மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 அக் 2020

முத்தையா முரளிதரன் - விஜய் சேதுபதி: விமர்சன சுழற்பந்துகளின் பிட்ச் ரிப்போர்ட்!

முத்தையா முரளிதரன் - விஜய் சேதுபதி: விமர்சன சுழற்பந்துகளின் பிட்ச் ரிப்போர்ட்!

சினிமாவிலோ, கிரிக்கெட்டிலோ, அரசியலிலோ தனித்தனியாக சர்ச்சை வந்தாலே அதன் வீச்சு அதிகமாக இருக்கும். இவை மூன்றும் மையம் கொள்ளும் சர்ச்சை மையமாக அதுவும் உலக அளவிலான சர்ச்சையாக வெடித்திருக்கிறது 800 என்ற திரைப்பட சர்ச்சை.

தமிழகத்தின் பிரபல நடிகர் விஜய் சேதுபதி இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார் என்பதும், முத்தையா முரளிதரன் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை தமிழர் என்று குறிப்பிடப்பட்டாலும் அவரது அரசியல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அரசியல் என்றும் கூறி... அப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிக்கொள்ள வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. இதற்கு விஜய் சேதுபதி ரியாக்ட் செய்யும் முன்பே முரளிதரன் ஓர் அறிக்கை வெளியிட்டுவிட்டார்.

ஆனபோதும் தமிழ்நாட்டு அரசியல் உலகில் முரளிதரனுக்கு எதிரான குரல்களும், ஆதரவான குரல்களும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “முத்தையா முரளிதரன் எனும் கோடாரிக் காம்பின் முழுமையான துரோக வரலாற்றை அறிந்து கொண்டு தான் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று நான் நம்பவில்லை. அறியாமை காரணமாகவே இப்படி ஒரு படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டிருப்பார் என்று நம்புகிறேன். அப்படி அறிந்த பிறகு அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பார் என்றால் அவர் முரளிதரனை விட மோசமான துரோகியாக பார்க்கப்படுவார்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை சிங்களர்களுடன் சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்தவர் முரளிதரன் எனச் சாடிய ராமதாஸ், ” உண்மையில் 800 திரைப்படம் முரளியின் சாதனைகளைப் பற்றி மட்டும் பேசும் படமாக இருக்காது; அவர் மூலமாக இராஜபக்சே சகோதரர்களை உத்தமர்களாக சித்தரிக்கும் காட்சிகள் படம் முழுவதும் நிறைந்திருக்கும் என்பது தான் எங்களின் ஐயம்” என்றார்.

“தர்மதுரை படத்தில் கிராமப்புற ஏழைகளுக்கு அவர் வாஞ்சையுடன் மருத்துவம் அளிக்கும் காட்சிகளில் நான் அவருக்குள் என்னைப் பார்த்தேன். ஆனால், முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தால் அவரை மட்டைப்பந்து வீரராக எவரும் பார்க்க மாட்டார்கள்; மாறாக துரோகத்தின் சின்னமாகவே பார்ப்பார்கள்” என்று கூறியவர்,

800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்றெல்லாம் நான் வலியுறுத்தப்போவதில்லை. அந்தப் படத்தில் நடிக்கப் போவதில்லை என்று அவர் அறிவித்தால் இனமான வரலாற்றில் இடம் பெறுவார் மாறாக, தமிழர்களின் எதிர்ப்பை மீறி இந்தப்படத்தில் நடித்தால் இழிதுரோக வரலாற்றில் இடம் பெறுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கவிஞர் தாமரை விஜய் சேதுபதிக்கு எழுதிய மடலில், “முத்தையா முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் ! அதை நாம்தான் துப்ப வேண்டும். அது நம்மை நனைத்து விடக்கூடாது. மக்கள் செல்வன் விஜயசேதுபதி அவர்களே, நல்ல முடிவாக எடுங்கள். என்ன ஆகிவிடும் என்று பார்க்கலாம், உலகத்தமிழர் நம்பக்கம் இருக்கிறார்கள். தேசிய தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றில் நடியுங்கள்” என்று வலியுறுத்தியுள்ளார்.

தாமரை எழுதிய கடிதத்தை தனது முகநூலில் பகிர்ந்த தவாக தலைவர் வேல்முருகன், கவிஞர் தாமரையின் மேற்கண்ட கருத்தை முழுமனதோடு ஏற்பதாகவும், நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் உலகத் தமிழினத்தின் வேண்டுகோளை ஏற்று விரைவில் உரிய முடிவை எடுப்பார் என நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார். இல்லையெனில் இனிவரும் காலங்களில் இதற்கான எதிர்வினையை உலகத் தமிழினம் அளிக்கும் என்றும் நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். இந்த எதிர்ப்பு சமூக வலைதளங்களிலும் எதிரொலித்து வருகிறது. விஜய் சேதுபதி அந்தத் திரைப்படத்தில் நடிக்கக் கூடாது என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், “இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பான செய்தியை அறிந்தேன். அவருக்கு நாம் சொல்லத் தேவை எதுவுமிருக்காது. அவரே புரிந்துகொண்டு அப்படத்திலிருந்து விலகுவார் என அமைதி காத்தேன். ஆனால், தற்போது அப்படத்தின் அடுத்தகட்டப் பணிகள் தொடங்கியிருப்பதால் அவருக்கு அன்போடு அறிவுறுத்துகிறேன்.

முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்திலிருந்து தம்பி விஜய் சேதுபதி உடனடியாக விலக வேண்டும். முத்தையா முரளிதரனை வெறுமனே ஒரு விளையாட்டு வீரர் எனச் சுருக்கி மதிப்பிட முடியாது. தனது உலகளாவியப் புகழ் வெளிச்சத்தைக் கொண்டு சிங்கள அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையையும், இன ஒதுக்கல் கொள்கைகளையும் நியாயப்படுத்திப் பேச, தமிழர் எனும் இன அடையாளத்தைப் பயன்படுத்தும் சிங்களப் பேரினவாதத்தின் கைக்கூலியே முரளிதரன்.

2 லட்சம் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டு ஈழ நிலம் முற்றாய் பிணக்காடாய் மாறி, இரத்தச் சகதியிலே எமது உறவுகளின் உடல்களும், எங்கும் தமிழர்களின் மரண ஓலங்களும் கேட்ட நொடிப்பொழுதில் எவ்விதத் தயக்கமோ, குற்றவுணர்வோ இன்றி, இனமழிப்பு செய்யப்பட்ட அந்நாளை எனது வாழ்வின் மகிழ்ச்சிகரமான நாளாகக் கருதுகிறேன் என அறிவித்தவர் முத்தையா முரளிதரன். இனப்படுகொலையாளன் மகிந்தா ராஜபக்சே நல்லாட்சி தருவதாகக் கூறிய முரளிதரன், அவரை கறுப்பினப் போராளி நெல்சன் மண்டேலாவோடு ஒப்பிட்டவர்.

அங்கு நடந்தத் தேர்தல்களின்போது தீவிர தமிழர் எதிர்ப்பு மனநிலை கொண்ட சிங்கள இனவாதிகளுக்கு ஆதரவாகவும், காணாமல் போன தங்கள் பிள்ளைகளை மீட்டுத்தர வேண்டி தமிழ்த் தாய்மார்கள் நடத்திய போராட்டத்தை துச்சமென நினைத்து அதனைக் கொச்சைப்படுத்தியும் பேசியது துரோகத்தின் உச்சம். அத்தகைய நிலைப்பாடு கொண்ட சிங்களக் கைக்கூலி முரளிதரன் வாழ்க்கையைத் திரைமொழியில் காட்சிப்படுத்துவது ஈழ விடுதலைப்போராட்டத்திற்கு எதிரானதாகத்தான் அமையும்.

, சிங்களக்கொடி பொறித்த இலங்கையின் சீருடையோடு விஜய் சேதுபதி திரையில் தோன்றி, அதனை தமிழக வீதிகளில் திரைப்படங்களின் வழியே கொண்டுபோய் சேர்க்க நினைப்பதை ஒருநாளும் ஏற்க முடியாது.

இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் முரளிதரன் உட்பட எவரும் தமிழகத்தில் விளையாடுவதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தடைவிதித்ததை தம்பி விஜய் சேதுபதி அறியாததா? அதுவெல்லாம் தெரிந்திருந்தும் முரளிதரன் வாழ்க்கைப்படத்தில் நடிக்க முனைவதை எப்படி நம்மால் ஏற்க முடியும்? திரையரங்குகளில் வெளியிடாது இணையம் வாயிலாகத் திரைப்படத்தை வெளியிடலாம் என விஜய் சேதுபதி நினைத்து செயல்படத் தொடங்கினால் அது வருங்காலங்களில் அவரது மற்றப்படங்கள் வெளியிடுவதில் சிக்கலை ஏற்படுத்தும். ராஜபக்சேவின் மகன் இப்படத்தைக் கொண்டாடும்போதே அடுத்த நொடியே அப்படத்திலிருந்து விலகியிருக்க வேண்டும். அதற்குப் பிறகும், எந்த நம்பிக்கையில் படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீட்டைச் செய்தீர்கள்?

முரளிதரனின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்தி கொழும்பு வீதிகளில் வேண்டுமானால் திரையிடலாம். தமிழகத்தின் வீதிகளில் ஒருநாளும் அது நடக்கப்போவதில்லை”என்று எச்சரித்துள்ளார்.

இவற்றிற்கு பதிலளித்து 800 திரைப்படத்தின் தயாரிப்பாளர் விவேக் வெளியிட்டுள்ள செய்தியில்,

“800 திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை என்றும், அதில் எந்த வித அரசியலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் இளைய சமுதாயத்திற்கும், வருங்கால விளையாட்டு வீரர்களுக்கும் ஒரு நம்பிக்கை பாடமாக இருக்கும். ஈழ தமிழர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும்‌ விதமாக எந்த காட்சிகளும் இடம் பெறாது” என்று உறுதியளித்துள்ளார். இலங்கை தமிழ் கலைஞர்கள் பலர் இந்த படத்தில் பணி புரிவதால் அவர்களின் திறமை உலக அளவில் வெளிவர 800 படம் அடிதளமிடும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடித்தால் என்ன தவறு என்ற குரல்களும் தமிழகத்தில் ஒலிக்கின்றன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், ‘‘முத்தையா முரளிதரன் வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை எதிர்ப்பது என்பது பல விவகாரங்களை திசை திருப்பும் வகையில் உள்ளது. வேறு பல பிரச்சனைகள் இருக்கும்போது இதுகுறித்து விமர்சனம் செய்வது தேவையற்றது” என்று கூறுகிறார்.

தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, “இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தொடர்பான திரைப்படத்தில் நடிப்பது நடிகர் விஜய் சேதுபதியின் தனிப்பட்ட உரிமை. ஆனால், மக்களின் உணர்வுகளையும் அவர் மதிக்க வேண்டும்” என்கிறார்.

சமீபத்தில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு, முத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதில் என்ன தவறு எனக் கேள்வி எழுப்பினார். தான் என்ன திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது விஜய் சேதுபதியின் விருப்பம். இந்த விவகாரத்தில் திரைப்படத்தை திரைப்படமாகவே பார்க்கவேண்டும். அரசியலாகப் பார்க்கக் கூடாது என்றும் கூறினார். பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ், “விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் படத்தில் நடிப்பதில் எந்த வித தவறும் இல்லை. ஒரு கலைஞனுக்கு சினிமாவில் நடிக்க அனைத்து உரிமையும் உண்டு.விஜய் சேதுபதி நடிப்பது அவரது தனிப்பட்ட உரிமை. இதில் அரசியல் கலப்பது சரியல்ல” என்று தெரிவித்துள்ளார்.

நடிகை ராதிகாவும் இந்த விஷயத்தில் காட்டமாக பதிலளித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது' என்று கூறுபவர்களுக்கு வேறு வேலையில்லையா? ஏன் இவர்கள் சன் ரைஸர்ஸ் கிரிக்கெட் டீமின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் முத்தையாவை நீக்கும்படி கோரவில்லை? அது அரசியல் பின்புலமுள்ளது என்பதாலா..?” என்று கேட்டு இந்த சர்ச்சைக்கு இன்னொரு கதவையும் திறந்து வைத்துள்ளார்.

சன் டிவியில் பல ஆண்டுகளாக சீரியல்கள் தயாரித்து வரும் ராதிகா இப்படிக் கேட்டது பலத்த அதிர்வலைகளை உண்டுபண்ணியது. இதை உணர்ந்த ராதிகா சிறிது நேரத்திலேயே, "சன் டிவி மற்றும் சன் ரைசர்ஸ் உரிமையாளர்கள் வலுவான அரசியல் பின்புலத்துடன் இருந்தாலும் தங்களுடைய அரசியலுடன் விளையாட்டு மற்றும் சினிமா துறைகளை கலக்காமல் தொழில்முறையில் அவற்றை தனியாகக் கையாண்டு வருகிறார்கள். அதுபோல, நமது சினிமா துறையும் அரசியலலில் இருந்து விலகியிருந்தால் என்ன..?

நான் அந்த ட்வீட்டை பதிவிட்டது சர்ச்சைகளை உருவாக்குவதற்காக அல்ல. நமது திரையுலகையும், சக கலைஞர்களையும் ஆதரிப்பதற்காகத்தான். அதனால்தான் நடுநிலை மற்றும் தொழில்முறையுடன் அணுகும் போக்குக்கு சாட்சியாக சன் ரைசர்ஸ் பெயரை இணைத்து எழுதினேன்," என்று ராதிகா சமாளித்துள்ளார்.

இப்படி தமிழகத்தில் இந்த விவகாரத்தை வைத்து இரு வேறு கருத்துகள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில்தான் சர்ச்சையின் மையமான முத்தையா முரளிதரன் துபாயில் இருந்தபடி ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

“என்னைப் பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாக கூறி தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகியபோது முதலில் தயங்கினேன். பிறகு முத்தையா முரளிதரனாக நான் படைத்த சாதனைகள் என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லையென்பதாலும் இதற்கு பின்னால் எனது பெற்றோர்கள், என்னை வழிநடத்திய ஆசிரியர், எனது பயிற்சியாளர்கள், சக வீரர்கள் என பலராலும் உருவாக்கப்பட்டவர்கள் என்பதாலும் அதற்கு காரணமானவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்துதான் இந்த திரைப்படத்தை உருவாக்க சம்மதித்தேன்.

இலங்கையில் தேயிலைத் தோட்டக் கூலிகளாக எங்கள் குடும்பம் தங்களது வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்தது. முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற போரில் முதலாவதாக பாதிக்கப்பட்டது இந்திய வம்சாவழியான மலையகத் தமிழர்கள் தான். இலங்கை மண்ணில் எழுபதுகள் முதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்கள், ஜேவிபி போராட்டத்தில் நடந்த வன்முறை, பின்னர், நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் என எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம்.

என் ஏழு வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார். என் சொந்தங்களில் பலர் பலியாகினர். வாழ்வாதாரத்தை இழந்து பலமுறை நடுத்தெருவில் நின்றிருக்கிறோம். ஆதலால், போரால் நிகழும் இழப்பு அதனால் ஏற்படும் வலி என்னை என்பது எனக்கும் தெரியும். முப்பது வருடங்களுக்கு மேல் போர் சூழ்நிலையில் இருந்த நாடு இலங்கை அதன் மத்தியிலேயேதான் எங்கள் வாழ்க்கை பயணம் நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் இருந்து எப்படி நான் கிரிக்கெட் அணியில் இடம் பெற்று சாதித்தேன் என்பது பற்றியான படம்தான் 800.

இது இப்போது பல்வேறு காரணங்களுக்காக அரசியலாக்கி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் நான் பேசிய சில கருத்துகள் தவறாக திரித்து சொல்லப்பட்டதால் வந்த விளைவுதான். உதாரணமாக நான் 2009 ஆம் ஆண்டு தான் என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள் என்று 2019-ல் கூறியதை தமிழர்களை கொன்று குவித்த நாள்தான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்று திரித்துக் கூறி எழுதுகிறார்கள்.

போர் முடிவுற்ற பின், கடந்த 10 வருடங்களாக எனது தொண்டு நிறுவனமான FOUNDATION OF GOODNESS மூலம் ஈழமக்களுக்கு செய்யும் உதவிகள் தான் அதிகம். ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எனது தொண்டு நிறுவன கிளைகள் மூலம் குழந்தைகள் கல்வி, பெண்கள் முன்னேற்றம், மருத்துவம் என பல வகைகளில் பல உதவிகள் செய்து வருகிறேன். மக்கள் நல்லிணக்கத்துக்காக வருடா வருடம் MURALI HARMONY CUP என்கிற பெயரில் கிரிக்கெட் போட்டிகள் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடத்தி வருகிறோம். இன்னும் இதுபோல் ஏராளமான விடயங்கள் உள்ளது. நான் இலங்கை அணியில் இடம் பெற்று சாதனை படைத்த காரணத்தினாலேயே என் மீது ஒரு தவறான பார்வை இருந்து வருகிறது. நான் இந்தியாவில் பிறந்து இருந்தால் நான் இந்திய அணியில் இடம் பெற முயற்சித்திருப்பேன். இலங்கை தமிழனாக பிறந்தது எனது தவறா?”என்று கேட்டுள்ளார்.

இந்த சர்ச்சையில் மூன்றாவது பக்கமான ஈழத் தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள்?

“முத்தையா முரளிதரனின் தந்தை முத்தையா 1964 ஆம் ஆண்டு முதலே இலங்கையில் லக்கி லேண்ட் என்னும் பிஸ்கட் நிறுவனத்தை தொடங்கியவர். படிப்படியாக அது பெரிதாக வளர்ந்தது. 2018 ஆம் ஆண்டு முத்தையாவின் 75 ஆவது ஆண்டு பவளவிழாவில் அவரை வாழ்த்தாத இலங்கை தலைவர்களே கிடையாது. அந்த அளவுக்கு இலங்கை அரசின் அனுசரனையோடே அவர் தொழிலை நடத்தி வந்திருக்கிறார். மலையகத் தமிழர்களின் ரத்தத்தை உறிஞ்சிதான் அந்த பிஸ்கட் கம்பெனி நடப்பதாக அவ்வப்போது அங்கே புகார்களும் போராட்டங்களும் எழுவதுண்டு.

இப்படிப்பட்ட முத்தையாவின் மகனான முரளிதரனும் அடிப்படையில் ஒரு கிரிக்கெட் வியாபாரி. மலையகத் தமிழராக இருந்தபோதிலும் அவர் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க அவரது திறமை ஒரு காரணம் என்றால், அவர் தன்னை தமிழன் என்று முன்னிலைப்படுத்திக் கொள்ளாமையும் ஒரு முக்கியக் காரணம். இது இலங்கையில் சிங்களர்கள், தமிழர்கள் என அனைவருக்கே தெரிந்த விடயம்தான்.

ஆனால் முரளிதரன் தன் தந்தையை விட ஒருபடி முன்னே சென்று சிங்கள இனவாதத் தலைவர்களை வெளிப்படையாக ஆதரித்தவர். முரளி தனது அறிக்கையில் JVPஇன் போராட்டத்தில் நடந்த வன்முறையால் பாதிக்கப்பட்டேன் என்று சொன்னார். ஆனால் கடந்த தேர்தலில் அந்த JVPயின் முன்னாள் கொள்கை பரப்பு செயலாளர் விமல் வீரவன்சவ ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்திருக்கிறார். முரளி தனது அறிக்கையில் ராஜபக்சவை ஆதரித்து அவர் செய்து வரும் அரசியல் பிரச்சாரம் பற்றி எதுவும் பேசவில்லை.

முரளிதரன் தான் மலையக தமிழராக பாதிக்கப்பட்டேன் என்றார். முரளி தோட்ட தொழிலாளர் குடும்பத்தில் பிறக்கவில்லை, அவர் ஒரு பிஸ்கட் கம்பெனி முதலாளியின் மகனாக தான் பிறந்தார். முரளி தன்னை மலையகத்தின் முகமாக முன்நிறுத்துகிறார், ஆனால் தேர்தலில் மலையக மக்களால் நிராகரிக்கப்பட்ட, மலையக மக்களுக்கு எதிரான கட்சிக்காக வேலை செய்தது ஏன் என்று மட்டும் சொல்லவில்லை.

முரளி தான் இன பேதம் பார்க்காமல் எல்லோருக்குமானவன் என்றார். ஆனால் சிங்கள இனவெறியரான விமல் வீரவன்சவை ஆதரித்து, தமிழ் மக்கள் அதிகம் மதிக்கும் அரசியல்வாதி மனோ கணேசனை எதிர்த்து கொழும்பில் பிரச்சாரம் செய்தது ஏன் என்று மட்டும் சொல்லவில்லை. ஆக இந்த விடயத்தில் முரளி தெளிவாக இருக்கிறார். விஜய் சேதுபதிதான் குழப்பிக் கொண்டிருக்கிறார். நல்ல முடிவெடிப்பார் என்று நம்புவோம்” என்கிறார்கள்.

பன்னீர் டெல்லி பயணம்: அஜெண்டா சசிகலா

4 நிமிட வாசிப்பு

பன்னீர் டெல்லி பயணம்:  அஜெண்டா சசிகலா

பன்னீர் பின்னால் எடப்பாடியும் டெல்லி பயணம்!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் எடப்பாடியும் டெல்லி பயணம்!

சார்பட்டா: அடர்த்தியும் நுட்பமுமாக ஒரு திரைப்படம்!

16 நிமிட வாசிப்பு

சார்பட்டா: அடர்த்தியும் நுட்பமுமாக ஒரு திரைப்படம்!

ஞாயிறு 18 அக் 2020