மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 ஜன 2021

நான் ரெடி, நீங்கள் ரெடியா?: எடப்பாடியின் சவாலை ஏற்ற ஸ்டாலின்

நான் ரெடி, நீங்கள் ரெடியா?: எடப்பாடியின் சவாலை ஏற்ற ஸ்டாலின்

முதல்வருடன் விவாதம் செய்ய தான் தயாராக இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன் மீதும் அமைச்சர்கள் மீதும் ஆளுநரிடம் ஸ்டாலின் அளித்துள்ள ஊழல் புகார்கள் பற்றி கருத்து தெரிவித்தார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சிதான் என குற்றம்சாட்டிய முதல்வர், அதிமுக ஆட்சியில் ஊழல் எங்கே நடந்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விவாதத்துக்கு நான் தயாராகவே இருக்கிறேன். ஸ்டாலின் துண்டு சீட்டு எதுவும் இல்லாமல் விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டும் என சவால் விடுத்தார்.

இதற்கு பதிலளித்து இன்று (ஜனவரி 7) அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், இந்தியாவிலேயே ஊழலுக்காக சிறைக்குப் போன முதல்வரைக் கொண்ட கட்சி, ஊழலுக்காக முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட, என்றும் மாறாத ஊழல் கறை படிந்த கட்சி அதிமுகதான். அந்தக் கட்சியின் சார்பில் முதல்வராக இருக்கும் பழனிசாமியும் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் தான். அது பற்றி எந்தக் கூச்சமும் இல்லாமல், நான் ஊழலே செய்யவில்லை' என முழுப் பூசணிக்காயை அவர் இலைச் சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார் என விமர்சித்தார்.

அதிமுக ஆட்சியில் குட்கா, எல்இடி, கட்டுமானப் பணிகள் உள்ளிட்டவற்றில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், இந்தியாவிலேயே ஓட்டுக்குப் பணம் கொடுத்த ஊழலில் மாட்டிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என்று சாடினார்.

திமுகவினர் மீது நில அபகரிப்புப் புகார் என்று ஒரு பொய்யை திரும்பத் திரும்ப பேசி வருகிறார் பழனிச்சாமி. இந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சிதானே இருந்தது? ஏன் சென்ற நான்கு வருடங்களாக முதல்வராக பழனிச்சாமிதானே இருந்தார். எத்தனை தி.மு.க.வினர் மீது நில அபகரிப்பு வழக்கில் தண்டனை வாங்கிக் கொடுத்தார் எனவும் கேட்டுள்ளார்.

மேலும், “ ‘வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவித்ததாக என் மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகாருக்கும் நானே அனுமதி தருகிறேன். விசாரணைக்கு உத்தரவிடுங்கள்’ என்று தமிழக ஆளுநர் அவர்களுக்குக் கடிதம் இன்றைக்கே எழுதுங்கள். அடுத்த நிமிடமே விவாதத்திற்கு தேதி குறியுங்கள், எந்த இடம் என்று சொல்லுங்கள். அந்த இடத்திற்கு நான் மட்டும் வருகிறேன். உங்கள் தரப்பில் நீங்களும் உங்கள் அமைச்சரவை சகாக்கள் அனைவரும் வாருங்கள். முடிந்தால் ஓ. பன்னீர்செல்வம் அவர்களையும் அழைத்து வாருங்கள்” என்று அழைப்பு விடுத்த ஸ்டாலின்,

ஊழல் பற்றி விவாதிப்போம். அரசு கஜானாவில் பத்தாண்டு கால ஆட்சியில்- குறிப்பாக நான்காண்டு கால உங்களது ஆட்சியில் எப்படி கொள்ளையடித்து சுரண்டி உள்ளீர்கள் என்ன கமிஷன் வாங்கி உள்ளீர்கள், என்ன கலெக்‌ஷன் செய்துள்ளீர்கள், எப்படிப்பட்ட கரெப்ஷன் செய்துள்ளீர்கள் என்பதை கிழித்துத் தோரணமாக தொங்க விடுகிறேன். நான் ரெடி, முதலமைச்சர் மிஸ்டர் பழனிச்சாமி நீங்கள் ரெடியா? என சவால் விடுத்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

வியாழன் 7 ஜன 2021