மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஜன 2021

இரண்டாம் விலகல்: மீண்டும் அரசியலுக்கு வருவாரா தமிழருவி மணியன்

இரண்டாம் விலகல்: மீண்டும் அரசியலுக்கு வருவாரா தமிழருவி மணியன்

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்த பிறகு அவரது அறிவிக்கப்படாத கொள்கை பரப்புச் செயலாளராகவே செயல்பட்டவர் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன். திமுக, அதிமுகவுக்கு மாற்று ரஜினிதான், அவரால் மாற்றம் உண்டாகும் என தொடர்ந்து கூறிவந்தார். டிசம்பர் 3ஆம் தேதி பேட்டியளித்தபோது கட்சியை ஜனவரியில் ஆரம்பிக்கப் போவதாக அறிவித்த ரஜினிகாந்த், அதன் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை நியமித்தார்.

அதன் தொடர்ச்சியாக கட்சியின் பெயர், கொடியைத் தேர்வு செய்வது என அனைத்து பணிகளையும் முழுவீச்சில் மேற்கொண்டு வந்தார் தமிழருவி மணியன். ஆனால் உடல்நிலையைக் காரணம் காட்டி தான் அரசியலுக்கு வந்து கட்சி ஆரம்பிக்கவில்லை என டிசம்பர் 29ஆம் தேதி திடீரென அறிவித்தார் ரஜினிகாந்த்.

இதனால் அதிருப்தியின் உச்சத்துக்கே சென்று அரசியலில் முழுவதுமாக விலகுவதாக அறிக்கை ஒன்றை தமிழருவி மணியன் வெளியிட்டார். அதில், “இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்கமாட்டேன். தி.மு.க.விலிருந்து விலகும்போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார். நான் போகிறேன்; வரமாட்டேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுபோல சில ஆண்டுகளுக்கும் முன்பு தான் அரசியலை விட்டு விலகப்போவதாக அவர் அறிவித்திருந்தார். 2016 சட்டமன்றத் தேர்தலில் தமிழருவி மணியனின் காந்திய மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்கள் இரண்டாயிரம் வாக்குகளைக் கூடப் பெற முடியாமல் போனால், நான் பொது வாழ்வில் இருந்து முற்றாக விலகி விடுவேன் என அறிவித்தார் தமிழருவி மணியன். அவர் சொன்னது போலவே அவர் இயக்கத்தின் வேட்பாளர்கள் யாரும் 2,000க்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லை.

இதனால் அந்த சமயத்திலும் “திமுகவிலிருந்து கவிஞர் கண்ணதாசன் பிரிந்த போது “போய் வருகிறேன்” என்று எழுதினார். ஆனால் நானோ இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை அரசியல் உலகத்தில் மீண்டும் அடியெடுத்து வைப்பதில்லை என்ற முடிவுடன் போகிறேன்” என்று இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த அறிக்கையில் பயன்படுத்திய அதே வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். அந்த நேரத்தில் நடிகர் விவேக் உள்ளிட்ட தமிழருவியின் நலம் விரும்பிகள் மீண்டும் அவரை அரசியலுக்கு அழைத்தனர்.

அதேபோல இப்போது அவருடன் நெருக்கமானவர்கள், நலம் விரும்பிகள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என வலியுறுத்தி வருகிறார்கள். ஆகவே, தன்னுடைய இரண்டாவது ஓய்வு முடிவினை மாற்றிக்கொண்டு மீண்டும் அரசியல் களத்துக்குள் தமிழருவி வெள்ளமென பாயலாம் என என்ற பேச்சும் அரசியல் களங்களில் எழுந்துள்ளது.

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

வெள்ளி 1 ஜன 2021