மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 அக் 2020

அண்ணா பல்கலையை காப்பாற்ற, ' தனி ஒருவன்' நடைபயணம்!

அண்ணா பல்கலையை காப்பாற்ற,  ' தனி ஒருவன்'  நடைபயணம்!

அக்டோபர் 17 ஆம் தேதி காலை 9.30 மணி... பரபரப்பான சென்னை மெரினா கடற்கரையில் அமைதியாக இருந்த அண்ணா நினைவிடத்தில் ஒரு புகார் மனுவை வைத்து, அண்ணாவை வணங்கிவிட்டு மூவர் புறப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் வடசென்னை தமிழ் சங்க தலைவரான இளங்கோ. கையில் அந்த மனுவுடன் அண்ணா நினைவிடத்தில் இருந்து அந்த மித வெயிலில் காமராஜர் சாலை வழியாக நடந்தார். அவருடன் இளந்தமிழர் பேரவை நிறுவனர் இன்பராசு, பத்திரிகையாளர் சந்திரன் ஆகியோரும் நடந்தனர்.

“தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் அண்ணா பல்கலைக்கழகத்தை பாதுகாக்கக் கோரியும், துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய ஆவன செய்யக்கோரியும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் முறையீடு செய்வதற்காகத்தான் இந்த பயணம்” என்கிறார் இளங்கோ

காமராஜர் சாலையில் சாந்தோம் வழியாக நடந்த இளங்கோ சுமார் முக்கால் மணி நேரத்தில் அடையாறு சத்யா ஸ்டுடியோ அருகே சென்றபோது, அங்கே குடிநீர் பாட்டிலோடு ஒருவர் மறித்தார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் எம்.ஏ.சேவியர்தான் அவர். முதல்வர் வீடு நோக்கி சென்ற இளங்கோவுக்கு குடிநீர் பாட்டிலை தந்ததோடு கோரிக்கை நிறைவேற வாழ்த்தி ஒரு சால்வையையும் அணிவித்தார் அவர்.

அடுத்த சில நிமிடங்களில் மூவரோடு முதல்வரின் வீட்டை நெருங்கினார் இளங்கோ. அப்போது அங்கே இருந்த காவல்துறையினர் மறித்தனர். கையில் கோரிக்கை மனுவை வைத்திருந்த இளங்கோ போலீஸாரிடம்,

“அண்ணா பல்கலைக் கழகத்தை பாதுகாக்கக் கோரியும், மத்திய அரசும் துணைவேந்தரும் நடத்தும் ஆட்டத்துக்கு முடிவுகட்டக் கோரியும் முதல்வரிடம் மனு அளிக்க செல்கிறேன். சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரக் கூடாது என்றுதான் நான் மட்டும் நடந்து வருகிறேன்” என்று கூற போலீஸார் அனுமதித்தனர். முதல்வரின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த முதல்வரின் முகாம் அலுவலகத்தில் புகாரைக் கொடுத்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் இளங்கோ.

எந்த விளம்பரமும், படாடோபமும் இல்லாமல் அண்ணா பல்கலையை காப்பாற்ற தனி ஒருவனாய் நடந்து முதல்வர் வீட்டில் புகார் அளித்த இளங்கோவிடம் மின்னம்பலம் சார்பாக பேசினோம்.

“நோய்த்தொற்று உள்ள இந்த காலத்தில் அதிக கூட்டம் சேர்க்காமலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமலும் இருப்பதற்காக மூன்று பேர் மட்டும் சேர்ந்து, நடைபயணமாக சென்று முதல்வரின் முகாம் அலுவலகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தை காப்பாற்றுமாறு கோரிக்கை மனுவை வழங்கினோம். தமிழகத்தில் இருக்கிற மாணவர்கள் குறிப்பாக சென்னையில் இருக்கிற மாணவர்களும் இந்த முயற்சியை மேற்கொள்ளலாம். அண்ணா பல்கலைக் கழகத்தைக் காப்பாற்றுமாறு தனித்தனியாக மாணவர்கள், இளைஞர்கள் முதல்வரின் முகாம் அலுவலகத்திலோ, தலைமைச் செயலகத்தின் முதல்வர் தனிப்பிரிவிலோ நடந்து சென்று மனுக்களை வழங்கலாம்”என்கிறார் இளங்கோ.

ஏற்கனவே வடசென்னை பகுதியில் ஒரு நூலகத்தைத் திறப்பதற்காக இதேபோல மாநகராட்சி அலுவலகம் நோக்கி நடைபயணம் சென்று அந்த கோரிக்கையில் வெற்றிபெற்றார் இளங்கோ. இப்போது அண்ணா பல்கலையை காப்பாற்ற எந்த அரசியலும் இல்லாமல் தனி ஒருவனாக நடைபயணம் சென்றிருக்கிறார்.

-ஆரா

அவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: ...

7 நிமிட வாசிப்பு

அவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: டெல்லியில் வெள்ளைக்கொடி திட்டமா?

ஒற்றைத் தலைமையா? டெல்லியில் நழுவிய எடப்பாடி

2 நிமிட வாசிப்பு

ஒற்றைத் தலைமையா? டெல்லியில் நழுவிய எடப்பாடி

மோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு!

2 நிமிட வாசிப்பு

மோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு!

ஞாயிறு 18 அக் 2020