ஈரான் நாட்டின் மூத்த அணு விஞ்ஞானியும், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு அமைப்பின் தலைவருமான மொஹ்சென் பக்ரிசாதே நேற்று (நவம்பர் 27) படுகொலை செய்யப்பட்டார். இது வளைகுடாவில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன், ஈரானுடன் பேச்சுவார்த்தையை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே அணு விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரானின் வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஸரீஃப், இந்த கொலை "அரச பயங்கரவாத செயல்" என்று கண்டித்துள்ளார். ஏதோ ஒரு நாடு சம்பந்தப்பட்டுள்ளதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரானின் ரகசிய அணு ஆயுதத் திட்டங்களின் முக்கிய காரணகர்த்தாவாக ஃபக்ரிசாதே இருந்தார் என்பதை மேற்கத்திய புலனாய்வு அமைப்புகள் உறுதியாக நம்புகின்றன.
ஈரான் தனது அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே என்று வலியுறுத்தி வந்தாலும், அந்நாடு உற்பத்தி செய்யும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் அளவு அதிகரித்திருப்பது குறித்த புதிய கவலையின் மத்தியில் இந்த கொலை செய்தி வந்துள்ளது.
"ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதேவை ஏற்றிச் சென்ற வாகனத்தை குறிவைத்தனர்.பயங்கரவாதிகளுக்கும் அவரது மெய்க்காப்பாளர்களுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, ஃபக்ரிசாதே பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக, அவரைக் காப்பாற்ற மருத்துவக் குழு எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. அவர் காலமானார்" என்று ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
2010 மற்றும் 2012 க்கு இடையில், நான்கு ஈரானிய அணு விஞ்ஞானிகள் படுகொலை செய்யப்பட்டனர். இப்போது ஐந்தாவது அணு விஞ்ஞானியாக ஃபக்ரிசாதே கொல்லப்பட்டார். இந்தக் கொலைகளுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஈரானில் பரவலாக புகார்கள் எழத் தொடங்கியுள்ளன.
ஏப்ரல் 2018 இல் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்த விளக்கத்தில் ஃபக்ரிசாதேவின் பெயர் குறிப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறார்கள்.
-வேந்தன்