சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடப்போவதாக தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுகவின் புதிய தலைமை அலுவலகத்தின் திறப்பு விழா சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே இன்று (மார்ச் 12) நடந்தது. கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு புதிய கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, புதிய அலுவலகத்தில் ஆவணங்களில் கையெழுத்திட்டு பணிகளைத் துவங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை அமைப்பதற்கான முயற்சிகளை அமமுக மேற்கொண்டுவருகிறது. மக்களவைத் தேர்தலின்போது தனித்துப் போட்டியிட்டோம். அப்போதும் சில கட்சிகளுடன் கூட்டணி பேசினோம். எங்களது கட்சி பதிவு பெறாததால் கூட்டணி விஷயத்தில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளோம். சட்டமன்றத் தேர்தலில் நல்ல கூட்டணியை அமைப்போம்” என்று தெரிவித்தார்.
2021 தேர்தலுக்காக பிரஷாந்த் கிஷோருடன் திமுக ஒப்பந்தம் செய்துள்ளது. அமமுக என்ன வியூகம் வகுத்துள்ளது என்ற கேள்விக்கு, “மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரை எம்.கே என்று அழைப்பார்கள். அவர் இருந்த கட்சியில் தற்போது பி.கே வந்துள்ளார். அமமுகவிலேயே நிறைய பிரஷாந்த் கிஷோர்கள் இருக்கிறார்கள். தொண்டர்கள் அனைவருமே எங்களுக்கு பிரஷாந்த் கிஷோர்தான்” எனக் கூறினார்.
மேலும், “2021 சட்டமன்றத் தேர்தலுக்கு அமமுக இப்போதே தயாராகிவிட்டது. தமிழகம் முழுவதும் எங்களது நிர்வாகிகளும் தொண்டர்களும் உழைத்து வருகிறார்கள். ஜெயலலிதாவைப் போல நானும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாம் என்று இருக்கிறேன். ஆர்.கே.நகர் தொகுதியில் நிச்சயம் போட்டியிடுவேன். அத்தோடு தென்மாவட்டங்களில் ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். ஜெயலலிதா என்னை அரசியலுக்கு கொண்டுவர ஆசைப்பட்டது தென்மண்டலப் பகுதியில்தான். ஆகவே, அந்தப் பகுதியில் போட்டியிட வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் இன்னும் தொகுதி முடிவாகவில்லை” என்ற தகவலையும் தினகரன் தெரிவித்தார்.
**-எழில்**�,