மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 ஜன 2021

சிறந்த மாநிலம்: தமிழகம் முதலிடம் பிடித்தது எப்படி?

சிறந்த மாநிலம்: தமிழகம் முதலிடம் பிடித்தது எப்படி?வெற்றிநடை போடும் தமிழகம்

இந்தியா டுடே ஊடக நிறுவனம் ஆண்டுதோறும் இந்திய அளவில் பெரிய மாநிலங்களின் பல்வேறு வகைப்பாடுகளை ஆய்வு செய்து அதில் சிறந்து விளங்கும் மாநிலத்தைத் தேர்வு செய்து மாநிலங்களின் சிறந்த மாநிலம் எனும் விருதினை வழங்கி வருகிறது.

அந்த வகையில் 2020ஆம் ஆண்டிற்கான மாநிலங்களின் சிறந்த மாநிலம் எனும் விருது தமிழக அரசுக்கு வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்தச் செயல்பாடு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான வகைப்பாட்டில் 2000 புள்ளிகளில் 1263.1 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது தமிழகம்.

கடந்த 2018 - 2019ஆம் ஆண்டுகளிலும் தமிழக அரசுக்குதான் கிடைத்தது. முதலிடம் பெற்றதற்கான விருதினை வருகின்ற டிசம்பர் மாதம் 5-ம் தேதி தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு அடுத்தபடியாக இமாச்சல பிரதேசம் மாநிலம் இரண்டாம் இடத்திலும் பஞ்சாப் மாநிலம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த விருதானது, கடந்து ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருதல், வணிகச் சூழல் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மாநில அரசின் செயல்பாட்டை ஆய்வு செய்து வழங்கப்படுகிறது. மாநிலத்தின் பொருளாதாரம், வேளாண்மை, கல்வி, பொது சுகாதாரம், அடிப்படை வசதி ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, ஆளுமைத் திறன், தொழில் முனைவோரை ஊக்குவித்தல், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பேணுதல் ஆகிய வகைப்பாடுகளின் அடிப்படையில் சிறந்த மாநிலமாகத் தேர்வு செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு, இந்தியாவிலேயே மக்கள் தொகையில் 6-ம் இடத்திலும், நாட்டின் பெரிய மாநிலங்களில் 12-ம் இடத்திலும் இருந்தும்கூட, இந்தியப் பொருளாதாரத்தில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், அதிக நகர்ப்புறங்களைக் கொண்ட மாநிலமாகவும், அதே நேரம் தொழில் துறையிலும் வலுவான உற்பத்தி அடித்தளத்தினையும், அதிக சேவைத் துறைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் தாக்கங்களுக்கிடையில், தமிழ்நாடு அரசு தொழில்துறை வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததே, அதிக அளவில் பலதரப்பட்ட முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு உதவிகரமாக இருந்துள்ளதாகவும், 2019-2020ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதம்தான். ஆனால், தமிழ்நாடு, தேசிய சராசரியைவிட இரண்டு மடங்கு உயர்ந்து 8.03 சதவீதத்துடன், நாட்டிலேயே அதிக பொருளாதார வளர்ச்சி அடைந்து, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் வகிக்கிறது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நலத்திட்டங்களில் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, சமூக நீதி, பின்தங்கிய மக்களை உயர்த்துதல் போன்றவற்றை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு, பொதுக்கல்வி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் கண்டு, உள்ளடக்கிய வளர்ச்சியைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாடு, படித்தவர்கள் மற்றும் தொழில் நுட்பரீதியாக திறமையான தொழிலாளர்களைக் கொண்டுள்ள மாநிலமாக உள்ளது.

மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டிலும் தமிழ்நாடு நன்றாக செயல்பட்டிருக்கிறது. ஒரு வயதிற்குட்பட்ட குழந்தை இறப்பு விகிதம் வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் சதவீதம் தேசிய சராசரியைக் காட்டிலும் மிகக் குறைவாக உள்ளது என விருதுக்கான காரணங்களையும் தமிழக அரசு பட்டியலிட்டுள்ளது.

எழில்

சனி, 28 நவ 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon