மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 10 ஜன 2021

வள்ளுவர் கோட்டத்தில் திரண்ட ரசிகர்கள்: தனியறையில் ரஜினி

வள்ளுவர் கோட்டத்தில் திரண்ட ரசிகர்கள்: தனியறையில் ரஜினி

”என்னை மன்னித்துவிடுங்கள்...நான் அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை” என்று நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி அறிவித்துவிட்ட நிலையில்... ஏறத்தாழ இரு வாரங்களுக்குப் பிறகு இன்று (ஜனவரி 10) ரஜினி ரசிகர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரண்டு ரஜினியை அரசியலுக்கு வரச் சொல்லி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா நெறிமுறைகள் எதுவும் இல்லாமல், வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்திருக்கிறார்கள். ரஜினி தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என்று பெயர் மாற்றிப் பதிவு செய்துவிட்ட நிலையில் ரஜினி ரசிகர்கள் என்ற பொதுவான பெயரில்தான் இந்த போராட்டம் நடந்து வருகிறது. சென்னை மாநகர போலீஸிடமும் ரஜினி ரசிகர் மன்றம் என்ற பெயரில்தான் இந்த போராட்டத்துக்கு அனுமதி வாங்கப்பட்டிருக்கிறது.

வா தலைவா வா... என்ற முழக்கங்களும், அரசியலுக்கு வாங்க என்ற முழக்கங்களும் என்று காலை முதலே வள்ளுவர் கோட்டத்தில் கேட்டுக் கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே இதுபோன்ற போராட்டங்களுக்கும் ரஜினி மக்கள் மன்றத்துக்கும் தொடர்பில்லை என்று மன்ற நிர்வாகி சுதாகர் அறிவித்துவிட்ட பின்னரும் காவல்துறை அனுமதியோடு போராட்டம் நடப்பது ரஜினி மக்கள் மன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற போராட்டங்கள் ரஜினிக்கே தெரியாது என்று சொல்கிறார்கள் சில நிர்வாகிகள்.

“ ரஜினி உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில்.... அவருக்கு மருத்துவர்கள் சில முக்கிய கட்டளைகளைப் பிறப்பித்துள்ளனர். அதாவது ரஜினியின் ரத்த அழுத்தத்தை உயர்த்துகிற அளவுக்கு தகவல்கள், செய்திகள் அவருக்கு பரிமாறப்படக் கூடாது. அதனால் ரஜினி கொஞ்ச நாளைக்கு அரசியல் ரீதியான விவாதங்கள், செய்திகள் இவற்றை தொலைக்காட்சிகளிலும், செய்தித் தாள்களிலும் பார்க்காமல் இருப்பது நல்லது. ஒருவேளை தொலைக்காட்சிகளில் ரஜினியின் அரசியல் முடிவு பற்றி சிலர் விமர்சிக்கலாம். கேலி செய்யலாம், சமூக தளங்களில் விமர்சிக்கலாம். இதையெல்லாம் பார்த்தால் ரஜினியின் ரத்த அழுத்தம் மீண்டும் ஏறிட வாய்ப்புள்ளது. எனவே அவரை அரசியல் சார்ந்த செய்திகள் அடையா வண்ணம் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் ரஜினிக்கு மருத்துவர்கள் விதித்திருக்கும் நிபந்தனை.

அதனால் ரஜினி தனியறையில்தான் இருக்கிறார். தனக்குப் பிடித்த கலை விஷயங்களை ரசிக்கிறார். அரசியல் நண்பர்கள் அல்லாத நெருங்கிய நண்பர்களிடம் பேசுகிறார். அவரோடு தினமும் உறவினர்கள் வந்து அளவளாவிச் செல்கிறார்கள். இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் வள்ளுவர் கோட்டத்தில் நடத்தும் போராட்டம் பற்றி அவருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்காது”என்று கூறுகிறார்கள்.

ஆனால் வள்ளுவர் கோட்டத்தில் ரஜினியை அரசியலுக்கு வரச் சொல்லி போராட்டம் நடத்தி வருபவர்களில் ஒருவரான விழுப்புரம் இப்ராஹிடம் பேசியபோது.

“நாங்கள் ரஜினி ரசிகர்கள் விழுப்புரத்தில் இருந்து மட்டும் ஆயிரம் பேர் வந்திருக்கிறோம். எங்கள் நோக்கமெல்லாம் ரஜினி சார் ஆரோக்கியமாக நலமாக இருக்க வேண்டும். அவரால் தமிழ்நாட்டுக்கு விடிவு காலம் பிறக்க வேண்டும் என்பதுதான். இதற்காக அனைத்து மதப் பிரார்த்தனைகள் நடத்தியிருக்கிறோம். தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருக்கிறோம். வள்ளுவர் கோட்டம் இதுவரை பார்க்காத கூட்டமிது. இங்கே நடக்கும் போராட்டம் நிச்சயம் ரஜினி சாருக்குத் தெரியும். எங்கள் உணர்வுகள் நிச்சயம் அவரைச் சென்றடைந்திருக்கும்” என்கிறார்.

விழுப்புரம் இப்ராஹிம் ஏற்கனவே விழுப்புரம் மாவட்ட ரஜினி மன்ற தலைவராக செயல்பட்டார். ரஜினிக்கு மிக நெருக்கமானவர். இளவரசன், ராஜூ மகாலிங்கம் காலத்தில் இவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனபோதும் ரஜினியை அரசியலுக்கு அழைத்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள் போன்ற நிர்வாகிகளை இந்த கூட்டத்தில் பார்க்க முடியவில்லை. ஆனால் மாவட்ட துணை, இணை நிர்வாகிகள் பலரும், ரசிகர்களும் விழுப்புரம் இப்ராஹிம் போல மன்றத்தின் பழைய முக்கியஸ்தர்களும் பெருமளவில் கூடியிருக்கிறார்கள்.

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

ஞாயிறு 10 ஜன 2021