மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 ஜன 2021

உதயநிதி Vs பிரசாந்த் கிஷோர்: ஒவைசி கூட்டணியில் தடுமாறும் திமுக?

உதயநிதி Vs பிரசாந்த் கிஷோர்:  ஒவைசி கூட்டணியில் தடுமாறும் திமுக?

வரும் ஜனவரி 6 ஆம் தேதி திமுக சிறுபான்மை பிரிவு நடத்தும் இதயங்களை இணைப்போம் மாநாட்டில் திமுக கூட்டணிக் கட்சியினர்தான் கலந்துகொள்கிறார்கள் என்று திமுக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் வரும் 6ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இதயங்களை இணைப்போம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர்.இதற்காக இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு திமுக சிறுபான்மை நல உரிமை அணி செயலாளர் மஸ்தான் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்.

அந்த வகையில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதிஹுதுல் முஸ்லீமின் (இனி ஒவைசி கட்சி என்றே குறிப்பிடுவோம்) தலைவரும், ஹைதராபாத் மக்களவை உறுப்பினருமான அசாதுதின் ஒவைசியை ஜனவரி 1 ஆம் தேதி மாலை மஸ்தான் சந்தித்ததாக ஒரு தகவல் பரவியது. இதன் அடிப்படையில் இந்தப் பொதுக்கூட்டத்தில் ஒவைசிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக செய்திகள் வந்தன.

இந்நிலையில் திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவுச்செயலாளர் டாக்டர் மஸ்தான் ஜனவரி 1 ஆம் தேதி இரவு வெளியிட்ட அறிவிப்பில்,

“ திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மை நல உரிமைப் பிரிவின் சார்பில் எங்கள் கழகத் தலைவரை வைத்து பொதுக்கூட்டம் நடத்துவது வழக்கமான ஒன்று. அந்த அடிப்படையில் இந்த ஆண்டு அப்படியொரு கூட்டம், வருகின்ற 6.1.2021 அன்று சென்னை இராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கழகத் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்தப் பொதுக்கூட்டத்திற்கு எப்போதும் போல் தி.மு.க.வின் தோழமை கட்சித் தலைவர்கள் மட்டுமே சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். மற்றபடி தொலைக்காட்சிகளில் வருவது போன்ற செய்தி உண்மையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

அதேநேரம் நேற்றே திமுகவின் சிறுபான்மை பிரிவு செயலாளர் மஸ்தான், ஹைதராபாத்தில் அசாசுதின் ஒவைசியை சந்தித்த புகைப்படம் ஏ.என்.ஐ. இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது. மேலும் மஸ்தானோடு தமிழக ஒவைசி கட்சித் தலைவர் வகீல் அகமதுவும் ஹைதராபாத் சென்றிருக்கிறார். இப்படி ஒவைசியை சந்தித்து அழைப்பு விடுத்துவிட்டு இன்னொரு பக்கம் ஏன் மஸ்தான் இப்படி மறுப்பு அறிக்கை வெளியிட வேண்டும்?

ஒவைசியை மஸ்தான் சென்று சந்தித்ததைக் கேள்விப்பட்ட திமுகவினர் உள்ளிட்ட பலரும் திமுகவின் செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ.வும், மாவட்டச் செயலாளருமான செஞ்சி மஸ்தானை தொடர்புகொண்டிருக்கிறார்கள். ‘நான் இங்கதானய்யா இருக்கேன்’என்று அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதன் பிறகுதான் ஹைதராபாத் சென்ற மஸ்தான், அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பியாக இருந்து 2001 க்குப் பிறகு திமுகவில் சேர்ந்த டாக்டர் மஸ்தான் என்பதே பலருக்கும் தெரியவந்தது.

இதுகுறித்து நாம் திமுக, ஒவைசி கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது,

“திமுக சார்பில் வரும் ஜனவரி 6 ஆம் தேதி நடக்க இருக்கும் சிறுபான்மை தலைவர்களை ஒன்றிணைக்கும் பொதுக்கூட்டத்தில் ஒவைசியை அழைக்க வேண்டுமென்றும், அதற்காக ஒவைசியை சந்திக்க டிசம்பர் கடைசி வாரமே ஒவைசியிடம் திமுக சார்பில் அப்பாயின்ட்மென்ட் கேட்டு வாங்கப்பட்டது.

இதன் அடிப்படையிலேயே டாக்டர் மஸ்தான் ஹைதராபாத் சென்று ஒவைசியை சந்தித்துள்ளார். மஸ்தான் உள்ளிட்டோர் எதிரில் அமர்ந்திருக்கும்போது ஓவைசிக்கு ஒரு போன் வருகிறது. அதில் ஜனவரி 9 ஆம் தேதி ஒரு நிகழ்ச்சிக்கு அவரை அழைக்கிறார்கள். அப்போது அவர், ஜனவரி 6ஆம் தேதி டி எம்கே சென்னையில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதில் என்னையும் அழைக்க இப்போது திமுக சார்பில் வந்திருக்கிறார்கள்’ என்று யாரிடமோ பேசிக் கொண்டிருக்கிறார். இதெல்லாம் அந்த வீடியோ காட்சியில் இடம்பெற்றிருக்கிறது.

இந்த நிலையில் திடீரென நேற்று இரவு திமுக ஏன் இந்தத் தகவலை மறுக்க வேண்டும். ஒருவேளை மமக, முஸ்லிம் லீக் ஆகியவை ஒவைசி திமுக கூட்டணியில் இடம்பெற்றால் தங்களது முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று நினைத்து அழுத்தம் கொடுத்திருக்கலாம். ஆனால் அதற்காக ஹைதராபாத் வரை சென்று அழைத்த ஒவைசியை திமுக அவமானப்படுத்தும் வகையில் புறக்கணிக்குமா?” என்றும் கேட்கிறார்கள்.

நாம் திமுகவில் சில இஸ்லாமிய நிர்வாகிகளிடம் பேசினோம்.

“திமுகவுக்கு குறிப்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு ஒவைசி திமுக கூட்டணியில் இடம்பெற வேண்டியிருப்பது குறித்து அதிக ஈடுபாடு இருக்கிறது. ஏனென்றால் ஒவைசிக்கு தமிழகத்தில் என்ன செல்வாக்கு இருக்கிறது என்று சமீபத்தில் அவர் ஓர் ஆய்வு நடத்தியிருக்கிறார். அதில் கிடைத்த தகவல்கள் உதயநிதியை ஒவைசி பற்றி சிந்திக்க வைத்திருக்கிறது.

தமிழகத்தில் கடலோரம் வசிக்கும் முஸ்லிம்கள் எல்லாம் கிட்டத்தட்ட முழுமையாக தமிழ் பேசும் முஸ்லிம்கள். நகரப் பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்களில் கணிசமானோர் உருது முஸ்லிம்கள். குறிப்பாக சென்னையில் ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, வண்ணாரப்பேட்டை, வாணியம்பாடி, நெல்லை டவுன், மதுரை காஜிமார் தெரு உள்ளிட்ட தமிழகத்தின் பல நகரப் பகுதிகளில் உருது முஸ்லிம்களின் எண்ணிக்கை அடர்த்தியாக இருக்கிறது. ஒவைசி உருது முஸ்லிம்கள் மத்தியில் ஒரு தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும் தமிழ் முஸ்லிம்களில் உள்ள படித்த புதிய தலைமுறை இளைஞர்களும் தமிழகத்தின் முஸ்லிம் கட்சிகள் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். அதனால் அவர்களும் ஒவைசியை முஸ்லிம் சமுதாயத்தின் ஒரு தேசிய தலைவராக பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

கடந்த 2016 மக்களவைத் தேர்தலில் வாணியம்பாடியில் போட்டியிட்ட ஒவைசி கட்சியின் வேட்பாளர் வகீல் அகமது (இவர்தான் இக்கட்சியின் தமிழக தலைவர்) 10 ஆயிரத்து 117 வாக்குகளைப் பெற்றார். அந்த தேர்தலில் திமுகவுக்கும் அதிமுகவுக்குமான வித்தியாசம் 15 ஆயிரம்.

சென்னையில் ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிகளில் உருது முஸ்லிம்கள் வாக்கு கணிசமாக இருக்கிறது. ஒவைசி ஒருவேளை கமல்ஹாசனோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டால் அங்கே திமுகவுக்கே அது இழப்பாகும். மேலும் இந்த இரு தொகுதிகளில் ஒன்றில்தான் உதயநிதி போட்டியிடத் தயாராகி வருகிறார். சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் பாஜக சார்பில் குஷ்பு நிறுத்தப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. முத்தலாக் பிரச்சினையில் படித்த முஸ்லிம் பெண்களின் வாக்கு குஷ்புவுக்கு கிடைக்கவும் வாய்ப்புகள் அதிகம். எனவே ஒவைசியை விட்டுவிடக் கூடாது என்று உதயநிதி கருதுகிறார்.

இந்த பின்னணியில்தான் இதுவரை சிறுபான்மை கட்சிகளே அறிவாலயத்துக்குப் படையெடுத்துக் கொண்டிருந்த நிலை மாறி, திமுகவின் சிறுபான்மை பிரிவு செயலாளர் ஒவைசிக்காக ஹைதராபாத் சென்றிருக்கிறார்.

இதெல்லாம் ஏற்கனவே திமுகவில் இருக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கு எரிச்சலைக் கொடுத்திருப்பதால்தான் ஒவைசியை சந்தித்துவிட்டு வந்த மஸ்தானை வைத்தே, ’சிறுபான்மை பிரிவு நடத்தும் பொதுக்கூட்டத்துக்கு திமுகவின் தோழமைக் கட்சித் தலைவர்கள் மட்டுமே சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள் ‘ என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைப்பாடில் உதயநிதிக்கும் திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கும் உரசல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது” என்கிறார்கள்.

அப்படியென்றால் மஸ்தான் ஹைதராபாத் சென்று ஒவைசியை சந்தித்தது ஏன் என்ற கேள்வி திமுகவின் பதிலுக்காக காத்திருக்கிறது.

இதுகுறித்து நாம் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதேஹுதுல் முஸ்லிமின் கட்சியின் தமிழக தலைவரான வகீல் அகமதுவை தொடர்ந்து தொடர்புகொள்ள முயற்சித்தும் அவரது இணைப்பு கிடைக்கவில்லை. அவர் ஹைதராபாத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

4 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

சனி 2 ஜன 2021