மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 ஜன 2021

முஸ்லிம்களுக்கு 16 தொகுதிகள்: கோரிக்கைக்கு ஸ்டாலின் பதில் என்ன?

முஸ்லிம்களுக்கு 16 தொகுதிகள்:   கோரிக்கைக்கு ஸ்டாலின் பதில் என்ன?

திமுகவின் சிறுபான்மையினர் நல பிரிவு இதயங்களை இணைப்போம் நல்லாட்சியை மலரச் செய்வோமென்ற கருத்தரங்கத்தை நேற்று (ஜனவரி 6) நடத்தியது.

இதில் பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டனர்.

பேசிய மமக தலைவர் ஜவாஹிருல்லா, “முதல்வர் எடப்பாடி வேளாங்கண்ணிக்கு செல்கிறார், நாகூர் தர்காவுக்கு செல்கிறார். முஸ்லிம் பிரமுகர்களை சந்திக்கிறார். ஆனால் குடியுரிமை சட்டம் வந்தபோது அவர் எங்கே சென்றார்? இந்தியாவில் மேற்கு வங்காளத்தைத் தவிர தென்னகத்தில் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து சிஏஏவுக்கு எதிராக பேரணி நடத்தியது மு.க.ஸ்டாலின்தான்.

காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லிம் மந்திரிகள் கிடையாது. அண்ணா கூறியபிறகுதான் அப்துல் மஜீத் அமைச்சராக பதவியேற்றார். முஸ்லிம்களுக்கு அமைச்சர்கள் மட்டுமல்ல அவர்களுக்கு இட ஒதுக்கீடும் அளித்தது திமுக. அதையும் ஏனோதானோ என்று தராமல் ரொம்பப் பாதுகாப்பாக தந்தார். திமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு என செய்யப்பட்ட உருது அகாடமி இன்று செயலிழந்து நிற்கிறது.

சட்டமன்றத் தேர்தல் வரும்போது எந்த சலனமும் இல்லாமல் சிறுபான்மை மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து மக்களும் ஆதரிக்க வேண்டிய அணி திமுக அணி. வரும் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களை திமுக கூட்டணிக்கு கிடைக்கச் செய்து எதிர்க்கட்சி வரிசையில் யாருமே இல்லையென்ற நிலையை உருவாக்கப் பாடுபடுவோம்” என்று கூறினார்.

இந்திய தேசிய லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் பேசும்போது, “முஸ்லிம் சமுதாய மக்களுக்கு குறைந்தது 15 இடங்களாவது வேண்டும் என்று கடந்த தேர்தலின் போது கோரிக்கை விடுத்தேன். ஆனால் அப்போது தமிழகத்தில் 16 தொகுதிகளைத் தந்தார். இதுதான் நடந்தது. வரக் கூடிய தேர்தலில் இதை விட அதிக இடங்களைக் கொடுப்பார் ஸ்டாலின் என்று நான் நம்புகிறேன். அப்படிப்பட்ட தாராள உள்ளத்தைப் பெற்றவர் ஸ்டாலின்.

நான் உடல் நலம் நலிவுற்றிருந்தபோது என்னை சந்தித்த பலரில் உளவுத்துறை அதிகாரிகளும் உண்டு. அவர்கள்,’வரும் தேர்தலில் திமுக கூட்டணிதான் அதிக இடங்களில் வெற்றிபெறும். அதனால் அதிக இடங்களைக் கேட்டுப் பெறுங்கள்’ என்று கூறினார்கள்" என்று பேசினார். .

நிறைவாக திமுக தலைவர் ஸ்டாலின் பேசும்போது, “கலைஞர் அவர்கள் முந்தைய தேர்தலில் ஒதுக்கிய இடங்களைச் சுட்டிக்காட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் முகைதீன் அவர்கள், வெளிப்படையாகவே சுட்டிக்காட்டி, என்னிடம் உள்ள உரிமையின் காரணமாக கேட்டார். இடம் குறித்துக் கவலை கொள்ள வேண்டாம். நாம் ஆட்சியமைக்கப் போகிறோம். அதுதான் முக்கியம்.

இந்த கூட்டத்தைப் பார்க்கும் போது இது சிறுபான்மையினர் அணி நடத்தும் நிகழ்ச்சி போல இல்லை. பெரும்பான்மை மக்கள் அனைவரும் சேர்ந்து நடத்தும் நிகழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

அனைத்து மதங்களின் ஒற்றுமையில்தான் மக்களின் ஒற்றுமை அடங்கி இருக்கிறது. மக்களின் ஒற்றுமையில்தான் மதங்களின் ஒற்றுமையும் அடங்கி இருக்கிறது. அனைத்து மதங்களும் அன்பைப் போதிப்பதற்காக உருவாக்கப்பட்டவை என்றால் அதற்குள் பிளவுசக்திகள், பிரிவினை சக்திகள் செயல்படுவது அந்தந்த மதங்களுக்கே விரோதமான கொள்கை என்பதை உணர்ந்தவர்கள் இந்த மேடையில் கூடியிருக்கிறோம்.. இந்தக் கூட்டத்தின் வாயிலாக இதயங்கள் இணைந்துவிட்டது என்பதை நீங்கள் சுட்டிக் காட்டிவிட்டீர்கள். தமிழர்களாக நாம் ஒன்றுபட்டோம். இப்படித் தமிழர்களாக ஒன்று படுவதற்கு யாருடைய இறைநம்பிக்கையும் தடையாக இருந்ததில்லை. இறைநம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. அதனால் தான், தந்தை பெரியார் அவர்கள், 'பக்தி என்பது தனிச்சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து' என்று சொன்னார்கள்.

'பக்திப் பிரச்சாரம் நாடு முழுவதும் நடக்கட்டும், பகுத்தறிவுப் பிரச்சாரமும் நாடு முழுவதும் தொடரட்டும்' - என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள். இரண்டு பிரச்சாரமும் கருத்து விவாதமாக இருக்கலாமே தவிர- கைகலப்பு மோதலாக மாறிவிடக் கூடாது என்பதில் திராவிட இயக்கம் தெளிவாக இருந்தது. அதனால் தான் பெரியார் மண்ணில் எந்தக் கோவிலுக்கும் எந்த சேதாரமும் ஏற்பட்டது இல்லை ஆனால் இன்றைக்கு பக்தியை வியாபாரப் பொருளாக, அதுவும் அரசியல் வியாபாரப் பொருளாக ஆக்குவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு, சொல்வதற்கு சாதனைகளோ, கொள்கையோ இல்லாததால் மக்களின் ஆன்மிக உணர்வைத் தூண்டிவிட்டுக் குளிர்காய நினைக்கிறார்கள்.

அரசியலுக்கும் ஆன்மிகத்துக்குமான வேறுபாட்டை நன்கு உணர்ந்தவர்கள் தமிழக மக்கள். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. அரசியல் என்பது மக்களின் உரிமை சார்ந்தது. ஆன்மிகம் என்பது மனம் சார்ந்தது. இந்த இரண்டையும் ஒன்றாகச் சேர்ந்து குழப்பவும் முடியாது. இரண்டையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து ஏமாற்றவும் முடியாது. இது தமிழக அரசியல் களத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மை” என்று பேசினார் ஸ்டாலின்.

மேலும் அவர், “பாஜக அரசுக்கு ஜனநாயகத்தைப் பற்றியோ, சமத்துவம் பற்றியோ, சகோதரத்துவம் பற்றியோ, மதநல்லிணக்கம் பற்றியோ கவலை இல்லை. இத்தகைய பாஜக அரசுக்கு தலையாட்டும் பொம்மை அரசாக இருக்கிறது அ.தி.மு.க. அரசு! காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானமா? அ.தி.மு.க. ஆதரிக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டமா? அ.தி.மு.க. ஆதரிக்கிறது. முத்தலாக் சட்டமா? அ.தி.மு.க. ஆதரிக்கிறது.

.1999 ஆம் ஆண்டு சென்னை கடற்கரையில் நடந்த கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, 'என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்தது தான். அதற்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இனி பாஜகவுடன் கூட்டணி வைக்கவே மாட்டேன்' என்று சொன்னார். இது பழனிசாமிக்குத் தெரியுமா? ஜெயலலிதாவின் இந்தக் கனவை பழனிசாமி காப்பாற்றுவாரா?”என்று கேட்ட ஸ்டாலின் தொடர்ந்து,

“இங்கே காதர் மொய்தீன் அவர்கள் 7 இடங்களில் மட்டும் அவர்களுக்கு வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வந்தது எனச் சொன்னார் அதைக்கூட விடக்கூடாது. நாம் தயாராக இருப்பதை விட மக்கள் அதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் இன்றைக்கு இருக்கும் உண்மையான நிலவரம். அதன்படி நாம் வெற்றி பெற அனைவரும் ஒன்றுபடுவோம் ஒன்றுபடுவோம். அதற்காகத்தான் இதயங்களை இணைப்போம் என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சியையும் நடத்தி இருக்கிறார்கள்”என்று முடித்தார்.

-ஆரா

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

வியாழன் 7 ஜன 2021