fஅமெரிக்க அவமானம்- பொறுப்பாளிகள் யார்?

politics

மு இராமனாதன்

உலகம் நம்பமுடியாமல் பார்த்தது. கேபிடால் கட்டிடம் அமெரிக்காவின் அதிகார மையம். அதுதான் தாக்குதலுக்கு உள்ளானது. பிரதிநிதிகள் அவை என்றழைக்கப்படும் கீழவையும் செனட் என்றழைக்கப்படும் மேலவையும் இங்கிருந்துதான் இயங்குகின்றன. ஜனவரி 6ஆம் தேதி இரண்டு அவைகளின் உறுப்பினர்களும் கூடியிருந்தார்கள். நவம்பர் 3ஆம் தேதி மக்கள் வாக்களித்து விட்டார்கள். டிசம்பர் 16ஆம் தேதி தேர்வர் குழு (electoral college) என்ற மாநிலங்களின் உறுப்பினர்களும் வாக்களித்து விட்டார்கள். இரண்டு தேர்வுகளிலும் ஜோ பைடன் அதிபராகத் தெரிவாகிவிட்டார்.

எனினும் இன்னுமொரு சடங்கு பாக்கியிருந்தது. அதற்குத்தான் புதன்கிழமை, ஜனவரி 6ஆம் நாள் குறிக்கப்பட்டிருந்தது. இரண்டு அவைகளின் உறுப்பினர்களும் தேர்வர் குழுவின் தெரிவை அங்கீகரிக்க வேண்டும். இது சடங்கு என்றுதான் அழைக்கப்பட்டது. மக்களின் தீர்ப்பை, தேர்வர்களின் தெரிவை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதுதான் சம்பிரதாயம். சட்டமானாலும் சம்பிரதாயமானாலும் அவற்றைத் தனக்கு ஏற்றபடி வளைக்கத் தயங்காதவர் அதிபர் டிரம்ப். அவரது கடைசி முயற்சியைத்தான் உலகம் புதன்கிழமை பார்த்தது.

டிரம்ப்பின் ஆதரவாளர்கள் கேபிடால் கட்டிடத்தின் வேலிகளைத் தாண்டினார்கள். சுவரேறிக் குதித்தார்கள். மேசை நாற்காலிகளை தகர்த்தார்கள். சன்னல்களை உடைத்தார்கள். பேரவைக்குள் புகுந்தார்கள். அவைத் தலைவரின் இருக்கைகளில் அமர்ந்தார்கள். தங்கள் வாழ்வின் மறக்க முடியாத இந்த நாளைத் தங்கள் அலைபேசிகளில் பதிவு செய்துகொண்டார்கள். தோட்டாகள் வெடித்தன. கண்ணீர்ப்புகை பரவியது. சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் எல்லாம் நேரலையாகப் பார்க்கக் கிடைத்தது.

**எதிர்பாராமல் நிகழ்ந்தவையா?**

உலகெங்குமுள்ள ஊடகங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் படங்களால் நிறைந்தது. பல படங்களின் கீழ் பல மொழிகளில் “எதிர்பாராதது” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. இப்படியொரு நிகழ்வை அந்நிய ஊடகங்கள் எதிர்பாராமால் இருந்திருக்கலாம். அமெரிக்க ஊடகங்களால் அப்படிச் சொல்லிக்கொள்ள முடியாது. இந்த நாடகத்துக்கான ஒத்திகை நவம்பர் 3ஆம் தேதி இரவே தொடங்கிவிட்டது. அன்று முதல் இந்த நாடகத்தில் டிரம்ப்புடன் பலரும் பங்கேற்றனர்.

நவம்பர் 3ஆம் தேதி இரவு மிகக் குறைவான வாக்குகள் எண்ணப்பட்டிருந்தபோதே, தான் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்தார் டிரம்ப். அந்த வெற்றியுரைக்கு பின்பாட்டுப் பாடியவர் துணை அதிபர் மைக் பென்ஸ்.

வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டன. பைடன் முன்னேறினார். ஆனால் டிரம்ப் ‘நமது வாக்குகளை அவர்கள் களவாடுகிறார்கள்’ என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். அவரது ஆதரவாளர்களில் பலர் மந்திரித்து விட்டவர்களைப் போல் அதைத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தனர். ஊர்வலம் போயினர். கைகலப்பில் ஈடுப்பட்டனர்.

கொரோனாவின் காரணமாக வாக்குகளை அஞ்சலில் வழங்கச் சொல்லி ஊக்குவித்தது பைடனின் ஜனநாயகக் கட்சி. கணிசமான வாக்காளர்கள் அஞ்சலில் வாக்களித்தனர். அவற்றை அங்கீகரிக்கக்கூடாது என்று பேசினார் டிரம்ப்; ஆர்ப்பாட்டம் செய்தனர் ஆதரவாளர்கள். அவரது குடியரசுக் கட்சியினர் டிரம்ப்பின் பேச்சும் செயலும் சட்ட விரோதமானது என்று சொல்லவில்லை.

டிரம்ப்பும் அவரது ஆதரவாளர்களும் பல்வேறு மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக வழக்குத் தொடுத்தனர். எந்த வழக்கிலும் அவர்களால் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க முடியவில்லை. எல்லா வழக்குகளும் தள்ளுபடியாயின. கடைசியாக டிரம்ப் உச்ச நீதிமன்றத்தை நாடினார். இப்போதுள்ள ஒன்பது நீதியரசர்களில் ஆறு பேர் குடியரசுக் கட்சியின் ஆதரவுடன் பொறுப்புக்கு வந்தவர்கள். டிரம்ப் அவர்களை நம்பியிருந்தார். அவர்களாலும் டிரம்ப்பைக் காப்பாற்ற முடியவில்லை. அப்போதும் டிரம்பைக் கண்டிக்கிற துணிச்சல் குடியரசுக் கட்சியினருக்கு வரவில்லை.

**டிரம்ப்பின் தொடர் முயற்சியும் தோல்வியும்**

அமெரிக்காவில் தேர்தலை நடத்துவது ஊராட்சிகளும் மாநில அரசுகளும்தான். மாநில ஆளுநர்கள்தான் ஒவ்வொரு மாநிலத்தின் முடிவுகளையும் சான்றளித்து வெளியிடுபவர்கள். பல மாநிலங்களில் பைடன் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றிருந்தார். அவற்றுள் ஒன்று ஜார்ஜியா. பைடன் அதிகம் பெற்றிருந்தது 11,779 வாக்குகள்தான். ஆகவே ஜார்ஜியா ஆளுநரை தொலைபேசியில் அழைத்தார் டிரம்ப். அவர் குடியரசுக் கட்சிக்காரர். பைடனுக்கு வழங்கப்பட்டிருக்கும் வாக்குகளில் 11,780 வாக்குகளைக் ‘கண்டுபிடித்து’ அவற்றைச் செல்லாமல் ஆக்கிவிட வேண்டுமென்று சொன்னார்.

ஆளுநருடனான அவரது ஒரு மணி நேர உரையாடலின் ஒலிப்பதிவைக் கைப்பற்றி வெளியிட்டது வாஷிங்டன் போஸ்ட். அதில் டிரம்ப் ஆளுநரைப் பாராட்டுகிறார், கெஞ்சுகிறார், அச்சுறுத்துகிறார். ஆனால் ஆளுநர் அசர மறுக்கிறார். உண்மையின் பக்கம்தான் நிற்பேன் என்று சொல்லிவிடுகிறார். ஒலிப்பதிவை ஆளுநரும் மறுக்கவில்லை. அதிபரும் மறுக்கவில்லை. நேரிய வித்தியாசத்தில் பைடன் வென்ற மாநிலங்கள் பலவற்றிலும் டிரம்ப் இந்த முறைகேடான வழியை முயற்சித்திருக்கக்கூடும். ஆனால் இப்போதும் அவரது குடியரசுக் கட்சியினர் பொங்கி எழவில்லை. தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு டிரம்ப்பை வற்புறுத்தவுமில்லை.

டிசம்பர் 16 அன்று தேர்வர் குழு கூடுவதற்கு முன் சில மாநிலங்களின் முடிவுகளையேனும் மாற்றவோ நிறுத்திவைக்கவோ வேண்டும் என்பதுதான் டிரம்ப்பின் முயற்சியாக இருந்தது. அப்படி நடந்தால் தேர்வர் குழுவில் பைடனுக்குப் பெரும்பான்மை கிடைக்காமல் போகும் என்பது டிரம்ப்பின் கணக்கு. அது அப்படி நடக்கவில்லை. தேர்வர் குழு முடிவும் பைடனுக்குச் சாதகமாகவே அமைந்தது. டிரம்ப்பிற்கு யாரும் எந்த அழுத்தத்தையும் தரவில்லை.

இப்போது டிரம்ப் கடைசி இலக்கைக் குறிவைத்தார். ஜனவரி 6 காங்கிரஸ் கூட்டம். முன்னதாக டிசம்பர் 19 அன்று அவர் துரிதரில் வெளியிட்ட செய்தி தெளிவாக இருந்தது: “ஜனவரி 6 அன்று வாஷிங்டனில் பெரும் போராட்டம். அங்கே வந்துவிடு! யுத்தம் கடுமையாக இருக்கும்!”

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகத் தனது கருத்துகளைத் துரிதரில் ஏற்றித்தான் அனுப்புகிறார் டிரம்ப். அவ்வப்போது ‘சர்ச்சைக்குரியது’ என்று முத்திரையிடுவதுடன் தன் பணி முடிந்துவிட்டதாகக் கருதியது துரிதர் நிர்வாகம். இவ்வாறாக அவரது வெறுப்புரையும் பொய்யுரையும் அவரது இலட்சக்கணக்கான ஆதராவளர்களை உடனுக்குடன் சென்றடைய உதவியது துரிதர்.

ஜனவரி 6 நாடகத்தின் உச்சகட்டக் காட்சி தொடங்கியது. வெள்ளை மாளிகைக்கு அருகே இருக்கும் பூங்காவின் பெயர் எலிப்ஸ். அங்கு ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் திரண்டனர். நண்பகலில் பேசினார் டிரம்ப். “நீங்கள் கேபிடாலுக்குச் செல்லுங்கள். நாம் ஒரு போதும் இதைத் தோல்வியென்று ஒப்புக்கொள்ளமாட்டோம். ஏன் ஒப்புக் கொள்ள வேண்டும்? நமது வாக்குகள் களவாடப்பட்டுவிட்டன. அதைக் கேள்வி கேட்போம்”. ஒரு மணி நேரம் பேசினார் டிரம்ப். முடிவில் ஊர்வலம் புறப்பட்டது.

கேபிடால் கட்டிடத்தை அடைந்தது. பலர் கவச உடை அணிந்திருந்தனர். அவர்களது கைகளில் உருட்டுக் கட்டைகளும் கொடிக் கம்புகளும் இருந்தன. டிரம்ப்பின் பெயர் பொறித்த சட்டைகளும் தொப்பிகளும் அணிந்திருந்தனர். இதற்காக அவர்கள் பல நாட்களாக தயாராகி வந்தனர். அவர்களது எல்லா முன்னேற்பாடுகளையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர். ஆனால் அவை எதுவும் கேபிடால் காவலர்களுக்குத் தெரியவில்லை. காவலர்களைவிட அதிகமான எண்ணிக்கையில் இருந்தனர் கலகக்காரர்கள். அவர்கள் காவலர்களைக் கடந்தனர். வேலியை முறித்து, சுவர்களில் ஏறி, வாயில்களை உடைத்து அந்த அதிகார மையத்திற்குள் நுழைந்தனர். அங்கே அவர்களுக்கு ஒரு வேலை இருந்தது. காங்கிரசின் தீர்மானம் நிறைவேறாமல் தடுக்கப்படவேண்டும்.

காங்கிரஸ் உறுப்பினர்களைப் பாதுகாப்பான அறைகளுக்கு அழைத்துச் சென்றனர் காவலர்கள். மாலை 3 மணிக்கு டிரம்ப் துரிதர் வழியாக கலகக்காரர்களை அமைதியாக இருக்குமாறு வேண்டினார். அப்போதும் கட்டிடத்தைவிட்டு வெளியேறுங்கள் என்று சொல்லவில்லை.

மாலை 4 மணியளவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். அதற்கு 15 நிமிடங்களுக்குப் பிறகு டிரம்ப் ஒரு நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டார். “உங்கள் வலியை நான் அறிவேன். நீங்கள் காயம் பட்டிருக்கிறீர்கள். நம்மிடமிருந்து ஒரு தேர்தல் களவாடப்பட்டிருக்கிறது. பரவாயில்லை. நீங்கள் வீடுகளுக்குச் செல்லுங்கள். நான் உங்களை நேசிக்கிறேன். நீங்கள் எனக்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள்.”

இரவு 8 மணிக்கு மேல் காங்கிரஸ் மீண்டும் கூடியது. சிலர் அப்போதும் பைடனின் வெற்றியை ஆட்சேபித்தனர். அவை முறையாகத் தோற்கடிக்கப்பட்டன. அதிகாலை மூன்று மணிக்கு பைடன் அதிபராக அறிவிக்கப்பட்டார். அறிவித்தவர் நான்காண்டு காலமாக டிரம்ப்பின் அதிதீவிர விசுவாசியாக இருந்த துணை அதிபர் மைக் பென்ஸ். இப்போது வன்முறையைக் கண்டிக்கும் குடியரசுக் கட்சியினர் பலரும், கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் முடிவு புரட்டலானது என்று டிரம்ப் பேசி வந்தபோது அதை ஆதரித்தவர்கள், அல்லது கள்ள மௌனம் சாதித்தவர்கள். லிண்ட்சே கிரகாம் அவர்களுள் ஒருவர். கரோலினா மாநில செனட்டர். ஜார்ஜியா ஆளுநரை பைடன் பெற்ற வாக்குகளில் ஒரு பகுதி செல்லாதவை என்று கூறச் சொல்லி நிர்ப்பந்தித்தவர். ஆனால் புதன்கிழமை இரவு மனம் மாறிவிட்டார். அவையில் வன்முறையைக் கண்டித்தார்.

ஜனவரி 20 அன்று பைடன் அதிபராக பதவியேற்பார். அதற்கு முன்பான எல்லாச் சடங்குகளும் நிறைவேறிவிட்டன. அந்தச் சடங்குகளை நிறைவேற்ற விடாமல் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால் அந்த முயற்சிகள் பலரது ஆசீர்வாதத்துடனும் பங்கேற்புடனும்தான் நடத்தப்பட்டன.

அமெரிக்காவிற்கு வெளியேயிருந்தும் உள்ளேயிருந்தும் கண்டனங்கள் குவிகின்றன. முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர், ” இஃதோர் அவமானம். இந்த அமெரிக்கா அல்ல நாம்” என்று சொல்லியிருக்கிறார். உண்மைதான். கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் இந்த வன்முறையைக் கண்டிக்கின்றனர். ஆனால் இப்படியான ஓர் அமெரிக்காவை வளர்த்தெடுத்தவர்களும் இந்த அமெரிக்காவில்தான் இருக்கிறார்கள். அதற்குத் தலைமை தாங்கியவர் இன்னும் இரண்டு வாரங்கள் அந்தப் பதவியில் நீடிப்பார்.

**கட்டுரையாளர் குறிப்பு: (மு.இராமனாதன் ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர். தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *