ரஜினியை அரசியலுக்கு வரச் சொல்லி போராட்டம்!


ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டேன் என்று கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி அறிவித்ததை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்றனர்’
தனது உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் இதை அறிவிக்கும்போது தனக்கு ஏற்பட்ட வலி தனக்கு மட்டுமே தெரியும் என்றும் ரஜினி குறிப்பிட்டிருந்தார்.
ரஜினியின் இந்த நிலைப்பாட்டை பலர் வரவேற்றாலும் அவர் அரசியலுக்கு வருவார் என்று காத்திருந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், பாஜகவினருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
இந்நிலையில் ரஜினி அறிவிப்புக்கு சில நாட்கள் கழித்து தமிழகத்தில் ஆங்காங்கே ரஜினிமக்கள் மன்றத்தினரின் சார்பில் , அரசியல் பற்றிய தனது நிலைப்பாட்டை ரஜினி மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் நேற்று (ஜனவரி 3) காலை குகை அய்யப்பன் தலைமையில் ரஜினி ரசிகர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய கோரி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கலந்து கொண்ட ரஜினி ரசிகர்கள், தமிழகத்தில் அரசியல் மற்றும் ஆட்சி மாற்றம் உருவாக்க வா தலைவா..! வா என்று கோஷங்கள் எழுப்பினர்.
இந்தப் போராட்டம் குறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலரிடம் கேட்கையில், “தமிழகத்தில் நல்லாட்சி அமைய ரஜினியால் முடியும் என்று நம்பியிருந்தோம். ஆனால் இப்போது தலைவர் இப்படி அறிவித்துவிட்டதால் ஏமாற்றம் அடைந்துள்ளோம். எனவே அவரது அரசியல் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டி ரசிகர்கள் நாங்கள் அமைதியான முறையில் ஈடுபட்டு வருகிறோம்” என்கிறார்கள்.
ரஜினி மக்கள் மன்றத்தினரின் இந்த போராட்டங்கள் பற்றி ரஜினிக்கும் தகவல்கள் சென்றுகொண்டிருக்கின்றன. அவர் விரைவில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார் என்று மக்கள் மன்ற மேல் மட்ட நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.
வேந்தன்