மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 நவ 2020

காணொலிக்கு முற்றுப்புள்ளி: களமிறங்கும் ஸ்டாலின்

காணொலிக்கு முற்றுப்புள்ளி: களமிறங்கும் ஸ்டாலின்

வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை திமுக தலைவர் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து துவக்குகிறார். இந்தத் தகவலை இன்று (நவம்பர் 22) அவர் திமுகவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஏழு மாதங்களாக எந்த வெளி நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வருகிறார். அதேநேரம் காணொலி முறையில் தினந்தோறும் பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றி வருகிறார் ஸ்டாலின்.

சில தினங்களுக்குமுன் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஸ்டாலின் அறிக்கை விட்டுக்கொண்டே இருக்கிறார். அறைக்குள் இருந்து வெளியே வரவே மறுக்கிறார்”என்று சாடியிருந்தார். இன்று திமுகவினருக்கு எழுதிய கடிதத்தில் இதுகுறித்துக் குறிப்பிட்டு பதிலளித்துள்ளார் ஸ்டாலின்.

அக்கடிதத்தில், “தமிழக மக்களுக்கும், திமுகவுக்குமான உறவு என்பது மலைக்கோட்டைகளை விட வலிமையானது. அதனால்தான், கொரோனா பேரிடர் நேரத்திலும், கழகத்தினர் ஓய்வின்றிக் களப்பணியாற்றி, ‘ஒன்றிணைவோம் வா’ எனும் செயல்திட்டத்தின் அடிப்படையில், பசித்தோருக்கும் - பரிதவித்தோருக்கும் தேவையான உதவிகளைச் செய்தனர். மக்களின் குறைகளுக்குத் தீர்வு காண, மகளிரணி சார்பில் போராட்டம், மாணவரணி சார்பில் போராட்டம், இளைஞரணி சார்பில் போராட்டம், விவசாயிகள் அணி சார்பில் போராட்டம், தோழமைக் கட்சிகளுடன் இணைந்து போராட்டம் எனத் தொடர்ச்சியாகக் களம் கண்டு, மக்களுடனேயே இருந்து இயங்கி வருகிறது தி.மு.க. அனைத்திலும் தனிமனித இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு எச்சரிக்கை முறைகளைக் கடைப்பிடித்தோம்.

இந்திய அரசியல் வரலாற்றிலேயே பெருமை கொள்ளும் விதமாக, கழகத்தின் பொதுக்குழு, ஏறத்தாழ 3000 உறுப்பினர்களுடன் காணொலி வாயிலாகக் கச்சிதமாக நடத்தி முடிக்கப்பட்டதை, அரசியல் மாச்சரியமின்றி அனைத்துத் தரப்பினரும் பாராட்டினர். கொரோனா நெருக்கடியினால் காணொலி வாயிலாகவே அண்ணா அறிவாலயத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது. காணொலி வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்ற முப்பெரும் விழாவினால், அலைஅலையாக ஆங்காங்கே திரண்டிருந்த அனைத்து மாவட்ட உடன்பிறப்புகளிடமும் உரையாற்றி உற்சாகம் கொள்கின்ற பெரும் வாய்ப்பு அமைந்தது. நவம்பர் 1 முதல் ‘தமிழகம் மீட்போம்’ எனும் தலைப்பில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் காணொலி வாயிலாகத் தொடர்ந்து நடைபெறத் தொடங்கின” என்று திமுக காணொலி வாயிலாக நடத்தும் கூட்டங்கள் பற்றி குறிப்பிட்ட ஸ்டாலின் மேலும்,

“இந்த சூழலில் கழகத்தின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, மற்றொரு பிரம்மாண்டமான பரப்புரைப் பயணத் திட்டத்தை அறிவித்துள்ளார். ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ எனும் தலைப்பில், தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் சென்று சேர்ந்து எதிரொலித்திடும் வகையில், எதிர்வரும் 75 நாட்களில், 15 கழக முன்னணியினர் பங்கேற்று, 234 தொகுதிகளையும் உள்ளடக்கிய 15 ஆயிரம் கிலோமீட்டர் பயணத்துடன் 1500 கூட்டங்கள், 500-க்கும் அதிகமான உள்ளூர் நிகழ்வுகள், 10 லட்சம் நேரடிக் கலந்துரையாடல்கள் எனும் மகத்தான பயணத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, கலைஞர் பிறந்த திருக்குவளையிலிருந்து இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, நவம்பர் 20 அன்று தனது பரப்புரையைத் தொடங்கிய நிலையில், பெருமளவில் திரண்ட மக்களும், அனைத்து சமூகத்தினரும் அவருக்கு அளித்த வரவேற்பும் ஆள்வோரின் கண்களை உறுத்தியதால், உடனடியாக அவரைக் கைது செய்து அதிகார பலத்தைக் காட்ட முயற்சித்தது.

தி.மு.க. கொரோனா பேரிடர் கால விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு, காணொலி வாயிலாக, மகத்தான அளவில் நிகழ்வுகளை நடத்தி, மக்களை ஒருங்கிணைத்தபோது, ’தி.மு.க ஏன் வெளியே வரவில்லை?’ என்று கேட்ட அதே முதலமைச்சரின் ஆட்சி நிர்வாகம்தான், தி.மு.கவினர் உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் பரப்புரைப் பயணத்தை மேற்கொண்டவுடனேயே, கைது நடவடிக்கையை மேற்கொள்கிறது. ஒரு உதயநிதிக்கே இந்த ஆட்சி பயந்துவிட்டதா?

திமுகவை ஆட்சியில் அமரவைத்து, அதனைக் கலைஞரின் ஓய்விடத்தில் காணிக்கையாக்கும் வரை, நமக்கு ஓய்வில்லை. காணொலி வாயிலாக மக்களைச் சந்தித்து உரையாடிவரும் உங்களில் ஒருவனான நானும், தைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் பொழுதில் நேரடியாகப் பரப்புரையை மேற்கொள்ளவிருக்கிறேன். மத்திய மாநில அரசுகள் நமது வெற்றிப் பயணத்தைத் தடுக்க நினைக்கும் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவோம்”என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.

விஜய் எங்கே?

4 நிமிட வாசிப்பு

விஜய் எங்கே?

அமைச்சர்களை கைது செய்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய மம்தா உத்தரவு! ...

8 நிமிட வாசிப்பு

அமைச்சர்களை கைது செய்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய மம்தா உத்தரவு!

முதல்வர் தலைமையிலான குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ...

3 நிமிட வாசிப்பு

முதல்வர் தலைமையிலான குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

ஞாயிறு 22 நவ 2020