மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 டிச 2020

திமுக-காங்கிரஸ் உறவு முறிவு?

திமுக-காங்கிரஸ் உறவு முறிவு?

தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்ற வேண்டும் என கடந்த சில மாதங்களாகவே திமுகவுக்குள் குரல்கள் ஒலித்து வருகின்றன.

ஏற்கனவே இதுபோன்ற குரலை வெளிப்படையாக ஒலித்த கே.என்.நேரு போன்றவர்களும் பல்வேறு மாசெக்களும் ஸ்டாலினிடம் காங்கிரசுக்கு அதிக சீட்டுகள் கொடுத்து நமது வெற்றிவாய்ப்பை இழக்க வேண்டாம் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதுவும் குறிப்பாக பிகார் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் திமுகவுக்குள் காங்கிரஸுக்கு எதிரான குரல்கள் அதிகரித்தும் வலுப்பெற்றும் வருகின்றன.

இதேபோல புதுச்சேரி திமுகவில் இருந்தும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு திமுகவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

”தமிழகத்தில் திமுக காட்டும் அரசியல் ஆர்வத்தை கடந்த இருபது ஆண்டுகளாக புதுச்சேரியில் காட்டவில்லை. கடைசியாக 1996 இல் திமுக சார்பில் ஆர்.வி. ஜானகிராமன் முதல்வராக பதவியேற்று 2000 வரை பதவி வகித்தார். அதற்குப் பின் கடந்த இருபது வருடங்களாக புதுச்சேரியில் திமுக ஆட்சியில் இல்லை. தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் ஆட்சிதான் புதுச்சேரியில் நடந்து வருகிறது. இந்த முறையாவது திமுக ஆட்சி மலரவேண்டும். உங்கள் தலைமையில் தமிழ்நாடு, புதுச்சேரி என இரு மாநிலங்களிலும் திமுக ஆட்சியில் அமரவேண்டும். அது தேசிய அளவில் உங்களை கவனிக்க வைக்கும்” என்பதுதான் புதுச்சேரி திமுக பிரமுகர்கள் ஸ்டாலினிடம் வைத்த கோரிக்கை.

மேலும், “புதுச்சேரி காங்கிரஸில் கோஷ்டிப் பூசல் உச்சகட்டத்தில் இருக்கிறது. எனவே மீண்டும் காங்கிரசுடன் நாம் கூட்டணி வைத்தால் கூட, அக்கட்சியின் கோஷ்டிப் பூசலாலே வெற்றி பாதிக்கப்படும். இப்போதே திமுகவுக்கு காங்கிரஸில் இருந்து சிலர் வரத் தயாராக இருக்கிறார்கள். அவர்களை சேர்த்துக்கொண்டு திமுக தனியாக நின்றாலே ஆட்சியைப் பிடித்துவிடலாம்” என்றும் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு, திமுக தலைவர் ஸ்டாலின், புதுச்சேரியில் திமுக தனியாகவே நிற்கலாமா என்ற ஆலோசனையை தீவிரமாக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட புதுச்சேரியில் தனியாக நிற்கலாம் என்ற முடிவுக்கு ஸ்டாலின் வந்துகொண்டிருக்கிறார் என்கிறார்கள் புதுச்சேரி திமுக வட்டாரத்தில்.

“கலைஞர் பெயரைச் சொல்லி முதல்வர் நாராயணசாமி சில திட்டங்களை செயல்படுத்தியிருந்தாலும், மீண்டும் அவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினால் காங்கிரஸிலேயே பலர் அவருக்கு குழிபறிக்க தயாராகிவிட்டனர் என்பதே நிலைமை. எனவே திமுகவே தனியாக நிற்பதே சரியாக இருக்கும். இதை ஸ்டாலின் உணர்ந்துகொண்டிருக்கிறார்”என்கிறார்கள் திமுக பிரமுகர்கள்.

இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் கேட்கையில், “தமிழ்நாடு, புதுச்சேரி காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குண்டுராவ் அண்மையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடம், ‘திமுக காங்கிரஸ் கூட்டணி நன்றாக இருக்கிறது. காங்கிரஸுக்குள் இருக்கும் பூசல்களைக் களைய நடவடிக்கை எடுங்கள்’ என சொல்லியிருக்கிறார்”என்கிறார்கள்.

புதுச்சேரியில் திமுக தனித்துப் போட்டி என்ற முடிவுக்கு வந்தால்... தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி என்னாகும் என்ற கேள்வியும் தானாகவே எழுந்து நிற்கிறது. ஒருவேளை தமிழகத்தில் காங்கிரஸை தானாகவே கூட்டணியில் இருந்து வெளியேற்றுவதற்காகக் கூட, புதுச்சேரியில் இந்த காய் நகர்த்தலை ஸ்டாலின் தொடங்கியிருக்கலாம் என்கிறார்கள் திமுகவின் புதுச்சேரிப் புள்ளிகள்!

-வேந்தன்

அதிமுகவில் சசிகலா: எடப்பாடிக்கு அதிகரிக்கும் அழுத்தம்!

9 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா:  எடப்பாடிக்கு  அதிகரிக்கும் அழுத்தம்!

கொடநாடு: சசிகலா கொடுத்த குறிப்புகள்... எடப்பாடி மீது கொலைச் சதி ...

7 நிமிட வாசிப்பு

கொடநாடு:  சசிகலா கொடுத்த குறிப்புகள்... எடப்பாடி மீது கொலைச் சதி வழக்கு?

கனகராஜ் மரணம்: சகோதரர் உட்பட 2 பேர் கைது!

3 நிமிட வாசிப்பு

கனகராஜ் மரணம்:  சகோதரர் உட்பட 2 பேர் கைது!

புதன் 16 டிச 2020