எடப்பாடியில் செய்தது என்ன? கனிமொழிக்கு முதல்வர் பதில்!

politics

கடந்த நவம்பர் 29ஆம் தேதி திமுகவின் மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்றக் குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி, திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

அப்போது அவர், “விவசாயி என்று சொல்லிக்கொண்டு போட்டோவுக்கு மட்டும் பச்சைத் துண்டு போட்டுக்கொள்ளும் பச்சைத் துண்டு பழனிசாமி, உண்மையிலேயே விவசாயிகளுக்குப் பச்சை துரோகியாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அம்மையார் ஜெயலலிதா கெயில் பைப் லைனை விவசாய நிலத்தில் அனுமதிக்க மாட்டேன் என்று உறுதியளித்தார். ஆனால், பைப் லைன் போல வளைந்து வளைந்து கும்பிட்டு பதவிக்கு வந்த பழனிசாமி, யார் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்துகிறாரோ அந்த அம்மையார் கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டார். எடப்பாடி தொகுதிக்குக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத பழனிசாமியை இனி எடப்பாடி பழனிசாமி என்று அழைத்தால், அது இந்த ஊருக்குதான் அவமானம். எனவே அவர் இனி எடப்பாடி பழனிசாமி கிடையாது. வெறும் பழனிசாமிதான்” என்று கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 3) சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கனிமொழியின் புகார்கள் குறித்து விரிவாகப் பதிலளித்தார்.

“ஸ்டாலினுடைய சகோதரி மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்கள் எங்கள் தொகுதியில்தான் பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். முதலமைச்சர் தொகுதியில் ஒன்றுமே நடக்கவில்லையாம்.

இவ்வளவு நிருபர்கள், பத்திரிகையாளர்கள் வந்திருக்கிறீர்கள். உண்மை செய்தியை இப்போதாவது போடுங்கள். மாதம் தவறினாலும் நான் தவறாமல் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு வந்து இங்கேயே அமர்ந்து மக்களைச் சந்தித்து தேவையான திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறேன். இதுவரை எந்த முதலமைச்சராவது மாதம் ஒருமுறை அவர்களுடைய தொகுதிக்கு வந்திருக்கிறார்களா?

எல்லா நிகழ்ச்சியிலும் பங்கு பெறுகிறேன். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறேன். முடிவுற்ற பணிகளைத் திறந்து வைக்கிறேன்” என்று கூறிய எடப்பாடி பழனிசாமி சில திட்டங்களைப் பட்டியலிட்டார்.

எடப்பாடி நகருக்குக் குடிநீர் திட்டம் நாங்கள்தான் கொண்டு வந்தோம். நங்கவள்ளி மேச்சேரி கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றினேன். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை நான்தான் கொண்டு வந்தேன். இதில் 1,500 மாணவர்கள் படிக்கிறார்கள். பிஎட் கல்லூரி நாங்கள்தான் கொண்டு வந்தோம். வனவாசியில் பாலிடெக்னிக் கல்லூரியை நான்தான் திறந்து வைத்தேன். ஏழை மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கோனேரிப்பட்டி, சமுத்திரம், பக்கநாடு, சவுரியூர் ஆகிய பகுதிகளில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொடுத்திருக்கிறோம். இப்போது எங்கள் தொகுதியில் மட்டும் சுமார் 8 மினி கிளினிக்குகள் தொடங்க இருக்கிறோம். சேலம் மாவட்டம் முழுவதும் ஏறத்தாழ 100 இடங்களில் மினி கிளினிக்கில் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அங்கேயே மருத்துவ சிகிச்சை பெறக் கூடிய அளவுக்கு ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஓர் உதவியாளருடன் அது இயங்கும்.

சித்தூர், நங்கவள்ளி, கொங்கணாபுரத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டடம் கட்டிக் கொடுக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பக்கநாடு, வெல்வெளி, சவுரியூர் ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவமனை கட்டடங்கள் கட்டப்பட்டு இயங்கி வருகின்றன. எடப்பாடியில் புறவழிச்சாலை பல இடங்களில் புதிய பாலங்கள் வடிகால் வசதி ஆகியவை செய்து கொடுத்திருக்கிறோம்.

எடப்பாடி நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் புதிய கட்டடம், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குக் கட்டடம் கட்டப்பட்டு அன்மையில் திறந்து வைத்திருக்கிறேன். நெடுஞ்சாலை துறைக்கு கோட்ட அலுவலகம், மின்சார வாரியத்துக்குக் கோட்ட அலுவலகம், எடப்பாடிக்கு புதிய கல்வி மாவட்டத்தைக் கொடுத்திருக்கிறோம். ஆறு நடுநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாகவும் ஒரு உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

மேட்டூரில் இருந்து 100 ஏரிகளுக்கு உபரி நீரேற்று திட்டத்தில் எடப்பாடியில் மழை ஏரிகள் நிரப்பப்படுகின்றன. என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் நிதி, பன்னீர்செல்வம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும்போது அவருடைய நிதி, ஊட்டி மேலவை உறுப்பினர் அர்ஜுன் அவர்களின் நிதி ஆகியவற்றைக் கொண்டு வெள்ளரி வெள்ளி ஏரி திட்டத்தை நிறைவேற்றியதால் சுமார் 3000 ஏக்கர் நிலங்கள் விளைந்து நிற்கிறது. மேடான பகுதிகளில் கரும்பு நெல் வாழை போன்றவை பயிரிடப்பட்டு காட்சியளிக்கிறது. திருச்செங்கோட்டில் இருந்து சங்ககிரி – ஓமலூர் வரை நான்கு வழிச்சாலை ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

இப்படி நிறைய செய்திருக்கிறோம். எனவே பார்த்து சொல்ல வேண்டும். இந்த அம்மாவுக்குப் பார்வையில் கோளாறோ என்னவோ தெரியவில்லை. இவ்வளவு திட்டங்களைச் செய்திருக்கிறோம். எடப்பாடி மக்களே பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எங்கள் தொகுதியில் ஒன்றும் செய்யவில்லையாம். எவ்வளவு பச்சைப் பொய்.

கிளம்பிட்டாங்கய்யா என்று வடிவேல் சொல்வது போல ஒருபக்கம் உதயநிதி கிளம்பிவிட்டார். கனிமொழி ஒருபக்கம் கிளம்பிவிட்டார். வாரிசுகளுக்குத் தமிழகத்தில் இடமில்லை என்று அமித் ஷா சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்” என்று மூச்சுவிடாமல் பட்டியலிட்டு பதில் சொன்னார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

**-வேந்தன்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *