மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 25 ஜன 2021

சிறந்த நிர்வாகம்: தமிழகத்திற்கு 2ஆவது இடம்- பின்தங்கிய வடமாநிலங்கள்!

சிறந்த நிர்வாகம்: தமிழகத்திற்கு 2ஆவது இடம்- பின்தங்கிய வடமாநிலங்கள்!வெற்றிநடை போடும் தமிழகம்

சிறந்த நிர்வாகத் திறன் தொடர்பான தர வரிசையில் தென்மாநிலங்கள் முதன்மை இடத்திலும், வட மாநிலங்கள் பின் தங்கியும் உள்ளன.

நாட்டின் சிறந்த நிர்வாகத் திறனுள்ள மாநிலமாக கேரளா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பெரிய மாநிலங்கள் பிரிவில் பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆட்சி நடைபெறும் உத்தர பிரதேசம் கடைசி இடத்தில் இருக்கிறது. பொது விவகாரங்கள் மையம் (public affairs centre) வெளியிட்ட 2020ஆம் ஆண்டுக்கான பொது விவகாரக் குறியீடு அறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது.

பெங்களூருவைச் சேர்ந்த லாப நோக்கமற்ற தன்னார்வ அமைப்பான இந்த மையத்தின் தலைவராக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் செயல்பட்டு வருகிறார்.

மாநிலங்களின் நிலையான வளர்ச்சி மற்றும் நிர்வாகத் திறனை அடிப்படையாக வைத்து இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, தரம், வளர்ச்சி, நிலைத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களின் நிர்வாக செயல்திறன் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பெரிய மாநிலங்கள் பட்டியலில் தென்னிந்திய மாநிலங்கள் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன. கேரளா 1.388 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், 0.912 புள்ளிகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இதேபோல ஆந்திரா 0.531, கர்நாடகா 0.468 புள்ளிகளைப் பெற்றுள்ளன. இந்தப் பிரிவில் உத்தரபிரதேசம் (- 1.461), ஒடிசா (-1.201) மற்றும் பீகார் (-1.158) உள்ளிட்ட வட மாநிலங்கள் எதிர்மறை புள்ளிகளைப் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளன.

சிறிய மாநிலங்கள் பட்டியலில் 1.745 புள்ளிகளுடன் கோவா முதலிடம் வகிக்கிறது. மேகாலயா (0.797) இரண்டாவது இடத்திலும், இமாச்சல் பிரதேசம் (0.725) மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. இதில் மணிப்பூர் (-0.363), டெல்லி (-0.289) மற்றும் உத்தராகண்ட் (-0.277) ஆகியவை மோசமான செயல்பாடுகளுடன் எதிர்மறை புள்ளிகளைப் பெற்று பின்தங்கின.

யூனியன் பிரதேசப் பகுதிகளில் சண்டிகர் 1.05 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. காங்கிரஸ் ஆளும் புதுச்சேரி மாநிலம் 0.52 புள்ளிகளுடன் இரண்டாமிடமும், லட்சத்தீவுகள் 0.003 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் இருக்கிறது. எதிர்மறை புள்ளிகளுடன் தாதர் நாகர் ஹாவேலி, அந்தமான் நிகோபர் தீவுகள், ஜம்மு காஷ்மீர் ஆகியவை மோசமான நிர்வாகத்தில் இடம் பெற்றுள்ளன

இதுதொடர்பாக கஸ்தூரி ரங்கன் கூறுகையில், “பிஏஐ தரும் சான்றுகள் மற்றும் அது வழங்கும் தரவுகள் ஆகியவை இந்தியாவில் நடந்து வரும் பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தைப் பற்றி சிந்திக்க மாநிலங்களை கட்டாயப்படுத்த வேண்டும்” என்றார்.

எழில்

சனி, 31 அக் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon