|வாரிசு அரசியல்: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் பதில்!

politics

வாரிசு அரசியல் தொடர்பான அமித் ஷாவின் குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் பதிலளித்தார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் அரசுத் திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று துவங்கிவைத்துப் பேசினார். இந்தியா முழுதும் இப்போது குடும்ப அரசியலுக்கு நாம் தக்க பாடத்தைப் புகட்டி வருகிறோம். அதே பாடம் தமிழகத்தில் குடும்ப அரசியலைப் பின்பற்றும் கட்சிகளுக்கு புகட்டப்படும் என்று குறிப்பிட்ட அமித் ஷா,

“திமுக காங்கிரஸ் கூட்டணி ஊழலைப் பற்றி பேசுகிறது. நான் கேட்கிறேன்…ஊழலை பற்றி பேசுவதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? 2ஜி உள்ளிட்ட கோடிக்கணக்கான ஊழல்களை செய்தவர்கள் நீங்கள். அடுத்தவரை குறை சொல்லும் முன் உங்களை உங்கள் குடும்பத்தினரைத் திரும்பப் பாருங்கள்” என்று சாடினார்.

இந்த நிலையில் திமுக தொண்டர்களுக்கு கடிதம் இன்று (நவம்பர் 22) எழுதிய அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், அமித் ஷாவின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், “திமுக வெற்றி மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து உறுதி செய்யப்பட்டிருப்பதை, நம்மைவிட அதிகமாக ஆள்வோர்கள் அறிந்துவைத்திருக்கிறார்கள். அதனால்தான், திமுக மீது அவதூறுகளைப் பரப்ப நினைக்கிறார்கள். திசை திருப்பும் வேலைகளை மேற்கொள்கிறார்கள். இடையூறு செய்ய நினைப்போர், தாங்களாகவே அம்பலப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்ட ஸ்டாலின்,

“நாளொரு ஊழலும், பொழுதொரு கொள்ளையுமாக அதிலும் தங்கள் குடும்பத்தினரை, உறவினர்களை, பினாமிகளைக் கொண்டு அரசு கஜானாவைச் சுரண்டிக் கொழுத்து, நான்காண்டுகள் ஆட்சி செய்த இரட்டையர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு டெல்லி சாணக்கியர்கள், மேடையில் பேசும்போது, எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும் வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது, கண்ணாடி முன் நின்று கரடிபொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது” என்று அமித் ஷாவை சாடினார்.

மேலும், “நாட்டை நாசப்படுத்தி தமிழகத்தை வஞ்சித்து வரும் சக்திகளுக்கு, 2019 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் தமிழக மக்கள் எத்தகைய அடி கொடுத்தார்களோ, அதைவிட பலமான அடியை 2021-ல் சட்டப் பேரவைக்கான தேர்தலில் வழங்குவார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்தார் ஸ்டாலின்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *