மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 அக் 2020

ஓய்வுபெற்ற ஏடிஜிபி மீது முதல்வரிடம் சூரி புகார்?

ஓய்வுபெற்ற ஏடிஜிபி மீது முதல்வரிடம் சூரி புகார்?

முன்னணி நகைச்சுவை நடிகரான சூரியும், நடிகர் விஷ்ணு விஷாலும் குள்ளநரிக் கூட்டம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கதாநாயகன் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இருவரும் சேர்ந்து நடிக்கும் பல திரைப்படங்களில் காமெடிக்கு குறைவிருக்காது. இந்த நிலையில் விஷ்ணு விஷாலின் தந்தையால் தான் மன உளைச்சலில் இருப்பதாக சொல்லியிருக்கிறார் சூரி. இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்து என்னதான் நடந்தது என விசாரித்தோம்..

2015ம் ஆண்டு தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் தயாரிப்பில் வீர தீர சூரன் என்ற படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாகவும், சூரி நகைச்சுவை நடிகராகவும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தனர். இந்த படத்திற்காக சூரிக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. ஆனால், பேசியபடி பணத்தை தயாரிப்பாளர் அளிக்கவில்லை.

இந்த விவகாரத்தை அண்மையில் ஓய்வுபெற்ற கூடுதல் டிஜிபியும், விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலாவிடம் அந்த சமயத்தில் எடுத்துச் சென்றிருக்கிறார் சூரி. அப்போது, சிறுசேரி அருகில் நிலம் ஒன்று இருக்கிறது, எதிர்காலத்தில் அதற்கு நல்ல மதிப்பு இருக்கும் என்று கூறி இந்த சம்பளப் பணத்துடன் மேலும் சில கோடிகள் கொடுத்தால் அதனை முடித்துத் தருவதாகப் பேசப்பட்டிருக்கிறது.

பேசியபடி நான்கு தவணைகளாக 3.10 கோடி ரூபாயை அவர்களிடம் அளித்திருக்கிறார் நடிகர் சூரி. சிறுசேரியில் இடமும் வாங்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் நிறைய சிக்கல்கள் இருப்பதும், அதன் மதிப்பும் குறைவு என்பதை தெரிந்துகொண்ட சூரி, இடத்தைப் பெற்றுக்கொண்டு தனது பணத்தை திரும்பித் தருமாறு கேட்டிருக்கிறார். அதற்கு 40 லட்சம் ரூபாயை மட்டும் கொடுத்த அவர்கள், மீதமுள்ள 2.70 கோடி ரூபாயை தரவில்லை.

இதனைத் தொடர்ந்து ரமேஷ் குடவாலா, அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை அடையாறு காவல் நிலையத்தில் நடிகர் சூரி புகார் அளித்தார். அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சூரி வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் ரமேஷ் குடவாலா, அன்புவேல் ராஜா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடுகிறது. அதன் பேரில் 406, 420, 465, 468 மற்றும் 472 ஆகிய பிரிவுகளில் கீழ் அடையாறு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 50 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள மோசடி வழக்கு என்பதால் இந்த விவகாரம் சென்னை குற்றப்பிரிவு காவல் துறைக்கு மாற்றப்பட்டது.

ஆனால், குற்றப் பிரிவிலிருந்து வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென சூரி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 12ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டது. அதில், “ரமேஷ் குடவாலா மற்றும் அவரது பினாமியாக இருக்கும் அன்புவேல் ராஜன் ஆகியோர் சிறுசேரியில் இருப்பது குடியிருப்பு பகுதி என சொல்லி என்னை ஏமாற்றி சொத்தை வாங்கத் தூண்டினர். தவறாக புனையப்பட்ட ஒப்பந்த ஆவணங்களின் அடிப்படையில் அதை எனக்கு விற்றனர். பின்னர் அது குடியிருப்பு பகுதி அல்ல விவசாய நிலம் என்று தெரிந்த பிறகு அவர்களிடமே விற்பனை செய்ய சென்றபோது என்னை மிரட்டினர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இதுதொடர்பாக 31.08.2020 அன்று அடையாறு காவல் நிலையத்திற்கு அஞ்சல் வழியாக அனுப்பிய புகாருக்கும், 04.09.2020 அன்று கமிஷனரிடம் அளித்த புகார் தொடர்பாகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகே அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. மோசடி செய்யப்பட்ட பண மதிப்பின் அடிப்படையில் அது பின்னர் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது” என்று சுட்டிக்காட்டிய சூரி,

இந்த வழக்கின் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவரான ரமேஷ் குடவாலா கூடுதல் டிஜிபியாக இருந்து மிக சமீபத்தில் ஓய்வு பெற்றார் என்பதால், விசாரணை அதிகாரிகளிடம் அவர் செல்வாக்கு செலுத்துவது மிகவும் எளிதானது எனவும் கூறினார்.

மேலும், “இருவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டதை ஊடகங்கள் மூலமாக அறிந்துவைத்துள்ளனர். இதனால், அவர்கள் ஆதாரங்களை அழிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆகவே, இதுதொடர்பான விசாரணையை சிபிஐக்கோ அல்லது மற்ற புலனாய்வு அமைப்புகளுக்கோ மாற்றம் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார் சூரி.

இந்த பரபரப்புகளுக்கு இடையே அக்டோபர் 12ஆம் தேதியே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நடிகர் சூரி திடீரென சந்தித்தார். முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவிக்க சூரி சந்தித்தார் என தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் முதல்வருக்கு வாழ்த்துக்களோடு, நில மோசடி தொடர்பான தனது மன வலியையும் சூரி சொல்லிவிட்டு வந்திருக்கிறார் என்கிறார்கள் அவரது தரப்பில்...

இந்த வழக்கு கடந்த 16ஆம் தேதி நீதிபதி ரவீந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை நவம்பர் இறுதி வாரத்தில் தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

தனது தந்தை மீதான குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்த விஷ்ணு விஷால், உண்மையில் சூரி, விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸுக்கு ஒரு அட்வான்ஸ் பணத்தைத் திரும்பத் தர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். புகார் குறித்த விளக்கத்தை அறிய ஓய்வுபெற்ற கூடுதல் டிஜிபி ரமேஷ் குடவாலாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்புகொண்டோம்...ஆனால், அவருக்கு அழைப்பு செல்லவில்லை.

எழில்

அவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: ...

7 நிமிட வாசிப்பு

அவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: டெல்லியில் வெள்ளைக்கொடி திட்டமா?

ஒற்றைத் தலைமையா? டெல்லியில் நழுவிய எடப்பாடி

2 நிமிட வாசிப்பு

ஒற்றைத் தலைமையா? டெல்லியில் நழுவிய எடப்பாடி

மோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு!

2 நிமிட வாசிப்பு

மோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு!

ஞாயிறு 18 அக் 2020