மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 10 ஜன 2021

சசிகலா பின்னால் செல்பவர்கள் யார்? எடப்பாடி புது உத்தரவு!

சசிகலா பின்னால் செல்பவர்கள் யார்? எடப்பாடி புது உத்தரவு!

அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜனவரி 9 ஆம் தேதி வானகரத்தில் நடந்து முடிந்த நிலையில்... அன்று மாலையே தலைமைக் கழகத்தில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்குபெற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஜனவரி 9ஆம் தேதி மாலை 7.30 மணிக்கு மேல் தொடங்கிய இந்த கூட்டம் இரவு 10 மணி வரை நீடித்தது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது...

"பொதுக்குழு கூட்டம் நடந்த அன்று மாலையே இப்படி ஒரு ஆலோசனை கூட்டம் நடத்துவது வழக்கம் இல்லை. ஆனால், பொதுக்குழு கூட்டத்தில் வெளிப்படையாக விவாதிக்க முடியாத சில விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்பதால்தான், தலைமை கழகத்தில் விவாதித்துக் கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூறிவிட்டனர். அந்த அடிப்படையில்தான் இந்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

சசிகலா விடுதலை, கட்சியில் தாக்கம் ஏற்படுத்துமா என்பது குறித்தும் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கலாம் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் பேசும்போது, 'சசிகலா விடுதலையாகி வெளியே வந்தாலும் அவரோடு யாரும் செல்லப் போவதில்லை. என்னை எதிரியாக நினைத்து கொண்டிருக்கும் சிலர் வேண்டுமானால் டெல்டா மாவட்டங்களில் இருந்து அவர் பக்கம் போகலாம். மற்றபடி யாரும் அங்கே செல்ல வாய்ப்பில்லை' என்று கூறினார்.

அமைச்சர் தங்கமணி பேசுகையில், ‘அந்த அம்மா வெளியே வந்தாலும் நிம்மதியாக இருக்க முடியாது. ஏனென்றால் அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வழக்குகளும், சட்டரீதியான வாய்ப்புகளும் இருக்கின்றன. எனவே அவர் விடுதலை அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யாரும் ஏமாற வேண்டாம்' என்று பேசினார்.

அமைச்சர் ஜெயக்குமார் இந்த கூட்டத்தில் பேசும்போது, 'டிடிவி தினகரன் பின்னாலும் இப்போது யாருமில்லை. சசிகலாவின் பின்னாலும் யாரும் இருக்கப் போவதில்லை’ என்று குறிப்பிட்டார்.

இவற்றையெல்லாம் பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டிருந்தார்கள். எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது...'சிலர் விடுதலையாகி வருவார்கள். அவர்கள் பின்னே செல்லலாமென சிலருக்கு சபலம் தட்டலாம்.அப்படிப்பட்டவர்களை நம்முடைய மாவட்டச் செயலாளர்கள் அடையாளம் கண்டு கண்காணிக்க வேண்டும்'என்று உத்தரவிட்டுள்ளார்.

பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கலாம், அதிமுக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது குறித்த ஒரு பட்டியலை மாவட்டச் செயலாளர்கள் தயாரித்து விரைவில் அளிக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலாளர்கள் அளிக்கும் பட்டியலும், ஏற்கனவே ஒவ்வொரு மாவட்டத்தை பற்றி உளவுத்துறை அளித்துள்ள பட்டியலும் ஒப்பீடு செய்யப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி தனியாக எடுத்த சர்வேயில் கிடைத்த பட்டியலும் கருத்தில் கொள்ளப்பட்டு அதனடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் முடிவெடுக்கப்படும்" என்கிறார்கள்.

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

ஞாயிறு 10 ஜன 2021