மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 12 ஜன 2021

கோவையில் மூன்று தொகுதிகளைக் குறிவைக்கும் பாஜக!

கோவையில் மூன்று தொகுதிகளைக் குறிவைக்கும் பாஜக!

பொதுக்குழுவும் கூடிக்கலைந்து விட்டது. ஆனால், அதிமுக கூட்டணியில் எந்தெந்தக் கட்சிகள் இருக்கிறதென்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் எப்படியும் அதிமுக கூட்டணியில்தான் இருப்போம் என்ற நம்பிக்கையில், பாஜகவைச் சேர்ந்த பலரும் சீட் வாங்கியே ஆக வேண்டுமென்று கங்கணம் கட்டி களத்தில் குதித்திருக்கிறார்கள்.

இப்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில், கொங்கு மண்டலத்தில்தான் அதிமுக பலமாக இருக்கிறது என்று பாஜகவினர் அளவுகடந்த நம்பிக்கையில் இருக்கின்றனர். ஏற்கெனவே கோவையில் பாஜகட்சிக்குக் கொஞ்சம் செல்வாக்கு இருக்கிறது. இந்து அமைப்புகளும் அங்கு சற்று பலத்துடன் உள்ளன. அதனால் கோவையில் சீட் வாங்கினால் உறுதியாக ஜெயித்துவிடலாம் என்று நம்புகிறார்கள்.

அந்த வகையில் மூன்று தொகுதிகளை பாஜகட்சியினர் குறி வைத்திருப்பதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தகவல் கூறுகின்றனர். ஐபிஎஸ் பணியை உதறித்தள்ளிவிட்டு பாஜகட்சியில் ஐக்கியமாகியுள்ள அண்ணாமலை, கடந்த சில மாதங்களாக கொங்கு மண்டலப் பகுதிகளையே சுற்றிச் சுற்றி வந்து தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

அவர், கிணத்துக்கடவு தொகுதியைக் குறிவைத்திருப்பதாகச் சொல்லும் அவருடைய ஆதரவாளர்கள், அங்கே நின்றால் கண்டிப்பாக ஜெயித்துவிடுவார் என்றும் நம்பிக்கையோடு பேசுகிறார்கள். அவருக்கு நெருக்கமான பாஜக நிர்வாகி ஒருவர், ‘‘கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ. எட்டிமடை சண்முகம் மீது பொதுமக்களுக்குக் கடும் அதிருப்தி இருக்கிறது. அதனால் அவருக்குக் கண்டிப்பாக மீண்டும் சீட் தரமாட்டார்கள். முன்னாள் அமைச்சர் தாமோதரனுக்கும் சீட் தரவாய்ப்பில்லை. கோவை மாவட்டத்தில் இரண்டு அல்லது மூன்று தொகுதிகள், எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்படும். அதில் கிணத்துக்கடவில் அண்ணாமலை நிற்பது உறுதி. அவரை எதிர்த்து திமுகவில் யாரை நிறுத்தினாலும் நிச்சயம் தோற்கடிப்போம்’’ என்று கூறினார்.

அதேபோன்று, பாஜக தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வானதி சீனிவாசனும் சென்ற முறை நின்ற அதே கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அந்தத் தேர்தலில் பாஜக தனித்து நின்றபோதே, வானதிக்கு 33,113 வாக்குகள் கிடைத்திருந்தன. மூன்றாவது இடத்தை அவர் பிடித்திருந்தார். அதிமுக வேட்பாளர் அர்ஜுனன், 59,788 வாக்குகள் வாங்கி ஜெயித்தார்.

இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கு நின்றால் அசால்ட்டாக ஜெயித்து விடலாம் என்று வானதி சீனிவாசன் ஆதரவாளர்கள் கணக்குப் போட்டுள்ளனர். ஆனால் அந்த தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ ஆக இருக்கும் அம்மன் அர்ஜுனன், அதிமுகவின் மாநகர் மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார். வேலுமணியின் தீவிர ஆதரவாளர் என்பதால் அவருடைய வாய்ப்பு பறிக்கப்படுமா என்பது சந்தேகமே.

இவர்களைத் தவிர்த்து, கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு பாஜகட்சியின் மாநிலச் செயலாளர் செல்வக்குமார், தீவிர முயற்சியில் இருக்கிறார். அதற்காக கட்சியின் அகில இந்தியத் தலைமையில் வெயிட்டான ஒரு தலைவரைப் பிடித்து, இபிஎஸ், ஓபிஎஸ், வேலுமணி ஆகியோருக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக பாஜகட்சி கோவை வட்டாரங்களில் தகவல்கள் ஓடுகின்றன.

அந்தத் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ ஆக இருக்கும் அருண்குமார், ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். நம்பிக்கைத் தீர்மானத்தன்று அதில் பங்கேற்காமல் கூவத்துாரில் இருந்து வெளியேறி, சொந்த ஊருக்குப் போனவர். அவருக்கு இந்த முறை கவுண்டம்பாளையம் தொகுதியைக் கொடுப்பதாகத்தான் முதலில் கூறப்பட்டது. திமுக சார்பில் அங்கு நிறுத்தப்படவுள்ள பையாக்கவுண்டர் இந்த முறை ஜெயித்தே ஆகவேண்டுமென்ற வெறியில் இருப்பதால் பயங்கரமாகச் செலவு செய்வார் என்று பேசப்படுகிறது. அதனால் அங்கு நின்றால் ஜெயிப்பது கஷ்டமென்று அவர் கோவை வடக்கிலேயே மீண்டும் போட்டியிடுவதற்குத் திட்டமிட்டிருப்பதாக அதிமுக கோவை வட்டாரங்கள் கூறுகின்றன.

கோவை வடக்குத் தொகுதியில் வேலுமணியின் தீவிர ஆதரவாளரும், நமது அம்மா பத்திரிகையின் வெளியீட்டாளருமான இன்ஜினீயர் சந்திரசேகர் அல்லது அவருடைய மனைவி சர்மிளா அங்கு நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக கட்சிக்காரர்கள் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த முறை அவருக்கு சீட் இல்லையென்று கட்சித்தலைமை சொல்லிவிட்டதாக அவருடைய ஆதரவாளர்கள் புலம்புகின்றனர். இவர்கள் இருவருக்குமே இல்லாமல் செல்வக்குமார் தட்டிப்போகவும் வாய்ப்பு அதிகமிருக்கிறது.

நடக்கப்போகிற சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது சட்டமன்றத்தில் 10 எம்.எல்.ஏக்களையாவது பாஜக சார்பில் அனுப்ப வேண்டுமென்பது அந்தக் கட்சியின் தலைமை வகுத்துள்ள திட்டமாக இருக்கிறது. கோவையில் இந்த மூன்று சீட்களும் கிடைத்தால் கண்டிப்பாக ஜெயிக்கலாம் என்றும் அக்கட்சியினர் நம்புகின்றனர். இதனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் யார் யாருக்கு வாய்ப்பு பறிபோகுமென்பதுதான் இப்போது ஆளும்கட்சி வட்டாரத்தில் அடிக்கடி விவாதிக்கப்படுகிற விஷயமாக மாறியுள்ளது.

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

செவ்வாய் 12 ஜன 2021