மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 ஜன 2021

அழகிரி -ஸ்டாலின்: உள்ளுக்குள் நடக்கும் உண்மைகள்!

அழகிரி -ஸ்டாலின்:  உள்ளுக்குள் நடக்கும் உண்மைகள்!

திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மு க அழகிரி ஜனவரி 3 ஆம் தேதி மதுரையில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஆனால், ‘நான் என்ன முடிவெடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று அந்தக் கூட்டத்தில் பேசியிருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சஸ்பென்சை உண்டாக்கியிருக்கிறது.

கடந்த தீபாவளி அன்று காலை தனது ஆதரவாளர்கள் பலருக்கும் போன் செய்த முக அழகிரி... "இன்னும் சில வாரங்களில் நாம செயல்வீரர்கள் கூட்டம் நடத்தணும். அதற்கான ஏற்பாடுகள்ல இறங்குங்க"என்று சொன்னதை அடுத்து நீண்ட நாட்களாக அரசியல் செய்ய முடியாமல் வெம்பி கிடந்த அழகிரி ஆதரவாளர்கள் வெடித்து கிளம்பினார்கள்.

அழகிரி நடத்தும் ஆலோசனைக் கூட்டம் என்றதும் வழக்கம்போல அவர் கலைஞர் திமுக என்ற பெயரில் கட்சி தொடங்கப் போகிறார் என்று தகவல்கள் பறந்தன. ஆனாலும் செய்தியாளர்களை சந்தித்தபோது ஆலோசனை கூட்டத்தில் தான் முடிவு செய்வேன் என்றும் பாஜகவில் சேரப் போவதாக சொல்வது காமெடி என்றும் தெரிவித்து வந்தார் அழகிரி.

தான் திமுகவில் மீண்டும் சேரவேண்டும், தன்னோடு தனது மகன் துரை தயாநிதிக்கும் கட்சியில் ஒரு பதவி வேண்டும் என்பதும்தான் அழகிரியின் ஒற்றை விருப்பமாகவும் நிபந்தனையாகவும் இருந்தது. இதுகுறித்தெல்லாம் செல்வி, செல்வம் உள்ளிட்டோருடன் பேசிய அழகிரி, ‘நான் ஸ்டாலினோடு கூட பேசத் தயார். ஆனால் நான் போன் போட்டாலே அவர் எடுக்க மாட்டார்’என்றும் சொல்லியிருக்கிறார்.

ஸ்டாலின் தரப்பினரோ, ‘அழகிரியை மீண்டும் திமுகவுக்குள் சேர்த்தால் அவர் தனது பாணியிலான தனி கோஷ்டி அரசியலை மேற்கொள்வார். அது கட்சிக்கே ஆபத்தாகிவிடும். அதனால் அவரை உள்ளே சேர்ப்பது பற்றிய சிந்தனையே எப்போதைக்கும் இல்லை’என்று அழகிரிக்காக பேசியவர்களிடம் தெரிவித்துவிட்டனர். இதனால் குடும்பத்தினரும் ஸ்டாலினிடம் அழுத்தம் கொடுக்கவில்லை.

இந்த நிலையில்தான் ஜனவரி 3 ஆம் தேதி மதுரையில் ஆலோசனை கூட்டம் என்ற முடிவு எடுப்பதற்கு முன்பு டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் முழுதாய் ஒரு வாரம் சென்னையில் தங்கியிருந்தார் அழகிரி. வழக்கமாக தான் சென்னையில் இருக்கும்போது தொடர்பு கொள்ளும் தனது ஆதரவாளர்கள் எவரையும் தவிர்த்து தன் அரசியல் ரீதியான செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டு சென்னையில் இருந்தார் அழகிரி. அதையும் மீறி தன்னைத் தொடர்புகொண்டவர்களை, ‘பேரப் பிள்ளைங்க பொறந்தநாளுக்கு வந்திருக்கேன். இப்ப யாரும் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்கையா’ என்று கறாராக சொல்லிவிட்டார்.

ஆனால் சென்னையில் தங்கியிருந்த அந்த ஒரு வாரத்தில் அழகிரி அரசியல் ரீதியாகவும் சிலரை சந்தித்திருக்கிறார். ஆனால் அவர் யார் யாரை சந்தித்தார் என்பது அழகிரியின் நெருக்கமானவர்களுக்குக் கூட தெரியவில்லை. அதன் பிறகே மதுரை புறப்பட்டார். அப்போது கூட அவருக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்துவதா வேண்டாமா என்ற ‘டைலாமோ’ இருந்தது. ஆனால் அவரது மகன் துரை தயாநிதிதான், ‘அப்பா இன்னும் நாம சும்மா இருந்தோம்னா நமக்கு அரசியல்ல எதுவுமே இல்லைனு நமக்கு எதிராவே நடவடிக்கை எடுக்கவும் ஆரம்பிப்பாங்க.அதனால நாம நம்ம வெயிட்டைக் காட்டணும்’ என்று தொடர்ந்து சொல்லியிருக்கிறார். சென்னை சந்திப்புகள், மகனின் அழுத்தம் ஆகியவற்றின் அடிப்படையிலே ஜனவரி 3 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் என்றும் அறிவித்தார் அழகிரி.

அழகிரியின் ஆலோசனைக் கூட்டம் என்றதும் பல மாவட்டங்களில் இருந்தும் படையணிவகுப்பாய் புறப்பட்டனர் அவரது ஆதரவாளர்கள். துவாராகா ஹோட்டலில் ஆலோசனைக் கூட்டம் என்றாலும் அது ஆலோசனைக் கூட்டம் போலவே இல்லை. மண்டபத்துக்குள்ளும் ஆயிரக்கணக்கானோர் புகுந்துவிட்டனர். வெளியேயும் ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர். ‘கட்சி ஆரம்பிங்கண்ணே’என்று பலரும் ஆலோசனை சொன்ன நிலையில்தான் அந்த எக்சைட் நிலையில் கூட்டத்தில் ஸ்டாலினை சரமாரியாக வறுத்தெடுத்துவிட்டார் அழகிரி.

“திராவிட முன்னேற்றக் கழகத்துக்காக நான் கடுமையாக உழைத்திருகிறேன். திருமங்கலம் தேர்தல் நடக்கும்போது மதிய உணவுக்காக ஸ்டாலின், எம்.ஆர்.கே, பொன்முடி, நேரு என் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அவர்கள் பேசிவைத்துதான் வந்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் என்னிடம், “எப்படியாவது தலைவரிடத்திலே சொல்லி ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி வாங்கித் தர வேண்டும்’ என்று சொன்னார்கள். நான் உடனே, ‘அதுல என்ன... இப்பவே சொல்றேனே?” என்று கேட்டு உடனே அலைபேசியை எடுத்து அப்பாவிடம் பேசினேன். என்னப்பா என்றார். ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி கொடுக்க வேண்டும் என்று சொன்னேன். உடனே நிறைவேற்றினார்.

நான் தென் மண்டல அமைப்புச் செயலாளர் ஆனதால் அவர் பொருளாளர் ஆகவேண்டுமாம். ஆனால் எனக்கு அப்படி எந்த உணர்வும் இல்லை.

திருமங்கலம் தேர்தல் நேரத்திலே இன்னொரு நாள் இரவு என் வீட்டில் ஸ்டாலின், அவரது மனைவி இன்னும் இருவர் உள்ளிட்டோர் சாப்பிட வந்தார்கள். அப்போது நான் ஸ்டாலினிடம், ‘அப்பாவுக்கு பிறகு நீதான் எல்லாம். உனக்காக நான் பாடுபடுவேன்’என்று சொன்னேன். இது அண்ணாவின் மீது கலைஞர் மீது ஆணை. இதை அவர் மறுக்க முடியுமா? ஆனால் அவர் ஏன் இப்படி எனக்கு துரோகம் செய்கிறார் என்று தெரியவில்லை.

நான் மத்திய அமைச்சரானதும் அவரும் அந்தஸ்துக்கு வரவேண்டுமென்று நினைத்திருக்கிறார். நான் மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என்றேன். ஆனாலும் தலைவர் எனக்கு அளித்தார். அடுத்த நாள் தலைவர் பிறந்தநாள். சென்னை வந்து அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தேன். அப்போது தனியாக பேச வேண்டுமென்று தலைவர் அழைப்பதாகச் சொன்னார்கள். உள்ளே சென்றேன். அப்பா என்னிடம், ‘‘ஒண்ணுமில்லப்பா... உன் தம்பி துணை முதலமைச்சர் பதவி கேட்குறான். கொடுக்கலாமா?’என்று கேட்டார். ‘இதுக்கு என்னைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லைப்பா. நீங்கள் வளர்த்த கட்சி. நீங்களே முடிவெடுங்கள்” என்று சொன்னேன். நான் மத்திய அமைச்சர் ஆகிவிட்டதால் துணை முதல்வர் பதவி கேட்டார் ஸ்டாலின்.

நான் தொண்டனுக்காக வாதாடினேன். ஒன்றிய, கிளை கழக தேர்தல், ஒரு சில மாவட்டங்களில் உறுப்பினர் ஃபாரம் பதிந்திருக்கிறார்கள். வாக்காளர் பட்டியலை வாங்கி அப்படியே அதை உறுப்பினர் ஃபாரம் ஆக்கி அதில் கையெழுத்து போட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் எடுத்துப் போய் கலைஞரிடம் காட்டினேன். அவர் அமைப்புச் செயலாளராக இருந்த கல்யாண சுந்தரத்தைக் கூப்பிட்டு என்னப்பா இது என்று விசாரித்தார்.

நடவடிக்கை எடுப்பார் என்று நம்பி வெளிநாட்டுக்கு சென்றுவிட்டேன். மீண்டும் என் பிறந்தநாளுக்காக நான் திரும்பி வரும்போது, என் ஆதரவாளர்கள், ‘பொதுக்குழுவே வருக ‘ என்று போஸ்டர் அடித்தனர். அதற்காகவே அவர்கள் நீக்கப்பட்டனர். நீ போஸ்டர் அடிக்கவில்லையா? உனக்கு வருங்கால முதல்வர் என்று போஸ்டர் அடிக்கவில்லையா? போஸ்டர் மட்டும்தான் அடிக்க முடியும். என் ஆட்கள் , ஆதரவாளர்கள் உன்னை (ஸ்டாலினை) முதல்வராக விட மாட்டார்கள்.

நான் நீக்கப்பட்ட பிறகு கலைஞரை சந்தித்தபோது, ‘என்னை எப்போது சேர்த்துக் கொள்வீர்கள் என்று கேட்டேன். ‘இரு அவர்களின் ஆட்டம் அடங்கட்டும்’ என்று சொன்னார். ஆனால் அதன் பின் அவர் படுத்துவிட்டார்.

ஏழு வருடமாக சும்மாதான் இருக்கிறேன். இப்போது என் ஆதரவாளர்கள் இங்கே நிறைய பேசியிருக்கிறார்கள். நான் நல்ல முடிவெடுப்பேன். அது நல்ல முடிவாகவோ அல்லது கெட்ட முடிவாகவோ கூட இருக்கலாம். எந்த முடிவாக இருந்தாலும் அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். எத்தனையோ பேரை மந்திரியாக்கியிருக்கிறேன். எவனுக்கும் நன்றி கிடையாது. ஆனாலும் உங்களுக்காக ஒரு தொண்டன் அழகிரி இருக்கிறான்” என்று முடித்தார் அழகிரி.

அழகிரியின் இந்த பேச்சைக் கேட்டு அழகிரியின் ஆதரவுத் தொண்டர்கள் பலர் ஆர்ப்பரித்தாலும், கூட இருக்கிற நிர்வாகிகள் மத்தியில் சிறு சலசலப்பு எழத்தான் செய்தது.

“என்னய்யா இது... அண்ணன் கூட்டத்தைக் கூட்டி மதுரையை திணற வச்சுடுவாரு. இதைப் பாத்து பயந்து போய் ஸ்டாலின் ஏன் வம்புனு அண்ணனை திமுகவுல சேர்த்துப்பாருனு நினைச்சோம். ஆனா அண்ணன் இப்படி முதல்வரே ஆக முடியாதுனு ஸ்டாலினை வச்சி செஞ்சிட்டாரே... இனி திமுகவுல என்னைக்கும் சேரமுடியாதே?”என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

இதை சிலர் அழகிரியிடமே அன்று இரவு சொல்லிவிட, ‘ஆமாய்யா...கொஞ்சம் அவசரப்பட்டு எமோஷனல் ஆயிட்டேன்”என்று ரியாக்ட் செய்திருக்கிறார் அழகிரி.

ரஜினியும் கட்சி தொடங்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்ட நிலையில்....தான் தனிக்கட்சி ஆரம்பித்தால் யாரோடு கூட்டணி என்ற கேள்வி அழகிரியின் முன்னால் நிற்கிறது. பாஜக, அதிமுக போன்ற கட்சிகளோடு சேர்வதில் அழகிரிக்கு ஆயிரம் தயக்கம் இருக்கிறது. அதனால்தான், ‘நான் எந்த முடிவெடுத்தாலும் நீங்க ஏத்துக்கணும்’என்றே கூட்டத்தில் பேசினார் அழகிரி.

அழகிரி தாக்கியிருப்பது தற்போது திமுக தலைவராக இருக்கும் ஸ்டாலினை. ஆனாலும் திமுகவிடம் இருந்து உடனடி ரியாக்‌ஷன் எதுவும் இல்லை. ‘அவர் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். அதுபற்றி ரியாக்ட் செய்யாதீர்கள். அப்படி செய்தால் இன்னும் அதிகமாக பேசுவார். ஊடகங்களுக்குதான் அது தீனியாகும். எனவே அவரை யாரும் கண்டுகொள்ள வேண்டாம்’ என்று உத்தரவிட்டுள்ளார் ஸ்டாலின். அதனால்தான் அழகிரியின் கடுமையான தாக்குதலுக்கு திமுக அமைதி காக்கிறது என்கிறார்கள்.

இந்த நிலையில் அழகிரியின் முடிவு என்ன என்று மதுரைப் பக்கமாய் பார்த்து காத்திருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

செவ்வாய் 5 ஜன 2021