவையில்தான் ஆரம்பித்தது. இந்த 2ஜி சேவையை ஏர்டெல் வோடாஃபோன் நிறுவனங்களே வழங்குகின்றன.

ஏர்டெல்லின் பதிலடி

தற்போது 2ஜி சேவையை நிறுத்துவது யாருக்கு நன்மை பயக்கும் என்று அவர்களுக்கு தெரியாதது அல்ல. அம்பானி இந்த வருடமே 2ஜி சேவையை நிறுத்தலாம் என்கிறார். மிட்டல் இன்னும் 2-3 ஆண்டுகள் ஆகும் என்கிறார். இந்த நாட்கடத்தலுக்கு காரணம் இல்லாமல் இல்லை. சீன நிறுவனங்களை வெளியேற்றி விட்டதால் அவரால் தற்போதைக்கு 5ஜி சேவையை வழங்க இயலாது. அவர் விலை உயர்ந்த மற்ற நிறுவனங்களின் சாதனங்களுக்கு பதிலாக இங்கிலாந்தின் ஒன்வெப் எனும் செயற்கைக்கோள் வழி இணையம் வழங்கும் நிறுவனத்தை வாங்கி இருக்கிறார். இதன் வழியான இணையம் வழங்குதல் என்பது செலவு பிடிக்கக்கூடியது. ஆனால் இந்தியா போன்ற பறந்த நிலப்பரப்பில் காடு, மலை என எல்லா இடங்களிலும், மக்கள் அடர்த்தி குறைவான இடங்களிலும் தங்குதடையின்றி இணையத்தை வழங்க முடியும். தற்போதைய தொழில்நுட்பத்துடன் இந்த செயற்கைக்கோள்வழி இணையமும் சேர்ந்த கூட்டு தொழில்நுட்பம் வலிமை அவரின் சந்தையை வலுபடுத்தும் எனக் கணக்கிடலாம். கூடவே எதிர்வரும் அரசியல் மாற்றங்களையும் அவர் கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கலாம். இந்த போட்டியின் முடிவைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சீன நிறுவனங்களை வெளியேற்றி, இணையப் போட்டியாளர்களை பலகீனமாக்கி, முறைசாரா பொருளாதாரத்தின் வர்த்தக சந்தையை அமேசான், வால்மார்ட், ஜியோ ஆகியவை பிரித்துக்கொண்டு தத்தமது பலகீனங்களை பலப்படுத்தியாகிவிட்டது. அடுத்து ஏற்கனவே சந்தையில் இருக்கும் உள்ளூர் வியாபாரிகளை என்ன செய்வது?

அடுத்த கட்டுரையில் பார்ப்போம்

தகவலுக்கான இணைப்புகள்

1. Who Sabotaged Chinese President Xi Jinping’s India Visit?

https://www.forbes.com/sites/ericrmeyer/2014/09/23/who-sabotaged-xi-jinpings-india-visit/?sh=5469e2a170fa

20 Indian soldiers killed in clash with PLA

2. https://asiatimes.com/2020/06/20-indian-soldiers-killed-in-clash-with-pla/

After Pompeo says ‘tide is turning against Huawei,’ India reportedly weighs 5G ban on Chinese firm

https://www.cnbc.com/2020/06/30/india-reportedly-weighs-5g-ban-on-huawei-amid-tensions-with-china.html

3. Reliance Jio-Google smartphone deal threatens Chinese phone makers

https://www.livemint.com/technology/tech-news/reliance-jio-google-smartphone-deal-threatens-chinese-phone-makers-11595245659433.html

4. India Shortlists 16 Firms For Incentives To Boost Electronics Manufacturing

https://www.bloombergquint.com/law-and-policy/india-shortlists-16-firms-for-incentives-to-boost-electronics-manufacturing

5. RIL AGM: Isha Ambani says, “JioHealthHub will offer end-to-end digital healthcare service”

https://techgraph.co/apps/ril-agm-isha-ambani-says-jiohealthhub-will-offer-end-to-end-digital-healthcare-service/

6. PM Modi announces launch of National Digital Health Mission

https://economictimes.indiatimes.com/industry/healthcare/biotech/healthcare/pm-modi-announces-launch-of-national-digital-health-mission/articleshow/77560108.cms

7. India’s Bharti Airtel and UK buy satellite firm

https://asiatimes.com/2020/07/indias-bharti-airtel-and-uk-buy-satellite-firm/

கட்டுரையாளர் குறிப்பு

பாஸ்கர் செல்வராஜ், தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு [email protected]

முந்தைய பகுதிகள்

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

செவ்வாய் 12 ஜன 2021