மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 11 ஜன 2021

சிறப்புக் கட்டுரை: அமெரிக்கா, இந்தியா, தமிழகம்: முற்போக்கு அரசியலும், எதிர்புரட்சியும்

சிறப்புக் கட்டுரை:  அமெரிக்கா, இந்தியா, தமிழகம்: முற்போக்கு அரசியலும், எதிர்புரட்சியும்

ராஜன் குறை

பொதுவாக தேர்தல் அரசியல் சமரச அரசியல். அதில் எல்லா கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இவற்றால் பெரியதொரு மாற்றம் எதுவும் வந்துவிடாது என்பது பொதுப்புத்தியில் ஊறிய ஒரு அம்சம்.

“மாத்தறோம், எல்லாத்தையும் மாத்தறோம்” என்று ரஜினிகாந்த் பஞ்ச் டயலாக் பேசியது இதன் வெளிப்பாடுதான். என்ன வியப்பென்றால் இந்த பொதுப்புத்தி மனநிலை பல்வேறு தரப்பினரிடமும் வெளிப்படும் என்பதுதான். சமூக சீர்திருத்த இயக்கங்கள், தீவிரவாத, புரட்சிவாத குழுக்கள், கலை இலக்கியவாதிகள், அதிதீவிர சிந்தனையாளர்கள், ஏன் பல மரபுவாத சிந்தனையாளர்கள் கூட இத்தகைய அவநம்பிக்கையை, தேர்தல் அரசியல் நிராகரிப்பை வெளிப்படுத்துவார்கள்.

நான் எழுபதுகளில் பள்ளி, கல்லூரிகளில் படித்தபோது பல பார்ப்பன முதியவர்கள் ராணுவ ஆட்சிதான் இந்த நாட்டுக்கு சரிப்படும் என்று சொல்லக் கேட்டுள்ளேன். இந்திரா காந்தி நெருக்கடி நிலை அறிவித்து அடிப்படை உரிமைகளை பறித்ததையும் கூட ரயில்கள் குறித்த நேரத்தில் ஓடுகின்றன என்று சிலர் வரவேற்றதும் என் நினைவில் இருக்கிறது.

அமெரிக்காவில் நியூயார்க்கிலும், இந்திய தலைநகர் டெல்லியிலும், தமிழக தலைநகர் சென்னையிலும் இந்த குரல் பலவிதங்களில் ஒலிப்பதைக் கேட்டிருக்கிறேன். அமெரிக்காவில் ஒருவர் டிரம்ப்பின் ரிபப்ளிகன் கட்சி மோசமானது என்று கூறுவார். ஆனால் அதற்கும் டெமாக்ரடிக் கட்சிக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பார். இரண்டிற்கும் மேலோட்டமான வித்தியாசம்தான்; இரண்டுமே ஏகாதிபத்தியம்தான்; வெள்ளையின ஆதிக்க மனோபாவம்தான்; கார்ப்பரேட் ஆதரவுதான் என்றெல்லாம் வாதங்கள் வைப்பார்.

டில்லியில் ஒருவர் பாரதீய ஜனதா கட்சி பாசிச போக்குள்ளதுதான் என்பார்; ஆனால் காங்கிரசும் மென் இந்துத்துவம்தான்; அவர்களும் கார்ப்பரேட் ஆதரவுதான் என்பார். சென்னையில் ஒருவர் அ.இ.அ.தி.மு.க ஆட்சி சரியில்லை என்பார்: ஆனால் தி.மு.க அதற்கு மாற்றில்லை. இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று காமராஜர் சொன்னார் என்பார். இதனால் தேர்தல் அரசியலே பயனற்றது என்பார். நோட்டாவுக்கு ஓட்டுப்போட்டு தேர்தலையே பயனற்றதாக்கவேண்டும் என்பார். ஓட்டு போடவே போகமாட்டார்.

இவர்களுக்கெல்லாம் சென்ற வாரம் வாஷிங்கடனில் நடந்த டிரம்ப் ஆதரவாளர்களின் வன்முறை வெறியாட்டம் எதையாவது புலனாக்கியதா என்று தெரியவில்லை. ஆனால் அரசியலில் ஆர்வமுள்ளவர்கள் சிந்தித்துப் பயன்பெற பல அம்சங்கள் டொனால்ட் டிரம்ப்பின் எதேச்சதிகார முயற்சியில் அடங்கியுள்ளன.

முக்கியமாக தேர்தல் அரசியலை புரிந்துகொள்வதும், அதில் சரியான தேர்வை மேற்கொள்வதும் எவ்வளவு அவசியம் என்பதை புரிந்துகொள்ள இது அரிய வாய்ப்பு என்று கூறலாம்.

அரசியலமைப்பும், தேர்தலும்

எந்தவொரு நாட்டிலும் மக்களாட்சி என்பது வலுப்பெற்று தேர்தல்கள் மூலம் ஆள்பவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பது என்பது நடக்கத் துவங்கும்போது சமூகத்தில் சமத்துவம் நிலவுவது இல்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வும், ஆண்டான், அடிமை மரபுகளும், இன வேறுபாடுகளும், ஜாதி ஏற்றத்தாழ்வுகளும், பெண்ணடிமைத்தனமும் நிலவுகின்றன. ஆனால் ஒரு நபருக்கு ஒரு ஓட்டு என்று “எல்லோரும் ஓர் நிறை” என்ற தத்துவத்தை தேர்தல் உருவாக்குகிறது. காசில்லாத ஏழைக்கு ஒரு ஓட்டு, கோடீசுவரனுக்கு நூறு ஓட்டு என்று கூறுவதில்லை.

உலகின் பல பகுதிகளில் தேர்தல் முறை உருவானபோது சொத்து வரி கட்டாதவர்களுக்கு ஓட்டில்லை என்ற நிலை இருந்தது. அமெரிக்காவில் கறுப்பர்கள் அடிமைகளாக ஓட்டுரிமை இல்லாமல் இருந்தார்கள். பெண்களுக்கு ஓட்டுரிமை இருக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டில்தான் மேற்கத்திய நாடுகளிலும் பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைத்தது.

ஆனால் சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் 1952-இல் நடந்தபோதே வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்பது நடைமுறைக்கு வந்துவிட்டது. இன்றைய உலகில் மக்களாட்சி என்பது வயது வந்தோர் அனைவரும் வாக்களிக்கும் தேர்தல்கள் மூலம்தான் நடைபெறுகிறது.

இதனால் என்ன நிகழ்கிறது என்றால் சமூகத்தில் வேரூன்றிய ஆதிக்க சக்திகள் மற்றும் முதலீட்டிய நலன்களுக்கும், தேர்தலின் மூலம் அதிகாரம் பெறும் எளிய மக்கள் சக்திகளுக்கும் இடையே ஒரு முரண்பாடு தோன்றுகிறது. ஆதிக்க சக்திகள் தங்கள் ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து முயல்கின்றன. அவர்கள் ஆதிக்கத்திலிருந்து விடுபட நினைக்கும் சாமானிய மக்கள் தேர்தலை பயன்படுத்தி அதிகாரம் பெற முயல்கிறார்கள்.

ஒவ்வொரு ஆட்சியிலும், ஏன் ஒவ்வொரு அரசியல் கட்சிக்குள்ளும் இந்த முரண்பாடு செயல்படுகிறது. ஒரு தொகுதியில் ஆதிக்க ஜாதியை சேர்ந்தவர், ஒடுக்கப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் வேட்பாளர் ஆவதை விரும்பமாட்டார். அல்லது தன் சொல்பேச்சு கேட்பவர் வேட்பாளராகவேண்டும் என்று நினைப்பார். செல்வந்தர்கள் அவர்களுக்கு அனுசரணையாக இருப்பவர்கள் வேட்பாளர்களாக, மந்திரிகளாகவேண்டும் என்று நினைப்பார்கள்.

வேட்பாளர்கள் பணக்காரர்களை, தொழிலதிபர்களை அனுசரித்தாலும், தங்களுக்கு வாக்களிக்கும் மக்களின் வாழ்க்கை மேம்பட எதாவது செய்துதான் ஆகவேண்டும் என நினைப்பார்கள்.

இதையெல்லாம் மனதில் வைத்துதான், தன் குறுகிய ஆட்சிக்காலத்தில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி ஆட்சியிழந்த சமூக நீதி நாயகன் வி.பி.சிங் “அரசியல் என்பது முரண்களை சமன்செய்யும் கலை” (Politics is the art of balancing contradictions) என்று கூறினார். அந்த வகையில் தேர்தல் அரசியல் என்பது கருத்தொப்புமைகளை (consensus) உருவாக்குவதன் மூலம் மெள்ள, மெள்ள சமூக நீதியை வலுப்படுத்தி ஏற்றத்தாழ்வுகளை சமன்செய்யும் முயற்சிதான்.

இதற்கு எதிர்திசையில் முதலீட்டிய உற்பத்திமுறை தொடர்ந்து முதலீட்டிய குவிப்பை செய்து ஏற்றத்தாழ்வை அதிகரிக்கிறது. தேசிய அரசுகளை முதலீட்டிய குவிப்பிற்கு ஆதரவாக நடக்க நிர்ப்பந்திக்கின்றது

சுருக்கமாக சொன்னால் பாரம்பர்யமான ஆதிக்க சக்திகளின் இரும்புப் பிடி; முதலீட்டிய உற்பத்தி முறை தொடர்ந்து உருவாக்கும் ஏற்றத்தாழ்வு ஆகிய இரண்டையும் சமன்செய்து சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை காத்து, உரிமைகளை, சுதந்திரத்தை காத்து, அவர்கள் வாழ்வை மேம்படச் செய்யும் சவாலை தேர்தல் அரசியலில் ஈடுபடும் கட்சிகள் சந்திக்கின்றன.

முற்போக்கும், எதிர்புரட்சியும்

சமூக மாற்றம், சமத்துவம் நோக்கிய முற்போக்கு பயணத்தின் விசை ஒருபுறமும். ஆதிக்க சக்திகளின் ஏற்றத்தாழ்வு (status quo) காக்கும், முதலீட்டிய சக்திகளின் உழைப்பை சுரண்டும் விசை மற்றொருபுறமும் இழுக்க புயலில் சிக்கிய மரக்கலமாகத்தான் மானுட அரசியல் வரலாறு விளங்குகிறது. வெகுஜன அரசியலில் இந்த முரண்பட்ட விசைகள் முழுமையாக தெளிவாக பிரிந்து இரண்டு கட்சிகளாக ஒருபோதும் மோதாது. மாறாக எல்லா அரசியல் கட்சிகளும் இந்த விசைகளை சமன்படுத்திக் கொண்டுதான் பயணம் செய்ய முடியும். ஆனால் தேர்தல் அரசியலின் போக்கில் ஒரு தரப்பு முற்போக்கு பயணத்திற்கு அதிகம் இடமளிப்பதாகவும், மற்றொரு தரப்பு ஆதிக்க சக்திகளுக்கு அதிக இடமளிப்பதாகவும் மாறுவதை காண முடிகிறது.

அமெரிக்க அரசியலில் அதுதான் நடந்துள்ளது. கிருஸ்துவ அடிப்படைவாதம், வெள்ளை இனவெறி ஆகியவற்றை அரசியலுக்கு பயன்படுத்த ரிபப்ளிகன் கட்சி முன்வந்தது. இந்தப் போக்கு செல்வந்தர்களுக்கு ஆதரவான கொள்கைகளை மேற்கொள்ள வசதியாக இருப்பதை புரிந்துகொண்டது. அதாவது எண்ணிக்கையில் குறைந்த செல்வந்தர்கள் நலன்களுக்கு ஆதரவாக இயங்க, பெருவாரி மக்களை மத அடிப்படைவாதம், இனவெறி அடிப்படையில் திரட்டிக் கொள்கிறது. இதுதான் எதிர்புரட்சி என்று நாம் அழைப்பது.

இதற்கு மாற்றாக டெமாக்ரடிக் கட்சி முற்போக்கான வரிவிதிப்புக் கொள்கை, கலாசார பன்மைத்துவம், மக்கள் நல அரசு என்று முயற்சிக்கிறது. ஒவ்வொரு கட்சியிலும் பல்வேறு போக்குகளும், தலைவர்களும் இருந்தாலும் விரிவான வரலாற்றுப் பார்வையில் சித்தாந்த முரண் என்பது இப்படியாக உருவெடுப்பதை காண முடிகிறது.

ரிபப்ளிகன் கட்சியில் ஓபாமா போன்ற கறுப்பின மனிதர் அதிபராவது சாத்தியமேயில்லை என்றால், டொனால்ட் டிரம்ப் போன்ற மன நோயாளியான ஒரு பெரும் பணக்காரர் டெமாக்ரடிக் கட்சியில் தலைமைக்கு வர வாய்ப்பேயில்லை என்பது நிதர்சனம். மேலும் ரிபப்ளிகன் கட்சி டிரம்பிசம் என்பதிலிருந்து தப்பிக்க முடியுமா என்பதே கேள்வியாக இருக்கிறது. இதற்கு மேலும் ஒருவர் அமெரிக்காவில் நடுநிலை என்று பேசினால் நகைப்பிற்கு உரியதாகத்தான் இருக்கும்.

இந்திய அரசியலில் முற்போக்கும், எதிர்புரட்சியும்

இந்திய அரசியலில் முற்போக்கு என்பது பாரம்பரியமான பார்ப்பன-பனியா ஆதிக்கத்தை தளர்த்துவது; கார்ப்பரேட் நலன்களுக்கு மக்கள் நலன்களை முற்றிலும் பலிகொடுக்காமல் இருப்பது; இந்த இரண்டையும் சாத்தியமாக்க அதிகாரத்தை ஒன்றிய அரசிடம் குவிக்காமல், மாநிலங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது. சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கருத்தியல் கலவையாக இருந்தது. சுதந்திரத்திற்குப் பின் நேருவிடம் இருந்த சோசலிச நோக்கு, இந்திரா காந்தியிடம் வலுவடைந்தது.

அதன் பின் ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் ஆகியோர் ஆட்சியில் உலக முதலீட்டியத்தின் எழுச்சிக்கு கட்டுப்பட்டாலும் MNREGA என்ற நூறு நாள் வேலை திட்டத்தை காங்கிரஸ் அறிமுகம் செய்ததை மறந்துவிட முடியாது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா இந்து நாடாக மாறி, பார்ப்பனீய மீட்புவாதம் எழுச்சி பெறுவதை காங்கிரஸ் தடுத்து நிறுத்தியது என்பதையும் மறுக்க முடியாது.

மக்களாட்சி அரசியல் மாநிலங்களிலேயே மையம் கொள்ளும் என்பதை காங்கிரஸ் புரிந்துகொள்ள தவறியதால் பலவீனமடைந்தது. அதை பயன்படுத்திக்கொண்டு ஒரு எதிர்புரட்சி சக்தியாக மத அடையாளவாதம், பார்ப்பனீய மீட்புவாதம், பெருமுதலீட்டிய நலன்கள் ஆகியவற்றை இணைத்துக்கொண்டு பாரதீய ஜனதா கட்சி இந்திய அரசியலை ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகிறது.

இந்த வரலாற்று முரணை புரிந்துகொள்ளாமல் ராகுல் காந்தி கோயிலுக்கு போகலாமா, ராமர் கோயிலை எதிர்க்க வேண்டாமா என்றெல்லாம் பேசுவதும், இரண்டு கட்சியும் ஒன்றுதான் என்பதும் பாசிசத்திற்கு வெண்சாமரம் வீசும் பணி என்பதை புரிந்துகொள்ளாவிட்டால் மக்களாட்சி என்னவாகும் என்பதை நினைத்தும் பார்க்க முடியாது.

அமெரிக்காவின் பொருளாதார வளத்தினால் வலுவான குடிமை சமூகமாவது இருக்கிறது. இந்தியாவில் அதிகாரப் பகிர்விற்கு தேர்தல் ஒன்றே வழி.

தமிழகத்தில் முற்போக்கும், எதிர்புரட்சியும்

இந்திய வரலாற்றிலேயே பார்ப்பனீய, ஜாதீய கருத்தியல் மேலாதிக்கத்திற்கு எதிராக திராவிட கருத்தியலை முன்வைத்து வெற்றிகரமாக தேர்தல் அரசியலில் வென்று சாமானியர்களின் ஆட்சியை சாத்தியமாக்கியது திராவிட முன்னேற்ற கழகம். அதன் முக்கிய வெளிப்பாடாக மாநில சுயாட்சி கோரிக்கையையும் முன்னெடுத்தது. அந்த முற்போக்கு பயணத்தினை தேக்குவதற்கு உருவாக்கப்பட்ட எதிர்புரட்சி சக்திதான் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.

இந்த வேறுபாட்டை புரிந்துகொள்ள ஜெயலலிதா போன்ற பார்ப்பன சமூகத்தை சேர்ந்த, பார்ப்பனீய சாய்வு கொண்ட ஒருவர் திராவிட முன்னேற்ற கழகத்தில் தலைவராவது சாத்தியமா என்பதை யோசித்தால் போதும். பிறப்படையாளம் என்பதால் அல்ல; ஜெயலலிதா கரசேவைக்கு செங்கல் அனுப்பியதும், மதமாற்ற தடை சட்டம் கொண்டுவந்ததும் தி.மு.க-வில் சாத்தியமா என்பதையும் சிந்திக்கவேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால் தேர்தலில் வெகுஜன மனோநிலையுடன் பயணிக்க வேண்டிய கட்சிகள் எல்லாம் முற்றிலும் தீவிர நிலைபாடுகளை எடுக்காது. சமரசங்கள் இருக்கும். கருத்தொப்புமையை முயற்சிக்கும். அவற்றின் அணுகுமுறைகளும் பல சமயம் பொதுவானதாக இருக்கும். வளர்ச்சி அரசியல் பேசுவது, தேர்தலில் வெல்லும் வழிமுறைகள், தலைமட்ட தலைவர்கள் கட்சி மாறுவது, ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுவது ஆகியவற்றால் மேற்பார்வைக்கு எல்லா கட்சிகளும் ஒன்றுபோல இருக்கும்.

ஆனால் துல்லியமாக வரலாற்றை ஆராய்ந்தால் முற்போக்கு ஆற்றல் ஒரு புறமும், எதிர்புரட்சி சக்தி மறுபுறமும் திரள்வதைக் காணலாம். அந்த வித்தியாசத்தை புரிந்துகொண்டு வாக்களித்தால்தான் தேர்தல்களின் மூலம் வரலாற்றை வழிநடத்த முடியும்.

கட்டுரையாளர் குறிப்பு

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: [email protected]

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

திங்கள் 11 ஜன 2021