மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 நவ 2020

காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படுமா?

காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படுமா?

காவலர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு வழங்க வேண்டுமென கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக காவல் துறையில் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்துப் பிரிவு என ஏராளமான பிரிவுகளில் ஆயிரக்கணக்கான காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழக அரசின் மற்ற துறைகளை விட காவல் துறைக்கு கூடுதல் பணிச் சுமை இருந்தாலும் அவர்களை போன்ற வார விடுமுறை என்பது காவல் துறையினருக்கு கிடையாது.

மற்ற துறைகளில் இருப்பது போல காவல் துறைக்கும் வார விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது கூட, வாரவிடுமுறை அளிப்பது பற்றி பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் அப்போதைய டிஜிபி டி.கே.ராஜேந்திரன். பணிச் சுமை காரணமாக காவலர்கள் பணியிடங்களில் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் ஏராளமாக நிகழ்ந்துள்ளது.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காவலர்களுக்கு ஓய்வு வழங்க வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இன்று (நவம்பர் 22) அவரது ட்விட்டரில், “காவல்துறையினருக்கு மட்டும் திட்டவட்டமான பணி நேரமோ ஓய்வு ஒழிச்சலோ கிடையாது. இதை மாற்ற வேண்டுமென்று பேச்சு எழுந்திருக்கிறது. கடமையைச் செய்பவர்களுக்கு ஓய்வு கொள்ளவும், உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு இளைப்பாறவும் உரிமை உண்டு” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுழற்சி முறையிலோ வேறு விதத்திலோ பிற அரசு ஊழியர்கள் போல் காவல் துறையினருக்கும் ஓய்வு கொடுக்க முன் வந்துள்ளது பாராட்டுக்குரியது. வெறும் பேச்சாய் இல்லாமல் இது நடைமுறைப் படுத்தப்படவும் வேண்டும் எனவும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இதனால் காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெறத் துவங்கியுள்ளது.

எழில்

ஞாயிறு, 22 நவ 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon