மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 நவ 2020

அமித் ஷா-எடப்பாடி: பேசியது என்ன?

அமித் ஷா-எடப்பாடி: பேசியது என்ன?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று (நவம்பர் 21) கலைவாணர் அரங்கத்தில் நடந்த அரசு விழா முடிந்த பிறகு அவர் தங்கியிருந்த லீலா பேலஸ் ஹோட்டலுக்கு சென்றார். சில நிமிடங்களில் தமிழக முதல்வரும் துணை முதல்வரும் அந்த ஹோட்டலுக்கு சென்று அமித் ஷாவை சந்தித்தனர்.

ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் அமித்ஷாவை சந்திக்க சென்றனர். சில நிமிடங்களில் அமித்ஷாவின் அறையிலிருந்து ஜெயக்குமார் வெளியில் வந்துவிட்டார். பிறகு சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக

ஓ .பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நேரடியாக அமித்ஷாவுடன் பேசியிருக்கிறார்கள்.

இருவருமே முதலில் பிகார் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக தங்களது வாழ்த்துக்களை நேரடியாக அமித்ஷாவிடம் கூறியிருக்கிறார்கள். அதற்கு நன்றி தெரிவித்தார் அமித்ஷா. அப்போது எடப்பாடி பழனிச்சாமி. “அங்கே மூன்று முறை ஆட்சியிலிருந்த நித்திஷ் குமார் மீண்டும் நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல வரும் சட்டமன்ற தேர்தலில் இரண்டு முறை ஆட்சியில் இருக்கும் நாங்களும் மூன்றாவது முறையாக வெற்றி பெறுவோம்’என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். சில நிமிடங்கள் பிகார் தேர்தல் நிலவரம் பற்றியும் அவர்களிடம் பேசினார்.

“தமிழக அரசு மீது மக்களுக்கு இதுவரை எந்த கோபமும் இல்லை. அதனால் மீண்டும் நிச்சயமாக நாம் ஆட்சியைப் பிடித்து விடுவோம். பிகாரில் உங்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்ததைப் போல தமிழகத்திலும் சிறப்பாக இருக்க வேண்டும்” என்று எடப்பாடி கூற நிச்சயமாக என்று உறுதியளித்துள்ளார் அமித் ஷா. மேலும், ”நீங்கள் இருவரும் (எடப்பாடி, பன்னீர்) இப்படி இணைந்து செயல்படுவதில் மிக்க மகிழ்ச்சி. இது தொடரவேண்டும்” என்று அமித் ஷா கூறியிருக்கிறார்.

யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது பற்றி இப்போது இந்த சந்திப்பின் போது பெரிதாக எதுவும் பேசப்படவில்லை. வரும் ஜனவரி மாதத்துக்குள் பாஜகவுக்கான தொகுதிகளைப் பற்றி சொல்லி விடுங்கள் என்று இபிஎஸ் ஓபிஎஸ் இருவரிடமும் கூறியிருக்கிறார் அமித் ஷா. அத்தோடு இந்த சந்திப்பு நிறைவடைந்துள்ளது.

பாஜக வட்டாரங்களில் இதுகுறித்து விசாரித்தபோது..."அமித்ஷா தமிழகத்தில் ரஜினியின் அரசியல் வருகையை வைத்து ஒரு திட்டமிட்டிருந்தார். ரஜினி, பாஜக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் இணைந்து ஒரு அணி அமைத்து மத்திய அரசின் முழுமையான ஆதரவோடு தேர்தலை எதிர்கொள்வது என்பதுதான் அமித்ஷாவின் நம்பர் ஒன் ஆபரேஷன்.

ஆனால் ரஜினியிடமிருந்து உறுதியான இறுதியான எந்தப் பதிலும் அமித் ஷா சென்னை வரும் வரைக்கும் வராத நிலையில் அதிமுக கூட்டணியை அடுத்த கட்ட ஆபரேஷன் ஆப்ஷனாக வைத்திருக்கிறார் அமித் ஷா” என்கிறார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசியபோது,

"தன்னை விமான நிலையத்திலேயே வந்து முதல்வரும் துணை முதல்வரும் வரவேற்றதில் அமித் ஷாவுக்கு மிகவும் மகிழ்ச்சி. அதுவும் குடியரசுத் தலைவர், பிரதமருக்குக் கொடுக்கும் வரவேற்பைப் போல அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பில் அமித் ஷா திக்குமுக்காடிவிட்டார். அந்தக் கூட்டத்தைப் பார்த்துதான் விமான நிலையத்தில் இருந்து வெளியே சில நிமிடங்கள் வெளியே நடந்து வந்து கையசைத்தார்.

சில மாதங்களாகவே அமித்ஷாவுடன் தனது தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக அதிமுக தலைமை கழகத்தில் ஓ பன்னீர்செல்வம் அறிவித்தார். அதற்கு முன்பு இந்த அறிவிப்புக்கு ஓ பன்னீர்செல்வம் ஒப்புக்கொள்ளவில்லை. இதை விரிவாக அமித்ஷாவிடம் கொண்டு சென்றார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்கிடையில் எடப்பாடி பழனிச்சாமி தூதுவராக ஒரு மூத்த அரசியல் பிரமுகர் தேனியில் பன்னீர்செல்வத்தை சந்தித்தார். அதன்பிறகு அமித்ஷாவே நேரடியாக ஓ பன்னீர்செல்வம் லைனுக்கு சென்று எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக அறிவியுங்கள் என்று உத்தரவிட்டார். அதன்பிறகே ஓபிஎஸ் தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றிக்கொண்டு எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்தார்.

இந்தப் பின்னணியில்தான் நேற்று அமித் ஷாவே ஆச்சரியப்படும் அளவுக்கு சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி களை அதிமுக சார்பில் பிரமாண்டப்படுத்தியிருந்தார் எடப்பாடி. இதை அமித் ஷாவும் முதல்வரிடமே நேரடியாகக் குறிப்பிட்டு நன்றி சொல்லியிருக்கிறார்” என்கிறார்கள்.

-வேந்தன்

ஞாயிறு, 22 நவ 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon