மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 நவ 2020

கூட்டணி: பாஜக நிர்வாகிகளிடம் அமித் ஷா கூறிய முக்கிய தகவல்!

கூட்டணி: பாஜக நிர்வாகிகளிடம் அமித் ஷா கூறிய முக்கிய தகவல்!

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் முதன்மைத் தலைவர்களில் ஒருவருமான அமித் ஷாவின் சென்னை வருகையில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது, பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் நடத்திய ஆலோசனைக் கூட்டம்தான்.

நவம்பர் 21 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் அரசு விழா முடிந்தவுடன், தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பினார் அமித் ஷா. அவர் திரும்பிய சில நிமிடங்களுக்குள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் ஹோட்டலுக்கு சென்று அமித் ஷாவைச் சந்தித்தனர். இந்த சந்திப்புக்குப் பின்னர், கட்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார் அமித் ஷா.

மாநிலப் பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் வரவேற்புரையாற்றிய பின் மாநில தலைவர் முருகன் பேசினார். அதன் பின் சிலர் பேசிய பின் உரையாற்றினார் அமித் ஷா.

“தமிழ்நாடு என்ற மாநிலம் பாஜகவுக்கு முக்கியமானது. மத்திய அரசில் நாம் இரண்டாம் முறையாக இப்போது ஆட்சி செய்துகொண்டிருக்கிறோம். பாஜக ஆட்சிக்கு வந்து இன்னும் பத்து வருடங்கள் கூட ஆகவில்லை. நாம் இந்தியாவை குறைந்தபட்சம் இன்னும் முப்பது ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய வேண்டும். அப்போதுதான் நமது கொள்கைகளை, திட்டங்களை முழுமையான அளவில் செயல்படுத்த முடியும்,. இன்று நான் இருக்கலாம், நாளை இன்னொருவர் இருக்கலாம். ஆனால் நமக்கு கட்சி முக்கியம்.கொள்கை முக்கியம்.

உபி, மபி ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களில் நாம் வலுவாக இருக்கிறோம். அது போதாது. மேற்கு வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு,கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நாம் வெற்றிபெற வேண்டும். குறைந்த பட்சம் இன்னும் முப்பது ஆண்டுகள் நாம் ஆட்சி செய்ய வேண்டுமானால் தென் மாநிலங்களின் ஒத்துழைப்பு மிகவும் வேண்டும். அதற்கு தமிழகத்தில் நாம் வெற்றிபெற வேண்டும்.

உங்களுக்கென ஒதுக்கப்பட்ட வேலைகளை அர்ப்பணிப்போடு செய்யுங்கள். பூத் கமிட்டிகளை முழுமையாக வீரியமாக கண்காணிப்பு உணர்வோடு அமைத்து பணியாற்றுங்கள். பூத் கமிட்டிகளை பலப்படுத்துவதுதான் கட்சியை பலப்படுத்தும் வழி. மற்ற எதைப் பற்றியும் நீங்கள் கவலைப் படாதீர்கள். கூட்டணி விஷயத்தை நான் மாநிலத் தலைவர் முருகன், அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகன் ஆகியோரோடு பேசி முடிவு செய்வேன்”என்று பேசினார் அமித் ஷா.

அப்போது நடிகை நமீதா, “தமிழகத்தில் பாஜகவுக்கென ஒரு டிவி ஆரம்பிக்க வேண்டும். அதன் மூலம் நம் பிரசாரத்தை விரிவாக்கலாம்” என்று யோசனை கூறினார்.

அதற்கு அமித் ஷா, “டிவியோ, டிவி விவாதமோ கட்சிக்கு பெரிதாகப் பயன்படாது. பூத் அளவில் சென்று பணியாற்ற வேண்டும். அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட பணியை அவரவர் ஒழுங்காக செய்ய வேண்டும். அடுத்தவர் பணியில் மூக்கை நுழைக்காமல் உங்கள் வேலையை ஒழுங்காகப் பார்த்தாலே கட்சியை வளர்க்கலாம்” என்று பதில் அளித்திருக்கிறார்.

.

அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்று அரசு விழாவில் ஓபிஎஸ் அறிவித்தாலும், அதை இபிஎஸ் மீண்டும் கூறினாலும் அதிமுகவுடனான கூட்டணி பற்றி அமித் ஷா சென்னையில் தான் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சியில் எதுவும் பேசவில்லை. இந்நிலையில், நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ‘கூட்டணி பற்றி முருகன், கேசவ விநாயகனுடன் ஆலோசித்து நான் முடிவெடுத்துக்கொள்கிறேன்’ என்று அமித் ஷா கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

வேந்தன்

ஞாயிறு, 22 நவ 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon