மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 நவ 2020

தமிழகத்தை தாக்க வரும் புதிய புயல்!

தமிழகத்தை தாக்க வரும் புதிய புயல்!

தமிழகத்தில் உருவாகும் புதிய புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்ட பகுதிகளில் தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே வழக்கமாக பெய்யும் மழையை விட 40 சதவிகித அளவு குறைவாகவே இதுவரை மழை பெய்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்திக் குறிப்பு வெளியிட்டார்.

அதில், “நேற்று வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக கடலோரப் பகுதியில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே வரும் 25ஆம் தேதி கரையைக் கடக்கிறது. புயல் சின்னம் காரணமாக வரும் 24, 25ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வரும் 25ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே புயலுக்கு நிவர் என்று பெயர் வைத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

எழில்

ஞாயிறு, 22 நவ 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon