மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 நவ 2020

அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்லூரி செலவு: திமுக முக்கிய அறிவிப்பு!

அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்லூரி செலவு: திமுக முக்கிய அறிவிப்பு!

தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் செல்வை திமுக ஏற்கும் என்று அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவிக் கொண்டிருக்கும் நிலையில் அதை ஈடுகட்டும் வகையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டமியற்றியது. ஆனால் இதற்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் தாமதித்த நிலையில், அதிரடியாக தமிழக அரசே அரசாணை பிறப்பித்தது. இதன் பிறகே ஆளுநரும் ஒப்புதல் அளித்தார்.

இது அதிமுக அரசு பெருமிதப்படும் நடவடிக்கை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிவரும் நிலையில்தான், திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 21) ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், “நீட் தேர்வால் ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு சிதறடிக்கப்பட்ட நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு என அ.தி.மு.க அரசு அறிவித்தது. அதிலும்கூட, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு பரிந்துரைத்த 10% உள் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினால், தங்களுடைய டெல்லி எஜமானர்களின் எரிபார்வைக்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சி, 7.5% என்பது மட்டுமே எனத் தீர்மானமாக நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பிவிட்டு, அத்துடன் தமது கடமை முடிந்து விட்டதாக எண்ணி, பேசாமல் இருந்துவிட்டனர். அங்கே நீண்ட உறக்கம் கொண்டிருந்த உள் இட ஒதுக்கீடு திட்டம், ஆளுநர் மாளிகை முன்பு தி.மு.க.நடத்திய மகத்தான போராட்டத்தினாலும், உயர்நீதிமன்றத்தின் கண்டிப்பினாலும் தற்போது விழித்து, செயல்வடிவம் பெற்றுள்ளது. அந்த அளவில், இதனை தி.மு.க. வரவேற்கிறது.

நீட் தேர்வில் மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீட்டின்படி, அரசு மருத்துவக்கல்லூரிகளில் 227 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்குரிய கட்டணத்தை அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவர்கள் செலுத்த முடியாத நிலை இருப்பதால், அவர்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். அ.தி.மு.க அரசை, மாணவர்களும் பெற்றோரும் நம்பியிருந்த நிலையில், மருத்துவக் கனவு மீண்டும் சிதைக்கப்பட்டுவிடுமோ என்ற மனப் பதற்றத்திற்கும் அச்சத்திற்கும் ஆளாகி இருக்கின்றனர்.

அவர்களின் துயர் துடைக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையாகும் என்பதை நினைவூட்டும் அதே நேரத்தில், மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள தி.மு.க, இந்தக் கல்வியாண்டில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்புக்குரிய கட்டணத்தை முழுமையாக ஏற்கும்” என்று அறிவித்துள்ளார் ஸ்டாலின்.

மேலும் அவர், “சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமையவிருக்கின்ற தி.மு.க.ஆட்சியில், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதற்குரிய சட்ட நடவடிக்கைகள் உறுதியாக மேற்கொள்ளப்பட்டு, அரசுப்பள்ளி - அரசு உதவிபெறும் பள்ளி - கிராமப்புற - ஏழை - பின்தங்கிய - ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த அனைத்து மாணவமணிகளின் மருத்துவக் கனவும் நிச்சயமாக நிறைவேறும்”என்றும் உறுதியளித்துள்ளார் ஸ்டாலின்.

-வேந்தன்

சனி, 21 நவ 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon