மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 நவ 2020

ஸ்டாலின் -அழகிரி: கே.பி. ராமலிங்கம் மூலம் பாஜக ஆடப் போகும் கேம்!

ஸ்டாலின் -அழகிரி:  கே.பி. ராமலிங்கம் மூலம் பாஜக ஆடப் போகும் கேம்!

திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பியான கே.பி. ராமலிங்கம் இன்று (நவம்பர் 21) பாஜகவில் இணைந்தார். மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் முன்னணித் தலைவருமான அமித் ஷா இன்று சென்னை வரும் நிலையில் அவரது வருகைக்கு சில மணித்துளிகள் முன்னதாக இன்று பிற்பகல், மு.க. அழகிரி ஆதரவாளராக அறியப்பட்ட கே.பி. ராமலிங்கம் பாஜகவில் சேர்ந்தார்.

பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அப்போது தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளரான முன்னாள் எம்பி கிருஷ்ணகிரி நரசிம்மன் உடன் இருந்தார். நரசிம்மன் தான் சில நாட்களாகவே கே.பி. ராமலிங்கத்தோடு பேசி அவரை பாஜகவுக்கு அழைத்து வந்தவர் என்கிறார்கள் பாஜக வட்டாரத்தில்.

இணைப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல். முருகன், “கே.பி.ராமலிங்கத்தின் வருகையால் கூடுதல் பலம் என்றும், கே.பி.ராமலிங்கத்தின் வருகை பாஜகவுக்கு மேலும் உத்வேகம் அளிக்கிறது”என்று தெரிவித்தார்.

திமுகவில் இருந்து நீக்கப்பட்டவரும் கலைஞரின் மகனுமான மு.க. அழகிரியை தங்கள் கட்சியில் சேர்க்க பாஜக திட்டமிட்டது. அழகிரி வந்தால் வரவேற்போம் என்றும் தமிழக பாஜக தலைவர் முருகன் கூறினார். அதை அழகிரி மறுத்திருந்தார்.

ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி முதல்வர் எடப்பாடியை அவரது சேலம் இல்லத்தில் சந்தித்தார் கே.பி. ராமலிங்கம். கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்கும் மேலாக எடப்பாடி பழனிசாமியுடன் பேசிய கே.பி. ராமலிங்கம் சந்திப்புக்குப் பின் வீட்டு வாசலில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

“திமுகவில் என்னைப் போல பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் என்னோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வெளியேறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. வேறு இயக்கத்தைக் காண்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல. ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் திமுகவினர் செய்த வசூல் விவரங்கள் எல்லாம் என்னிடம் உள்ளன. ஸ்டாலின் தன் கட்சி நிதியில் இருந்து மக்களுக்குக் கொடுத்தாரா? சென்னை சில்க்ஸ், போத்தீஸ் என எந்தெந்த ஜவுளி நிறுவனங்கள், நகைக் கடைகளில் திமுக வசூல் நடத்தியது பற்றியெல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் அதை வெளியிடும் நேரம் இதுவல்ல” என்று தெரிவித்துவிட்டு காரில் ஏறிச் சென்றார் கே.பி. ராமலிங்கம்

இப்போது பாஜகவில் சேர்ந்திருக்கும் கே.பி. ராமலிங்கத்தின் மூலம் ஒரே கல்லில் இரு காய்களை அடிக்கத் திட்டமிட்டிருக்கிறது பாஜக. அதாவது அழகிரியோடு நெருக்கமாக தொடர்புள்ள கே.பி. ராமலிங்கம் மூலம் அழகிரியை தனிக்கட்சி தொடங்க வலியுறுத்துவது. இன்னொரு பக்கம் ஒன்றிணைவோம் வா திட்டம் பற்றி கே.பி. ராமலிங்கம் கூறிய புகார்களை மேலும் கூர்மையாக்கி ஸ்டாலினை அட்டாக் செய்வது இந்த இரு அம்ச திட்டங்களோடுதான் எடப்பாடி நிராகரித்த கேபி. ராமலிங்கத்துக்கு இடம் கொடுத்திருக்கிறது பாஜக.

-வேந்தன்

சனி, 21 நவ 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon