ஓரே காரில் பயணித்த எடப்பாடி, பன்னீர்செல்வம்


தூத்துக்குடியில் இருந்து ஒரே காரில் முதல்வரும், துணை முதல்வரும் சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் மனிமண்டபத் திறப்பு விழா சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தப்பேரி கிராமத்தில் இன்று (ஜனவரி 4) நடைபெற்றது. மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், பி.ஹெச்.பாண்டியன் சிலையை முதல்வர் பழனிசாமியும் திறந்து வைத்தனர்.
விழாவில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் அங்கிருந்து ஒரே கார் மூலமாக திருநெல்வேலிக்குச் சென்றனர். அந்த காரின் பின்புற இருக்கையில் அருகருகே அமர்ந்துகொண்ட அவர்கள், பேசிக்கொண்டே சென்றனர்.
திருநெல்வேலியில் அவர்களுக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு சாலையோரம் மக்கள் திரண்டிருந்தனர். இதையடுத்து திறந்த ஜீப் ஒன்றில் முதல்வரும், துணை முதல்வரும் சென்று வரவேற்பை ஏற்றனர்.
முதல்வர் வேட்பாளர் பிரச்சினையை முன்வைத்து பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே கடந்த செப்டம்பர் மாதம் மோதல் ஏற்பட்டது. அதன்பின்னர் பன்னீர்செல்வத்தை மூத்த தலைவர்கள் சமாதானப்படுத்தி எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வைத்தனர்.
இதனிடையே அதிமுக இரண்டாக உடையப்போவதாகவும், பன்னீர்செல்வம் கழண்டுகொள்வார் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அதிமுகவை உடைக்க முடியாது என பழனிசாமி அவருக்கு பதிலளித்திருந்தார். இந்த நிலையில்தான் தங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்பதை சுட்டிக்காட்டும் விதமாக இருவரும் ஒரே வாகனத்தில் பயணித்துள்ளதாக கூறுகிறார்கள் அதிமுக தரப்பில்.