மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 29 டிச 2020

சொத்து மதிப்பு 4,999 கோடியா? அனிதாவைச் சுற்றும் அடுத்த சர்ச்சை!

சொத்து மதிப்பு 4,999 கோடியா? அனிதாவைச் சுற்றும் அடுத்த சர்ச்சை!

மீண்டும் சர்ச்சை அலைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி தெற்கு திமுக மாவட்டச் செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன்.

அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பொருளில் தமிழகம் எங்கும் இருக்கிற கிராமங்களில் மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் ஊர்க் கூட்டங்களை நடத்துமாறு திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படியே தமிழகம் எங்கும் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணனின் வலதுகரம் போன்றவரும், திமுகவின் மாநில மாணவரணித் துணைச் செயலாளருமான உமரி சங்கர் பேசிய பேச்சு அனிதா ராதாகிருஷ்ணனை மட்டுமல்லாமல் திமுகவையும் நெருக்கடியில் தள்ளியுள்ளது.கடந்த 26ஆம் தேதி நடந்த கிராமசபைக் கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையிலேயே பேசிய உமரி சங்கர்,

“இந்த மாவட்டத்தில் அம்மா ;பேரவை செயலாளராக கே.ஆர். எம்.ராதாகிருஷ்ணன் என்பவர் இருக்கிறார். அவர் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர். என் தாய் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர். எதற்காக நாங்கள் கிராம சபைக் கூட்டம் நடத்த அவர் இடைஞ்சல் பண்ணுகிறார்? அவர் கட்டப் பஞ்சாயத்துக்காரர், கந்துவட்டிக்காரர், அடுத்தவர் இடத்தை ஆக்கிரமிப்பவர்” என்று ஆரம்பித்த உமரி சங்கர், “மனித நேயக் காப்பாளர் அத்தான் அனிதா ராதாகிருஷ்ணனை நீ எந்த வகையில் எதிர்ப்பாய்? இன்னும் 120 நாளில் எங்கள் தலைவர் தளபதி தலைமையில் ஆட்சி அமையும்போது எங்கள் அத்தான் அனிதா ராதாகிருஷ்ணன் இந்த மாவட்டத்தின் மந்திரி. அவர் இந்த மாவட்டத்தில் எல்லா கிராமங்களுக்கும் கோயில் கட்டிக் கொடுத்துள்ளார். ஆனால் நீ என்ன செய்கின்றாய்? ஊர் ஊராக கஞ்சா விற்கின்றாய்” என்று ஆறுமுகனேரி ராதாகிருஷ்ணனை கடுமையாக தாக்கிய உமரி சங்கர், “சென்னையில் உன்னால் தனியாக போய் வர முடியுமா? வா போட்டுப் பார்ப்போம். காவல்துறை எதற்கு அவருக்கு அஞ்சுகிறது? என்னிடம் கூட்டுறவுத் தலைவர் என்ற அரசுப் பதவி இருக்கிறது. கே.ஆர். எம். ராதாகிருஷ்னனுக்கு என்ன பதவி இருக்கிறது?

நான் 96 இல் ஊராட்சி ஒன்றிய தலைவராக இருந்தபோது ஸ்ரீ வைகுண்டம் சண்முகநாதன் என்னிடம் சாராயம் வாங்கி விற்றவர். நான் அரசு சாராயக் கடை நடத்தியவன். அவருக்குத் தொடந்து கரண்ட் பில் கட்டினவன். என்னிடம் ஐந்து லட்சம் கடன் வாங்கினியே திரும்பிக் கொடுத்தியா? அமைச்சர் கடம்பூர் ராஜூ இதற்கு முன் என்ன செய்துகொண்டிருந்தாய்? என்ன கேஸ் வேண்டுமானாலும் போட்டுக்கோ, இன்னும் 120 நாளில் என் தலைவன் தலைமையில் ஆட்சி அமையும். அப்ப பாத்துக்குறேன்.” என்று தனது தனிப்பட்ட விஷயங்களையும், தனிப்பட்ட எதிரிகளையும் பற்றி மட்டுமே பேசியவர் கடைசியில் வைத்தார் அறிவாலயத்துக்கே ஒரு ஷாக்.

“ இந்த மாவட்டத்திலேயே நாடார் சமுதாயத்தில் முதல் பணக்காரன் என் அம்மையுடைய சகோதரி குடும்பம் ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ்.. இரண்டாவது பணக்காரர் 4,999 கோடி ரூபாய் சொத்து வச்சிருக்கிற அனிதா ராதாகிருஷ்ணன் தான் இரண்டாவது பணக்காரன். நாங்கதான் பண்ணையார்.எதற்கும் அஞ்ச மாட்டோம்” என்று பேசியிருக்கிறார் உமரி சங்கர்.

இதே மேடையில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், “அதிமுகவை நிராகரிக்கிறோம் என்று கூட்டம் போடக் கூட ஆறுமுகனேரியில் தடை போட முயற்சிக்கிறார்கள் என்றால்... என்ன நடக்கிறது நான் கேட்கிறேன்? நான் இருபதாண்டுகள் இங்கே சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன். சாதியைச் சொல்லி ஒரு நாளும் நான் பேசியது கிடையாது. என் மேல் அப்படி பொய் வழக்குதான் போடமுடியும். ஆறுமுகனேரி மக்கள் தங்கள் சொத்து தங்களிடம் இருக்கிறதா என்று மாதாமாதம் பார்த்துக் கொள்ள வேண்டும். நீ எல்லாருக்கும் குக்கர் கொடுத்தே. ஆனா குக்கர்தான் வேற ஆளுக்குப் போயிடுச்சே. (ஆறுமுகனேரி ராதாகிருஷ்ணன் குக்கர் கொடுத்ததைதான் சொல்கிறார்) நான் கோயில்களுக்குக் கொடுத்திருக்கிறேன். இதய அறுவை சிகிச்சைகள் செய்ய உதவியிருக்கிறேன். ஆனால் ஒரு நாளும் எந்த கோயிலிலும் என் பெயரை நான் எழுதச் சொன்னதில்லை. எங்களை கூட்டம் போட விடக் கூடாது என்று மிரட்டாதீர்கள். நான் உழைத்து சம்பாதித்தேன். நான் யாரிடமும் வாங்கியதில்லை” என்று உமரி சங்கர் பேச்சுக்கு விளக்கம் கொடுப்பது போல் பேசினார் அனிதா ராதாகிருஷ்ணன்.

இந்த பேச்சின் ஒளிப் பதிவும், ஒலிப்பதிவும் திமுகவினரிடத்திலும், அதிமுகவினரிடத்திலும் வைரலாகப் பரவி வருகின்றன.

அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்ட முயற்சி செய்து வரும் ஆறுமுகனேரி ராதாகிருஷ்ணன் ஆகியோரைப் பற்றி உமரி சங்கர் பேசிய பேச்சால் அதிமுகவினர் கோபம் அடைந்தனர். மேலும் அனிதா ராதாகிருஷ்ணனிடம் 4,999 கோடி ருபாய் இருப்பதாக பேசியதால் திமுகவினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் 27 ஆம் தேதி இரவு உமரி சங்கரின் வீட்டுக்குச் சென்ற மர்ம நபர்கள் அங்கே இருந்த கார்களை சரமாரியாக அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் அதிமுகவின் தூத்துக்குடி மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் அனிதாவின் சொத்து மதிப்பு பற்றி அதிமுக தலைமைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

மேலும் “2016 சட்டமன்ற தேர்தலின் கணக்குபடி 8 கோடியே 69 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் கணக்கு காட்டியிருக்கிறார் அனிதா. மேலும், அனிதா ராதாகிருஷ்ணனின் கடந்த மூன்று தேர்தலுக்கான வேட்பாளர் உறுதிமொழிப் பத்திரத்தை தயார் ஆக வைத்திருக்கிறோம். எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் அவர் மீது நிலுவையிலுள்ள சொத்துக் குவிப்பு வழக்கை நடத்திவரும் அமலாக்க பிரிவிடம் 4999 கோடி ரூபாய் சொத்து மதிப்பை பற்றிய விவாதத்தை கொண்டு செல்வோம்”என்றுஅதிமுகவின் தகவல் தொழில் நுட்பப் பிரிவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

கடந்த செப்டம்பர் மாதம் பனங்காட்டு மக்கள் கழகத்தின் சுபாஷ் பண்ணையாருடன் மோதல், டிசம்பர் மாத ஆரம்பத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அனிதா ராதாகிருஷ்ணனைக் கண்டித்து ஆர்பாட்டம், இப்போது அனிதாவின் உதவியாளரான உமரி சங்கரே அனிதாவின் சொத்து மதிப்பை வெளியிட்டது என்று தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார் அனிதா.

நம்மிடம் இதுபற்றி பேசிய அனிதாவின் ஆதரவு திமுகவினர் சிலர், “அண்ணாச்சிக்கு பக்கத்தில் இருக்கும் உமரி சங்கர் மீது திமுகவினர் அதிருப்தியாக இருக்கிறார்கள்:. ஆனால் இதை அனிதா அண்ணாச்சி உணரவில்லை. பெரியசாமி திமுக மாசெவாக இருந்தபோது அனிதா அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த நிலையில், மாவட்ட திமுகவின் கூட்டம் ஒன்றில் பங்கேற்க சாதாரண உறுப்பினராக சென்றார் அனிதா. அப்போது அவரைத் தள்ளிவிட்டவர்தான் உமரி சங்கர். அப்போது பெரியசாமியின் ஆளாக கருதப்பட்டவர் உமரி சங்கர், இப்போது அவர் அனிதாவுடன் சேர்ந்துகொண்டு அனிதா அண்ணாச்சிக்கே நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறார். கிராம சபைப் பேச்சு தலைவர் வரை போய்விட்டது. தனிப்பட்ட பகை, தடித்த சொற்கள் மட்டுமே நிறைந்த உமரி சங்கரின் பேச்சுக்கு தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், இந்த பேச்சுகள் பொதுமக்களிடையே பரவி பொதுவாகவே திமுகவின் மீது இதுபோன்ற முத்திரை குத்தப்பட்டு விடும்” என்கிறார்கள்.

-வேந்தன்

டெல்லி பயணம்: பன்னீரின் அடுத்த திட்டம்!

3 நிமிட வாசிப்பு

டெல்லி பயணம்:  பன்னீரின் அடுத்த திட்டம்!

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட ...

7 நிமிட வாசிப்பு

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட அறப்போர்!

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ...

3 நிமிட வாசிப்பு

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ட்விஸ்ட்!

செவ்வாய் 29 டிச 2020