மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 9 ஜன 2021

கிரண் பேடிக்கு எதிராகத் தர்ணா: தொடரும் முதல்வரின் போராட்டம்!

கிரண் பேடிக்கு எதிராகத் தர்ணா: தொடரும் முதல்வரின் போராட்டம்!

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியைத் திரும்பப் பெற வலியுறுத்தி முதல்வர் நாராயண சாமி இரண்டாவது நாளாகத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் தேர்தல் நாடகத்துக்காக முதல்வர் போராட்டத்தில் ஈடுபடுவதாக அம்மாநில பாஜக விமர்சித்துள்ளது.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும், முதல்வர் நாராயண சாமிக்கும் அதிகார மோதல் போக்கு நிலவி வருகிறது. கிரண் பேடி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைச் செயல்பட விடாமல் கோப்புகளைத் தடுத்து நிறுத்துவது, மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தத் தடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முதல்வர் குற்றம் சாட்டி 2019ல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதைத்தொடர்ந்தும் கிரண் பேடி அரசின் செயல்பாட்டுக்கு எதிராக இருப்பதாகக் கூறி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தக்  காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அறிவித்தது.  ஆனால் கொரோனா காரணமாக 144 தடைச் சட்டம்  அமலில் இருப்பதால் ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை, தலைமைச் செயலகம், முதல்வர் இல்லம் ஆகிய பகுதிகளில் போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டது.

அதோடு போராட்ட எதிரொலியாக முக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. 400க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆளுநர் மாளிகை  அருகே போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டதால்,   முதல்வர் நாராயண சாமி தலைமையில்,  காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அண்ணா சாலை பகுதியில்  நேற்று தர்ணா போராட்டத்தைத் தொடங்கின.

தொடர்ந்து 4 நாட்களுக்குப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,  நேற்று இரவு முதல்வர் நாராயண சாமி, போராட்ட களத்திலேயே  உணவு எடுத்துக்கொண்டு அங்கேயே படுக்கை அமைத்து உறங்கினார்.அங்கு இரவு சாரல் மழை பெய்தது. மழை மற்றும் குளிரை பொருட்படுத்தாமல் நாராயண சாமி மற்றும் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர்  போராட்ட களத்தில் தூங்கினார்கள். இரண்டாவது நாளாக இன்று போராட்டம் தொடரும் நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு முதல்வர் நாராயணசாமிக்கு ஆதரவு தெரிவித்தார்.  

கிரண் பேடிக்கு எதிரான இந்த போராட்டத்தில் பேசிய முதல்வர் நாராயண சாமி, “மத்திய அரசு புதுச்சேரியைப் புறக்கணிக்கிறது. கிரண் பேடி மாநில வளர்ச்சியைத் தடுக்கிறார்.  அரசு வைக்கும் எந்த கோரிக்கைக்கும் செவி சாய்ப்பதில்லை. நம் நாட்டில் ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களுக்கு எதிராக முதல்வர், அமைச்சர்கள் போராடியது கிடையாது, ஆனால் அப்படி ஒரு சூழலை கிரண் பேடி உருவாக்கிவிட்டார்.

2019ல் போராட்டம் நடத்திய போது தன்வழியாக டெல்லிக்குச் சென்றார் கிரண் பேடி. ஆனால் அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  ஆட்சியாளர்கள் போராட்டம் நடத்தும் சூழலில் டெல்லியில் என்ன வேலை?’ என அவரை திருப்பி அனுப்பினார்.

பின்னர் புதுச்சேரி வந்த கிரண் பேடி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை ஏற்பதாக உறுதியளித்து போராட்டத்தைக் கைவிடச் செய்தார். ஆனால் பேச்சுவார்த்தையில் உறுதி அளித்த எதையுமே அவர் நிறைவேற்றவில்லை. அமைச்சரவையில் முடிவெடுத்து அனுப்பப்படும் கோப்புகளை அவர் கண்டுகொள்வதில்லை” எனக் குற்றம்சாட்டினார்.

மேலும் உயிர்த் தியாகம் செய்தாவது உரிமைகளைக் காப்போம் என்று தெரிவித்த அவர், 4 நாட்கள் அல்ல, எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் போராடத் தயாராக இருக்கிறேன். புதுச்சேரியைத் தமிழகத்துடன் இணைப்பதற்காக மோடியும் பேடியும்  சதி செய்கின்றனர். பிரதமருக்கு ஒரு கோரிக்கை விடுக்கிறேன். கிரண் பேடியைத் திரும்பப் பெறுங்கள். புதுவையின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம். பீரங்கியே வந்தாலும் அஞ்சமாட்டோம்” என்று கூறியுள்ளார்.

சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, “முதல்வர் நாராயணசாமி நான்கு நாட்கள் மட்டுமே இந்த போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். இது நான்கு நாட்கள் இல்லை, தொடர் போராட்டமாக நடைபெறும். எங்களது கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கும் வரை போராட்டம் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் கூறுகையில்,  “ஆளும் அரசு சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டும். ஆனால் போராட்டம் அறிவித்து பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு துணை ராணுவத்தைப் புதுச்சேரிக்கு அனுப்பி வைத்துள்ளது. காங்கிரஸ் போராட்டம் காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நகரம் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளதால் நோயாளிகள், கர்ப்பிணிகளால்  புதுச்சேரி அரசு மருத்துவமனைக்குச் செல்ல முடியவில்லை.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கக் கூடாது என்பதால் தான் நாங்கள் அறிவித்த போராட்டத்தைத் தற்காலிகமாகத் தள்ளி வைத்துள்ளோம். முழுக்க முழுக்கத் தேர்தலுக்கான நாடகத்தை முதல்வர் நாராயணசாமி நடத்தி வருகிறார்” என்று விமர்சித்துள்ளார்.

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

சனி 9 ஜன 2021