மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 அக் 2020

டிஜிட்டல் திண்ணை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடங்கள்: ராகுல் போட்ட உத்தரவு!

டிஜிட்டல் திண்ணை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடங்கள்: ராகுல் போட்ட உத்தரவு!

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.

“திமுக கூட்டணியில் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னம் மட்டுமே 200 இடங்களில் போட்டியிடப் போகிறது என்று வெளியான தகவல்களுக்கு, சில நாட்களுக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு அறிக்கை மூலம் பதிலளித்தார். அதில், திமுக தலைமையிலான கூட்டணி, தமிழக மக்களின் நலனைப் பாதிக்கும் பல்வேறு பொதுப் பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது கூடி, கலந்தாலோசனை செய்து, நேரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. பக்குவப்பட்ட புரிந்துணர்வோடும், பண்பட்ட நேச மனப்பான்மையோடும் இந்தக் கூட்டணி இருக்கிறது. 200 தொகுதிகளுக்கும் மேல் திமுக போட்டியிடப் போகிறது என்று ஓர் அனுமானத்தை மையமாக வைத்து விவாதிக்கிறார்கள். தேர்தல் அறிவிப்பு வெளியாகி, கூட்டணிக் கட்சிகள் ஒருமுறை அல்ல, இரண்டு மூன்று முறை அமர்ந்து பேசி, போட்டியிடப் போகும் தொகுதிகள் இறுதி செய்யப்படுவதுதான் வாடிக்கை. அதற்குள் இவர்கள் ஏன் இவ்வளவு அவசரப் படுகிறார்கள் என்று தெரியவில்லை. இவையெல்லாம் விவாதத்திற்கான பொருளே அல்ல!’ என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் திமுகவுக்குள்ளேயே இதுபற்றிய விவாதங்கள் நடக்கும்போது மற்ற கூட்டணிக் கட்சிகளுக்குள்ளும் இதுகுறித்த விவாதங்கள் நடக்கும்போது அவைதான் ஊடகங்களில் எதிரொலிக்கின்றன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் 2011 சட்டமன்றத் தேர்தலில் 63 இடங்களும், 2016 சட்டமன்றத் தேர்தலில் 41 இடங்களும் பெற்றது. ஆனால் 2011 இல் 5 இடங்களும், 2016 தேர்தலில் 8 இடங்களும் மட்டுமே வென்றது. இந்த கணக்கின் அடிப்படையில்தான் காங்கிரசுக்குக் கொடுக்கப்படும் இடங்களை அதிமுக கபளீகரம் செய்துவிடும் என்று கணக்குப் போடுகிறது அறிவாலயம். அதனால் அதற்கேற்றவாறு தொகுதிகளை ஒதுக்குவதையே விரும்புகிறது. இந்த அடிப்படையில் வரும் தேர்தலில் காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒன்று, மற்றும் 15 சட்டமன்றத் தொகுதிகள் என்றும், ராஜ்யசபா சீட் வேண்டாமென்றால் 20 சீட்டுகள் என்றும் திமுக முடிவெடுத்து அதை சீலிடப்பட்ட கவரில் மட்டும் வைக்காத குறையாக தற்போது வைத்துள்ளது.

திமுக காங்கிரஸுக்குள் நேரடியான தொகுதிப் பங்கீட்டு விவாதங்கள் முறைப்படி தொடங்கவில்லை எனினும் பூர்வாங்கமான அதிகாரபூர்வமற்ற முறையிலான பேச்சுகள் தொடங்கிவிட்டன. இதில் காங்கிரஸை குறைவான தொகுதிகளுக்கு சம்மதிக்க வைக்கும் முயற்சிகளையும் திமுக தொடங்கியிருக்கிறது.

ஆனால் இதற்கு காங்கிரஸ் தரப்பிலிருந்தும் ரியாக்‌ஷன்கள் ஏற்கனவே வரத் தொடங்கிவிட்டன. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் அதிமுக ஜெயிக்கிறது என்று திமுக நினைத்தால்... அந்தத் தொகுதிகளில் திமுகவுக்கு பலமே இல்லையா? அல்லது காங்கிரஸுக்கு திமுக ஒத்துழைக்கவில்லையா என்ற கேள்விகள் எழுகின்றன. 2016 சட்டமன்றத் தேர்தலில் பல தொகுதிகளில் கூட்டணிக் கட்சியான திமுக எப்படி காலைவாரி விட்டது என்பதை அப்போது திமுக தலைவராக இருந்த கலைஞரிடமே புகாராக தெரிவித்தோம். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. எனவே காங்கிரசுக்கு அதிக இடங்கள் கொடுத்தால் அது அதிமுகவுக்கு போய்விடும் என்ற வாதம் கற்பனையானது. திமுக இப்படிக் கூறினால் அது தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்வதாகவே இருக்கும் என்கிறார்கள்.

மேலும் அவர்கள், ‘திமுக தரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இப்போது காங்கிரஸுக்கு தமிழ்நாட்டில் ஆதரவு அதிகரித்திருப்பதாக மதிப்பீட்டு முடிவுகள் கிடைத்திருக்கின்றன. பாஜக எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு ஆகியவற்றை நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி முழுமையாக அறுவடை செய்ததற்குக் காரணம் அந்தக் கூட்டணியில் காங்கிரஸ் இருந்ததுதான். மேலும் திமுகவின் சமீப கால நடவடிக்கைகளால் இஸ்லாமிய, கிறிஸ்துவர்கள் திமுக மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸுடன் திமுக கூட்டணி வைத்தால் மட்டுமே சிறுபான்மை வாக்குகளை பெரும்பான்மையாக பெறமுடியும் என்ற நிலையும் இருக்கிறது.

எனவே திமுக கூட்டணியில் திமுகவுக்குதான் அதிக பலம் என்றும், காங்கிரசுக்கு ஒன்றுமே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. ராகுல் காந்திக்கு தமிழகத்தில் செல்வாக்கு அதிகரித்துள்ளது. கொரோனா காலத்தில் திமுக கூட கூட்டாத விவசாயிகள் சங்கமத்தை காங்கிரஸ் தனியாகவே நடத்திக் காட்டியிருக்கிறது. புதிய உறுப்பினர் சேர்க்கையும் காங்கிரஸில் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே காங்கிரஸுக்கு முந்தைய சட்டமன்றத் தேர்தல்களில் பெற்ற சீட்டுகளுக்கு குறையாமல் சீட்டுகள் வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைமையில் இருந்து ராகுல் காந்திக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ராகுல் காந்தியும் இதை ஆமோதித்து, இதே நிலைப்பாட்டில் இருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்’ என்கிறார்கள். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் சென்றது வாட்ஸ்அப்.

அவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: ...

7 நிமிட வாசிப்பு

அவைத் தலைவர் ஓபிஎஸ் - பொருளாளர் எடப்பாடி - பொதுச் செயலாளர் சசிகலா: டெல்லியில் வெள்ளைக்கொடி திட்டமா?

ஒற்றைத் தலைமையா? டெல்லியில் நழுவிய எடப்பாடி

2 நிமிட வாசிப்பு

ஒற்றைத் தலைமையா? டெல்லியில் நழுவிய எடப்பாடி

மோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு!

2 நிமிட வாசிப்பு

மோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு!

ஞாயிறு 18 அக் 2020