மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 9 ஜன 2021

உள் ஒதுக்கீடும் கூட்டணியும்: அதிமுகவுக்கு கெடு விதிக்கும் பாமக

உள் ஒதுக்கீடும் கூட்டணியும்:  அதிமுகவுக்கு கெடு விதிக்கும் பாமக

பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று (09.01.2021) காலை 11.00 மணியளவில் இணைய வழியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக அரசு வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக கோரிக்கை வைத்துள்ள பாமக, பொங்கலுக்குள் கோரிக்கையை நிறைவேற்றா விட்டால் கூட்டணி தொடர்பாக அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்றார். பா.ம.க. அரசியல் ஆலோசனைக்குழுத் தலைவர் பேராசிரியர் தீரன், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி, சமூக முன்னேற்ற சங்கத் தலைவர் ச. சிவப்பிரகாசம் உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம்தான் அதிமுக அரசுக்கு கெடு விதிக்கிறது.

“ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீடு தானாக கிடைத்துவிடவில்லை. மருத்துவர் ராமதாஸ் தலைமையில் 10 ஆண்டுகளுக்கும் கூடுதலாக தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தியது, காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கும், குண்டாந்தடி தாக்குதலுக்கும் 21 சொந்தங்களை பலி கொடுத்தது, பாளையங்கோட்டை மத்திய சிறை தவிர, தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் மருத்துவர் ராமதாஸ் சிறை தண்டனை அனுபவித்தது, பல்லாயிரக் கணக்கான பாட்டாளி சொந்தங்களும், இளைஞர்களும் வழக்குகளை சந்தித்து, சிறைத் தண்டனை அனுபவித்தது உள்ளிட்ட தியாகங்களால் தான் 20% இட ஒதுக்கீடு சாத்தியமானது. வன்னியர்களுக்கு மட்டுமே பயன்பட வேண்டிய அந்த இட ஒதுக்கீட்டை, இப்போது 115 சாதிகள் அனுபவிக்கின்றன. ஆனால், வன்னியர்கள் தவிர, இந்த சாதிகளில் ஒன்று கூட நாம் நடத்திய இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் கலந்து கொள்ளவோ, ஆதரவளிக்கவோ இல்லை. அதே நேரத்தில் இடஒதுக்கீட்டைப் போராடிப் பெற்ற வன்னியர்களுக்கு அதில் சிறிதளவு கூட கிடைப்பதில்லை.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சமுதாயங்களில் வன்னியர்களுக்கும், பிற சாதிகளுக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைக்கிறது என்பதை வெளியிடுவதற்குக் கூட தமிழக அரசு மறுத்து வருகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி மருத்துவர் அய்யா அவர்கள் எழுப்பிய வினாக்களுக்குக் கூட இதுவரை விடை அளிக்கப்படவில்லை. அந்தத் தகவல்களை வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வைத்தியநாதன் அவர்கள் ஆணையிட்டும் கூட அது மதிக்கப்படவில்லை. சமூகநீதியை நிலை நிறுத்தக்கூடிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 15 உறுப்பினர்களை நியமிக்க முடியும் என்றாலும் கூட, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை.

இத்தகைய சமூக அநீதிகளைப் போக்க வேண்டும்; வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் பாட்டாளி மக்கள் கட்சி -வன்னியர் சங்கம் ஆகியவற்றின் கூட்டுப் பொதுக்குழு கடந்த 22.11.2020 அன்று கூடி தொடர் போராட்டங்களை நடத்தத் தீர்மானித்தது. அதன்படி மொத்தம் 5 கட்ட போராட்டங்கள் 8 நாட்களுக்கு நடத்தப்பட்டுள்ளன. இது குறித்து தமிழக அரசு பேச்சு நடத்த முன்வந்தது. கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி மூத்த அமைச்சர்கள் இருவர் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து மருத்துவர் ராமதாசை சந்தித்து இது குறித்து பேச்சு நடத்தினார்கள். அப்போது வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு அடுத்த ஒரு வாரத்திற்குள் தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கும் என்று ராமதாஸிடம் உறுதியளித்தனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீடு வன்னியர் சங்கம் போராடி, பல தியாகங்களை செய்து பெற்றது என்றாலும், அந்த இட ஒதுக்கீட்டை கடந்த 32 ஆண்டுகளாக அனுபவித்து வரும் பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு கொஞ்சம் கொடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது. அந்த நல்லெண்ணத்துடன் 20% இட ஒதுக்கீட்டில் பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு ஒரு பகுதியையும், வன்னியர்களுக்கு பெரும்பகுதியையும் ஒதுக்கீடு செய்யும் வகையில் தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை சற்று தளர்த்திக் கொண்டு, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் திட்டத்திற்கும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஒப்புதல் அளித்தார்.

அதனடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உரிய உள் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நேற்று (08.01.2021)முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில், ஏ.கே மூர்த்தி, முனைவர் கோ.தன்ராஜ் ஆகியோர் அடங்கிய குழு குழு பேச்சு நடத்தியது. அதன் தொடர்ச்சியாக மூத்த அமைச்சர்கள் குழு நாளை மறுநாள் திங்கள்கிழமை மருத்துவர் ராமதாசை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்துப் பேசுவர் என்று அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்கு 1989ஆம் ஆண்டே தீர்வு காணப்பட்டு இருக்க வேண்டும். அப்போது கலைஞர் அடுக்கடுக்காக செய்த துரோகங்களின் விளைவாக வன்னியர்களுக்கு இன்று வரை உரிய சமூகநீதி கிடைக்கவில்லை. வன்னியர்களுக்குரிய சமூகநீதியை இனியும் அரசு மறுப்பது நியாயமாக இருக்காது. மருத்துவர் ராமதாஸ் தலைமையில் போராடி, எண்ணற்ற தியாகங்களைச் செய்து பெற்ற 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உரிய பங்கு வழங்கப்பட வேண்டும்.

வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த மருத்துவர் அய்யா அவர்கள், இப்போது உள் ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்ளத் தயார் என்று அறிவித்துள்ள நிலையில், அதை பயன்படுத்திக் கொண்டு, வன்னியர்களின் உள் ஒதுக்கீடு கோரிக்கையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் நிறைவேற்ற வேண்டும். இதையே முக்கிய வேண்டுகோளாக தமிழக அரசிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக்குழு முன்வைக்கிறது.

தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்களின் சமூகநீதிக்கான, பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த நியாயமான, எளிய கோரிக்கையை பொங்கலுக்குப் பிறகு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்கு முன்பாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழு கேட்டுக் கொள்கிறது. அவ்வாறு செய்ய தாமதமானால் பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழுவை உடனடியாகக் கூட்டி, அரசியல் ரீதியிலான அடுத்தக்கட்ட முடிவை எடுப்பது” என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

சனி 9 ஜன 2021