மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 ஜன 2021

சீட்டு...ஓட்டு...நோட்டு... பாலியல் விவகாரங்களே துருப்புச்சீட்டு!

சீட்டு...ஓட்டு...நோட்டு... பாலியல் விவகாரங்களே துருப்புச்சீட்டு!

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் மீண்டும் பற்றி எரியத் துவங்கிவிட்டது. ஆளும்கட்சி கோட்டையாகக் கருதப்படும் கொங்கு கோட்டையில் ஓட்டை விழவைத்து, 2019ம் ஆண்டில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும்கட்சியின் ஓட்டையும் விழவிடாமல் செய்ததில் இந்த பாலியல் விவகாரத்துக்குப் பெரும் பங்கு இருக்கிறது.

இந்த விவகாரத்தை திமுகவும் சிறப்பாகவே கையாண்டு தேர்தலில் வெற்றியை அறுவடை செய்தது. வழக்கை சிபிஐ எடுத்த பின்பு அந்த விவகாரம் அப்படியே அமுங்கிப் போய்விட்டது. ஆனால் கண்ணுக்கெட்டிய தூரத்தில் சட்டமன்றத் தேர்தல் இருக்கும் நிலையில், இந்த வழக்கில் அதிமுக நிர்வாகி உட்பட 3 பேரை சிபிஐ கைது செய்திருப்பது ஆளும்கட்சியினருக்குக் கண்ணைக் கட்ட வைத்துள்ளது.

சிபிஐ நியாயமாக விசாரணை நடத்துவதால்தான், ஆளும்கட்சி நிர்வாகியும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்; கட்சியை விட்டும் அவர் நீக்கப்பட்டுள்ளார் என்று ஆளும்கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் ஒரு சமாதானம் சொல்லிக் கொள்கின்றனர். ஆனால் இத்தனை மாதங்களாக கிணற்றில் போட்ட கல்லாக இருந்த இந்த வழக்கை, இப்போது எதிர்க்கட்சியினரின் வெற்றிக்கு அடிக்கல்லாக மாற்றுவது போல இந்த கைது நடவடிக்கையை சிபிஐ ஏன் இப்போது எடுத்தது என்ற கேள்விதான் ஆளும்கட்சியினரின் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறது.

இதுபற்றி அதிமுக மாநில நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்...

‘‘ரஜினி கட்சி துவக்கவில்லை என்றதுமே, தமிழகத் தேர்தலுக்கு பிஜேபி போட்டிருந்த பல்வேறு திட்டங்களும் தவிடுபொடியாகிவிட்டன. அதனால் தற்போதுள்ள கூட்டணியிலேயே நீடித்து விடலாம் என்று பிஜேபி தலைமை முடிவு செய்திருக்கிறது. இப்போது அவர்கள் கேட்கும் எண்ணிக்கையில் சீட்டுகளும், அங்கே ஜெயிப்பதற்குத் தேவையான ‘மற்ற’ உதவிகளும் அவர்களுக்கு வேண்டும். அதற்காகத்தான் இப்போது இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

அமைச்சர்களின் மீதான ஊழல் பட்டியலை, ஸ்டாலினிடம் ஆளுநர் மாளிகையிலிருந்தே கேட்டு வாங்கியதாகவே எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அது டெல்லிக்குப் போன பின்பே, மத்திய அரசின் நடவடிக்கைகளில் ஒரு மாற்றம் தெரிகிறது. இப்போது அமைச்சர்களின் ஊழல் விவகாரங்களைத் தோண்டினால் அது ஒட்டு மொத்த கூட்டணிக்கே பாதிப்பை ஏற்படுத்தும். அது திமுக கூட்டணிக்குச் சாதகமாகிவிடும். அதனால்தான் பொள்ளாச்சி விவகாரத்தில் ஆளும்கட்சி பெயரை இழுத்து விட்டு, அதை துருப்புச் சீட்டாக வைத்து சீட்டு பேரம் பேச முயற்சி நடக்கிறது. இதுவும் திமுக கூட்டணிக்கே சாதகமாகிவிடும் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.’’ என்றார்.

அதிமுக நிர்வாகிகள் எழுப்பும் இந்த சந்தேகங்கள் பற்றி பிஜேபி மாநில நிர்வாகி ஒருவரிடமும் பேசினோம்...

‘‘பொள்ளாச்சி பாலியல் விவகாரத்திற்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. அதில் அதிமுக நிர்வாகிகள் சிலருக்கும், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் சிலருக்கும் உண்மையிலேயே தொடர்பு இருப்பதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது. இப்போது இந்த நடவடிக்கையை எடுக்காவிடினும் தேர்தல் நேரத்தில் திமுக அதை வைத்து அரசியல் செய்வதற்கு நிறையவே வாய்ப்புண்டு. அதற்குப் பதிலாக அதில் தொடர்புடைய நிர்வாகிகளைக் கைது செய்து, கட்சியிலிருந்து நீக்கி விட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும்!’’ என்றார்.

இந்த வழக்கை உன்னிப்பாகக் கவனித்து வரும் முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர் நம்மிடம், ‘‘பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அதிமுக நிர்வாகியைக் கைது செய்ததில் அதிமுக தலைமை கடுமையான அப்செட்டில் இருக்கிறது. அருப்புக்கோட்டை கல்லுாரி விவகாரத்தைத் தோண்டி, பிஜேபி பிரதிநிதியாக இங்கு இருக்கும் விவிஐபிக்கு செக் வைத்து பிஜேபிக்கு பதிலடி கொடுக்கலாமா என்று ஒரு ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு முன்பே, தற்போது பொறுப்பிலுள்ள விவிஐபியை மாற்றிவிட்டு, ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரை அந்தப் பொறுப்புக்குக் கொண்டு வரலாமா என்ற யோசனையில் பிஜேபி தலைமை இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. தேர்தலுக்கு முன்னால் இந்த இரண்டு பாலியல் விவகாரங்களும் அரசியலில் முக்கியமான துருப்புச்சீட்டாக மாறுவது உறுதி!’’ என்றார்.

அரசியலில் ஆயிரம் மாற்றங்கள் நடக்கலாம். தேர்தலில் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் தோற்கலாம். ஆனால் அப்பாவிப் பெண்களையும், கல்லுாரி மாணவிகளையும் மிரட்டி வாழ்க்கையைச் சீரழித்த கயவாளி யாருமே தப்பிவிடக்கூடாது என்பதே தமிழக மக்களின் ஒரே எதிர்பார்ப்பு.

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

வெள்ளி 8 ஜன 2021