மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 நவ 2020

ஜெயலலிதா- வாஜ்பாய்: எடப்பாடி- அமித் ஷா: விமர்சனத்துக்கு உள்ளான வரவேற்பு!

ஜெயலலிதா- வாஜ்பாய்: எடப்பாடி- அமித் ஷா:  விமர்சனத்துக்கு உள்ளான வரவேற்பு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நவம்பர் 21ஆம் தேதி பகல் 1.50 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

அமித்ஷாவை வரவேற்க விமான நிலையம் முதல் அவர் தங்கும் நட்சத்திர ஹோட்டல் வரை பாஜகவினரும் அதிமுகவினரும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் கொடிகளை கட்டி வரவேற்பு தெரிவிக்க கூடியிருந்தனர்.

நேற்று அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில், ‘நாம் பாஜகவுக்கு அடிமையில்லை, அவர்கள் நமக்கு உதவினார்கள். நாம் அவர்களுக்கு உதவினோம். அவ்வளவுதான்’என்று முதல்வர் எடப்பாடி பேசியதாக தகவல்கள் வந்த நிலையில், இன்று அதற்கு நேர் மாறாக அமித் ஷாவின் வரவேற்பு நிகழ்வில் தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என அதிமுகவும் முக்கியப் பங்காற்றியிருக்கிறது.

கூட்டணி கட்சி என்ற முறையில் அமித்ஷாவை அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் வரவேற்பது எதிர்பார்க்கப்பட்டது தான் என்றாலும்... மத்திய அமைச்சர்களில் ஒருவரான உள்துறை அமைச்சராக சென்னை வரும் அமித்ஷாவை ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமி சென்று வரவேற்று இருப்பது புரோட்டோகால் மரபுகளை,விதிகளை மீறிய செயல் என்று அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

இதுவரை மத்திய உள்துறை அமைச்சராக பணியாற்றிய எத்தனையோ பேர் தமிழகம் வந்திருக்கிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த சிதம்பரமே மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் போது பலமுறை சென்னை விமான நிலையம் வந்திருக்கிறார். அப்போதெல்லாம் தமிழக முதல்வர் சென்று வரவேற்றதில்லை. குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் ஒரு மாநில தலைநகருக்கு வரும்போது மட்டுமே அம்மாநில முதல்வர் நேரடியாக சென்று வரவேற்பது பழக்கம். யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் செல்லும் போது அந்த யூனியன் பிரதேசத்தின் முதல்வர் வரவேற்பதுண்டு. காரணம் யூனியன் பிரதேசங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் வருகின்றன.

ஆனால் தமிழ்நாடு என்ற மாநில சுயாட்சியை தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஒரு மாநிலத்தின் முதல்வர் புரோட்டோகால் நடைமுறையை மீறி மத்திய உள்துறை அமைச்சரை நேரடியாக சென்று வரவேற்று இருப்பது தமிழகத்துக்கு புதுமையானது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுபற்றி தமிழக காங்கிரஸ் பொதுக் குழு உறுப்பினரான ஜிகே முரளிதரன் நம்மிடம் பேசினார்.

"தொட்டதற்கெல்லாம் இது அம்மா அரசு அம்மா அரசு என்று எடப்பாடி பழனிச்சாமி வாய்நிறைய பெருமை கொள்கிறார். ஆனால் இது அம்மா அரசு அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் தான் இன்றைய நிகழ்வு நடந்திருக்கிறது. அம்மா அரசு என்றால் எப்படிப்பட்டது என்பதை 2003 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

2003 மே மாதம் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தமிழக விமான நிலையத்தில் புதிய சர்வதேச முனையத்தையும், கார்கோ மையத்தையும் திறந்து வைக்க வருகை தந்தார். அப்போது பிரதமரை வரவேற்க செல்ல வேண்டிய தமிழக முதல்வர் ஜெயலலிதா விமான நிலையத்துக்கு செல்லவில்லை. மாறாக தனக்கு பதிலாக அப்போதைய வருவாய் துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை அனுப்பி வைத்தார். பிரதமர் வரும்போதே முதல்வர் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கெத்தோடு இருந்தவர் ஜெயலலிதா.

ஆனால் அவரது பெயரைச் சொல்லி அரசு நடத்தும் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சரை வரவேற்பதற்காக துணை முதல்வர் உள்ளிட்ட தனது அமைச்சரவை சகாக்களோடு நேரில் சென்று காத்திருக்கிறார். மரபுப்படியும் நடைமுறைப்படியும் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவை வரவேற்க அமைச்சரவையில் ஒன்று அல்லது இரண்டு அமைச்சர்கள் தலைமைச் செயலாளர் ஆகியோர் போதுமானவர்கள். ஆனால் அமித்ஷாவுக்கு இவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தில் இருந்து... அரசியல் ரீதியான வரவேற்பபை அரசு ரீதியாக அவர்கள் செய்கிறார்கள் என்பது உறுதியாகிறது" என்கிறார் ஜிகே முரளிதரன்.

டிஜிட்டல் திண்ணை: நள்ளிரவில் அமித் ஷா ஒதுக்கிய 2 மணி நேரம்... நடந்தது ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: நள்ளிரவில் அமித் ஷா ஒதுக்கிய 2 மணி நேரம்... நடந்தது என்ன?

திமுக அணியில் இருந்து விலகல்: பாரிவேந்தரின் எம்பி. பதவி என்னாகும்? ...

8 நிமிட வாசிப்பு

திமுக அணியில் இருந்து விலகல்: பாரிவேந்தரின் எம்பி. பதவி என்னாகும்?

டிஜிட்டல் திண்ணை: பிரேமலதா இல்லாமல் விஜயகாந்தைச் சந்தித்த அமைச்சர்கள் ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: பிரேமலதா இல்லாமல் விஜயகாந்தைச் சந்தித்த அமைச்சர்கள் - பின்னணி என்ன?

சனி 21 நவ 2020