மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 18 ஜன 2021

தமிழகத்துக்கு செய்தது என்ன? பட்டியலிட்ட அமித் ஷா

தமிழகத்துக்கு செய்தது என்ன? பட்டியலிட்ட அமித் ஷா

தமிழ்நாட்டின் துரிதமான தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

நேற்று (நவம்பர் 21) மாலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் ரூ 70,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கான அடிக்கல் நாட்டினார் அமித் ஷா,

திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகையில் ரூ 380 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நீர்த்தேக்கத்தை திறந்து வைத்து ரூ. 61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் அமித் ஷா.

நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, தொன்மையான மற்றும் வளமான கலாச்சாரம், அறிவியல் திறன், கட்டிடக்கலை திறமை மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகம் ஆற்றிய பங்கு ஆகியவற்றுக்காக தமிழ்நாட்டை தாம் வணங்குவதாகக் குறிப்பிட்டார்.

“முதல்வர் பழனிசாமியின் தலைமையின் கீழ் தமிழகம் வேகமாக வளர்ச்சியடைந்து இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாகத் திகழும் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கான முயற்சிகளில் நாங்கள் தோளோடு தோள் நிற்கிறோம். அனைத்து ஆதரவையும் நாங்கள் வழங்குவோம். தமிழகத்தின் துரித வளர்ச்சிக்கான மத்திய அரசின் உறுதியை நான் மீண்டுமொருமுறை அளிக்கிறேன்.

சாகர்மாலா திட்டத்தில் துறைமுகங்கள் மற்றும் சாலைகளின் மேம்பாட்டுக்காக ரூ 2,25,000 கோடியை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. மதுரையில் ரூ 1,264 கோடி செலவில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியிருக்கிறார்.

மோடி அரசின் வலுவான செயல்பாடுகளின் மூலமாக கொரோனா பெருந்தொற்றை நம்மால் வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது. உலகிலேயே கோவிட்டை சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மத்திய, மாநில அரசுகள் மற்றும் 130 கோடி மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டதால் தான் இது சாத்தியமாகியுள்ளது. 92 சதவீத குணமடைதல் விகிதத்துடன், சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது”என்று பேசிய அமித் ஷா,

“கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை சரியான முறையில் தமிழக அரசு பயன்படுத்தி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியின் பத்து வருட காலத்தில் வெறும் ரூ 60,000 கோடி மதிப்பிலான விவசாயக் கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், ஆனால் மோடி தலைமையிலான அரசோ, மூன்றே ஆண்டுகளில், விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ 95,000 கோடியை நேரடியாக செலுத்தியிருக்கிறது. இதில், தமிழகத்தில் மட்டும், 45 லட்சம் விவசாயிகளுக்கு ரூ 4,400 கோடி வழங்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்த அவர் மேலும், ஊரக வளர்ச்சி வங்கிகள் மற்றும் நபார்டு மூலம் பல்வேறு திட்டங்களூக்கு ரூ 1,20,000 கோடியை வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளுக்காகவும், சிறு அளவிலான உணவு நிறுவனங்களுக்கும் வழங்கியிருக்கிறோம் என்று கூறினார்.

சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலங்களின் பட்டியலிலும், நீர் மேலாண்மை திட்டங்களிலும் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருப்பதாகவும், தமிழகத்துக்கு உரிய இடத்தையும், அதிகாரத்தையும் மத்திய அரசு வழங்கிக் கொண்டிருப்பதாகவும் அமித் ஷா கூறினார்.

கிழக்கு கடற்கரை சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ 13,700 கோடியை மத்திய அரசு வழங்கியிருப்பதாகவும், கிராமப்புற குடும்பங்களுக்கு சுத்தமான குடி நீரை வழங்க மத்திய அரசு முன்னுரிமை வழங்குவதாகவும் உள்துறை அமைச்சர் கூறினார். இந்தியாவிலேயே இரண்டு மாநிலங்களில் தான் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், அதில் தமிழ்நாடும் ஒன்று என்றும் அவர் எடுத்துரைத்தார்.

மேலும், “ ஊழல், வாரிசு அரசியல் மற்றும் சாதியை வைத்து அரசியல் செய்வது ஆகியவற்றை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். ஜனநாயகக் கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்”என்ற அமித் ஷா இலங்கை தமிழர்கள் பற்றியும் பேசினார்.

“ பிரதமர் மோடி அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக தமிழக மீனவர்கள் மீது தற்போது தாக்குதல்கள் எதுவும் நடைபெறுவது இல்லை. இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்களுக்கு 50,000 வீடுகள் கட்டவும், கோயில்களின் புனரமைப்புக்காகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று குறிப்பிட்டார்.

-வேந்தன்

ஞாயிறு, 22 நவ 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon