மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 நவ 2020

அதிமுக-பாஜக செய்தது என்ன? அமித் ஷாவுக்கு திமுக

அதிமுக-பாஜக  செய்தது என்ன? அமித் ஷாவுக்கு திமுக

இரண்டு நாள் பயணமாக உள் துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தமிழகம் வந்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த அரசுக் கூட்டத்தில் பேசிய அவர், திமுக மற்றும் காங்கிரஸுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். மத்திய அரசில் இருந்த போது திமுக தமிழகத்திற்குக் கொண்டு வந்த திட்டங்கள் என்ன என கேள்வியும் எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து இன்று (நவம்பர் 22) அறிக்கை வெளியிட்ட திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, அந்த சாதனைப் பட்டியலைச் சொல்ல வேண்டுமென்றால் - நேருக்கு நேர் மேடை அமைத்து அமித் ஷா கூறியிருப்பது போல் தெருதோறும் கூட்டம் போட்டுப் பேச திமுகவால் முடியும் என்றார்.

ஆனாலும், அந்தக் காலகட்டத்தில் குஜராத்தில் அமைச்சராக இருந்த அமித்ஷாவிற்கு திமுகவின் சாதனைகள் தெரியாது எனக் கூறிய பாலு, “பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றியிருக்கிறோம். தமிழகத்தின் நீர் உரிமையை நிலைநாட்ட காவிரி நடுவர் மன்றம் அமைத்திருக்கிறோம்..தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் நிறுவியது, சேலத்திற்கென தனி ரயில்வே கோட்டம் ஏற்படுத்தியது" உள்ளிட்ட பல திட்டங்களை சுட்டிக்காட்டினார்.

மூன்று வேளாண் திட்டங்களைக் கொண்டு வந்து நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டக் களத்தை உருவாக்கியது மத்திய பாஜக அரசும், அதிமுக அரசும் என சாடியதோடு, விவசாயிகளின் கடன்களையே தள்ளுபடி செய்ய முடியாது என்று கூறி வருகிறது பாஜக அரசு. ஆனால் ரூ.72,000 கோடி விவசாயக் கடன் மற்றும் வட்டி தள்ளுபடி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தள்ளுபடி செய்யப்பட்டது தி.மு.க. பங்கேற்றிருந்த போதுதான் என்றார்.

ஆனால், மத்திய பாஜக அரசு - அதிமுகவுடன் கூட்டணி வைத்து தமிழ்நாட்டிற்குச் செய்தது என்ன? என்ற கேள்வியை முன்வைத்தார் டி.ஆர்.பாலு. சமூகநீதியை அழித்தது, இட ஒதுக்கீட்டை பாழ்படுத்தும் வகையில் செயல்படுவது; நீட் தேர்வு மசோதாவை நிராகரித்தது; ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வந்து காவிரி டெல்டாவை பாலைவனமாக்கியது; தமிழ் சொம்மொழி நிறுவனத்தை முடக்கியது; ஸ்டெர்லைட் ஆலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியது; உதய் திட்டம், புதிய மின்சாரத் திருத்தச் சட்டங்கள் மூலம் மூலம் விவசாயிகளின் இலவச மின்சாரத்தைப் பறிக்க முயற்சி; பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் தமிழகத்தில் உள்ள தொழில் நகரங்களை எல்லாம் வீழ்த்தியது; எந்தப் பேரிடருக்கும் நிதி கொடுக்காதது - மாநிலச் சட்டமன்றத்தின் உணர்வுகளை மதிக்காமல் எதேச்சதிகாரமாகச் செயல்படுவது - ஏழு பேரை விடுவிக்க அனுப்பிய தமிழக அரசின் தீர்மானத்திற்கு இதுவரை ஒப்புதல் கொடுக்க மறுப்பது என துரோகங்கள் இழைக்கப்பட்டது” என கூறினார்.

மேலும், “தமிழ்நாட்டிற்கு நிதியை வாரி வழங்கி விட்டதாகக் கூறியிருக்கிறார் உள்துறை அமைச்சர். நான் அவரிடம் ஒரேயொரு கேள்வி கேட்க விரும்புகிறேன். 15-ஆவது நிதி ஆணையத்தில் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தீர்த்து வைத்து விட்டீர்களா? கொரோனாவிற்கு உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள் வாங்க அ.தி.மு.க. அரசு கேட்ட நிதியைக் கொடுத்து விட்டீர்களா? ஜி.எஸ்.டி. மூலம் இதுவரை தமிழகத்தில் கிடைத்த நிதி எவ்வளவு? அதில் தமிழ்நாட்டிற்கு நீங்கள் செலவிட்டது எத்தனை கோடி?

வட மாநிலங்களுக்கு வாரிக் கொடுத்தது எவ்வளவு கோடி? தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வருவாயையும் மத்திய அரசு எடுத்துக் கொண்டு - ஏதோ “பட்டாணி” கொடுப்பது போல் சில உதவிகளைச் செய்து விட்டு உள்துறை அமைச்சராக இருப்பவரே இப்படிப் பேசுவது மிகுந்த வேதனைக்குரியது.உண்மை என்னவென்றால் இன்றைக்குத் தமிழ்நாடுதான் மத்திய அரசுக்கும் - வட மாநிலங்களுக்கும் நிதி கொடுத்து வருகிறது.

ஆனால், மத்திய பாஜக அரசு, தமிழ் மொழியைப் புறக்கணித்தது, இந்தித் திணிப்பு - மத துவேஷம் உருவாக்குவது - சமூக நல்லிணக்கத்தை பாழ்படுத்துவது போன்ற துரோகங்களை மட்டுமே இதுவரை தமிழ்நாட்டிற்குச் செய்து வருகிறது.இவை தவிர தமிழகத்திற்கு நீங்கள் செய்த சாதனை என்ன மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே?” என கேள்வி எழுப்பினார் டி.ஆர்.பாலு.

எழில்

ஞாயிறு, 22 நவ 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon