புதிய ஏடிஜிபியின் உத்தரவு: அதிருப்தியில் காவலர்கள்!

politics

தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக கடந்த மாதம் 31ஆம் தேதி ராஜேஷ் தாஸ் ஐபிஎஸ் பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்ற சில நாட்களிலே காவலர்கள், கீழ் மட்ட அதிகாரிகள் மத்தியில் புலம்பல்கள் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. இதுதொடர்பாக காவல் துறை வட்டாரங்களில் பேசினோம்…

ஆரம்ப காலத்தில் காவல் நிலையங்களில் தினந்தோறும் காலை 7.00 மணிக்கு ரோல் கால் எனப்படும் ஆஜர் அணிவகுப்பு நடைபெற்று வந்தது. சில காலங்களுக்கு பிறகு அதனை நிலைய அதிகாரிகளுக்கு ஏற்றது போல் மாற்றிக் கொண்டார்கள். தற்போது, ஆஜர் அணிவகுப்பு என்பது வாரத்தில் இரண்டு அல்லது மூன்று மூன்று நாட்கள்தான் நடந்தது. காவல் துறையினர் தேவைப்படும்போது மட்டும் வெளியே ரவுண்ட்ஸ் சென்று வந்தனர்.

ஆனால், தற்போது பதவியேற்றுள்ள ஏடிஜிபி சில வாய்மொழி உத்தரவுகளை காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன்படி, தமிழகம் முழுவதுமுள்ள காவல் நிலையங்களில் காலை 8.00 மணிக்கு ஆஜர் அணிவகுப்பு நடத்தவேண்டும். அதில், அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். ஆஜர் அணிவகுப்பை புகைப்படம் எடுத்து சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள காவல் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. டிஎஸ்பி தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு சென்று கலந்துகொள்ள வேண்டும்.

அதேபோல, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையில் அதிகாரிகள், காவலர்கள் யாரும் காவல் நிலையத்தில் இருக்கக் கூடாது. அனைவரும் ரோந்துப் பணிகளில் ஈடுபட வேண்டும். பாரா காவலர், நிலைய எழுத்தர், பொதுநாள் குறிப்பு பார்ப்பவர் ஆகிய மூவர் காவல் நிலையங்களில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று சொல்லி இந்த உத்தரவுகள் அமலுக்கு வந்திருக்கிறது.

ஆனால், ஒரு காவல் நிலையத்தில் பணி செய்யும் காவலர்கள் குறைந்தபட்சம் 10 முதல் அதிகபட்சம் 30 கி.மீ வரை பயணித்து வருகிறார்கள். தினமும் இவ்வாறு ஆஜர் அணிவகுப்பு நடத்தினால், அவர்கள் எவ்வாறு குறிப்பிட்ட நேரத்துக்கு வந்துசேர முடியும். குறிப்பிட்ட நேரத்திற்குள் வர வேண்டும் என்பதற்காக வேகமாக வந்த சிலருக்கு அடிகூட பட்டிருக்கிறது.

காவலர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுத்து இதையெல்லாம் சொன்னால் செய்யலாம். உதாரணமாக, காவல் நிலையங்களில் பணி செய்யும் காவலர்களுக்கு வீட்டு வாடகையாக 2500 அளிக்கப்படுகிறது. ஆனால், அதைவிட அதிகமான வாடகையில்தான் வீடு கிடைக்கிறது. ஆகவே, காவல் நிலையங்களில் பணி செய்பவர்களுக்கு அனைவருக்கும் அங்கேயே குடியிருப்புகள் கொடுக்கவேண்டும் என்கிறார்கள். குளிரூட்டப்பட்ட அறையிலிருந்து உத்தரவுகள் இடும் அதிகாரிகள் இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள் காவல் வட்டாரங்களில்.

**வணங்காமுடி, எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *