மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 நவ 2020

ரஜினிக்கு காய்ச்சலா? பரவிய வதந்தி!

ரஜினிக்கு காய்ச்சலா? பரவிய வதந்தி!

ரஜினிகாந்துக்கு காய்ச்சல் என பரவிய தகவலுக்கு அவரது மக்கள் தொடர்பு அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதும் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இதனிடையே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால், கொரோனா காலத்தில் மருத்துவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்துவதாக ரஜினி பெயரில் கடிதம் வெளியானது.

அந்த அறிக்கையை மறுத்த ரஜினி, அதில் உள்ள மருத்துவர் ஆலோசனை சம்பந்தப்பட்ட வரிகள் மட்டும் உண்மைதான் என்று தெரிவித்தார். இதன்மூலம் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதையும் ரஜினி சூசகமாக கூறியிருந்தார். கொரோனா பரவல் காரணமாக எந்த பொது நிகழ்ச்சிகளிலும் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவில்லை. தீபாவளிக்கு மட்டும் வீட்டிலிருந்தபடி ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில் ரஜினிக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்ததாகவும், கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும தகவல்கள் வந்தன. இதன் காரணமாகவே அமித் ஷாவை சந்திக்கவில்லை எனவும், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க வரவில்லை எனவும் கூறப்பட்டது.

இதுகுறித்து தந்தி தொலைக்காட்சிக்கு இன்று (நவம்பர் 22) விளக்கம் அளித்த ரஜினியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரியாஸ் அகமது, ரஜினியின் உடல்நிலை சரியில்லை என யாரோ விஷமிகள் வதந்தியை கிளப்பியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். ரஜினிகாந்த் போயஸ் கார்டன் இல்லத்தில் நலமுடன் இருப்பதாகவும் கூறினார்.

எழில்

ஞாயிறு, 22 நவ 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon