மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 ஜன 2021

அதிமுக-பாஜக கூட்டணியின் துரோகம்: ஸ்டாலின்

அதிமுக-பாஜக கூட்டணியின் துரோகம்: ஸ்டாலின்வெற்றிநடை போடும் தமிழகம்

அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டது தொடர்பாக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ உயர் சிறப்புப் படிப்புகளில் 50 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையைத் தமிழக அரசு பிறப்பித்தது. இதுதொடர்பான வழக்கில் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்துமாறு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், அரசாணையை ரத்து செய்யக்கோரியும் மத்திய அரசு மற்றும் சில மருத்துவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், இந்த ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு இல்லை என்று உத்தரவிட்டனர். மத்திய அரசின் வாதங்களை ஏற்று இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக மாணவர்களின் கனவினை சிதைத்த மத்திய பாஜக அரசு, இப்போது அரசு மருத்துவர்களின் உயர்சிறப்பு மருத்துவக் கல்விக் கனவினையும் பாழ்படுத்தியுள்ளது. மத்திய பாஜக அரசு கடுமையாக வாதிட்டதன் காரணமாக இந்த ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது” எனக் குற்றம்சாட்டினார்.

பா.ஜ.க. அரசின் இந்தச் சமூகநீதித் துரோகத்திற்குத் துணை போகும் வகையில் பெரும் போராட்டத்திற்குப் பிறகு இந்த இடஒதுக்கீட்டை அளித்து அரசாணை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு அரசு அதற்கான கலந்தாய்வை மேற்கொள்ளாமல் காலம் கடத்தியது. உரிய நேரத்தில் கலந்தாய்வு நடத்தி முடித்திருந்தால் அரசு மருத்துவர்களுக்கு உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்தவுடன் இந்த இடஒதுக்கீடு கிடைத்திருக்கும் என்ற ஸ்டாலின்,

“பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்காக அரசு விழா நடத்துவதிலும் அதற்கான விளம்பரங்களிலும் நேரத்தைச் செலவிட்ட முதல்வர், மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் துளி கூடக் கவனம் செலுத்தவில்லை. போராடிப் பெற்ற சமூகநீதியின் பயன் இந்த ஆண்டே அரசு மருத்துவர்களுக்குக் கிடைக்காமல் போகும் வகையில், கூட்டணியாகத் துரோகம் செய்துள்ளனர் முதல்வரும், மத்திய பாஜக அரசும்” எனக் கண்டனம் தெரிவித்தார்.

இட ஒதுக்கீடு தீர்ப்பு மிகவும் ஏமாற்றமளிக்கக் கூடியதாக இருந்ததாகவும், இவ்வாண்டே செயல்படுத்தப்படவேண்டும் என்று இருந்தும், கைக்கெட்டியது வாய்க்கெட்டவிடாமல் போய்விட்டதாகவும் குறிப்பிட்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “

சமூகநீதியை உச்சநீதிமன்றம் காப்பாற்றும் என்ற நம்பிக்கையைத் தகர்க்கும் தீர்ப்பு ஆகும். மக்கள் மன்றத்தை நம்புவதைத் தவிர இனி வேறு வழியேயில்லை. தமிழக அரசு இதற்கு எப்படித் தீர்வு காணப் போகிறது? இது மக்கள் மன்றத்தின் முன் உள்ள முக்கிய கேள்வியாகும். புதிய வியூகங்களை வகுத்து, தமிழக டாக்டர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் 50 சதவிகிதம் கிடைக்க வழி வகை காண முன்வருமா” எனக் கேள்வியும் எழுப்பினார்.

எழில்

வெள்ளி, 27 நவ 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon