மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 23 அக் 2020

இந்தியாவை முந்தும் வங்கதேசம், பாகிஸ்தான்

இந்தியாவை  முந்தும் வங்கதேசம், பாகிஸ்தான்

கொரோனா சூழல், பொருளாதார விவகாரங்களை மத்திய அரசு சரியாக கையாளவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 லட்சத்தைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 1.12 லட்சமாக அதிகரித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் இந்தியாவின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 10.3 சதவிகிதம் சுருங்கும் என்று கணித்துள்ளது. மேலும், தனிநபர் ஆண்டு வருவாயில் அண்டை நாடான வங்கதேசம் இந்தியாவை முந்தும் எனவும் அதன் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட பொருளாதார வளர்ச்சி தொடர்பான வரைபடத்தை ராகுல் காந்தி நேற்று (அக்டோபர் 16) தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதில், வங்கதேசம், மியான்மர், நேபாளம், சீனா, பூடான், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கான 2020-21 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சிக் கணிப்புகள் இடம்பெற்றிருந்தன.

அதில், அண்டை நாடான வங்கதேசத்தின் பொருளாதார வளர்ச்சி மைனஸில் செல்லாமல் 3.80 சதவிகிதம் வளர்ச்சி அடையும் எனவும், நேபாளம் 2.50 சதவிகிதம், மியான்மர் 2 சதவிகிம், சீனா 1.90 சதவிகிதம் வளர்ச்சி அடையும் என ஐஎம்எஃப் கணித்துள்ளது. பாகிஸ்தான் வளர்ச்சியும் மைனஸ் 0.40 சதவிகிதமாக இருக்கும் எனக் கூறியது. மற்ற அனைத்து நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 10.3 சதவிகிதத்தை நோக்கிச் செல்லும் என்றும் அது குறிப்பிட்டது.

இதுபற்றி ராகுல் காந்தி ட்விட்டரில், “ பாஜக அரசின் மற்றொரு மகத்தான சாதனை. இந்தியாவைவிட, கொரோனாவை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட சிறப்பாகக் கையாண்டுள்ளன” என்று மத்திய அரசை சாடியுள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநிதி, “ஒருபுறம் கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் மோசமான நிர்வாகம் நடந்துகொண்டிருக்கிறது. மறுபுறம், மோடியும் அவரது குழுவும் இந்திய பொருளாதாரம் முற்றிலும் பாழடைந்துவிட்டதை உறுதி செய்துள்ளனர். இன்று தேவை இல்லை, வாங்கும் நுகர்வு இல்லை, முதலீடு இல்லை, எந்த வேலைகளும் இல்லை. உண்மையில், 46 சதவிகித இந்தியர்கள் கொரோனாவுக்கு முன்பு சம்பாதித்ததை விட குறைவாகவே சம்பாதிக்கிறார்கள்” என்று கடுமையாக குற்றம்சாட்டினார்.

ஏற்கனவே தனிநபர் வருமானத்தில் வங்கதேசம் இந்தியாவை முந்தும் என்ற கணிப்புக்கு, ”பாஜகவின் வெறுப்பு நிரம்பிய கலாச்சார தேசியவாதத்தின் 6 ஆண்டு அருமையான சாதனை. வங்கதேசம் இந்தியாவை முந்தப் போகிறது” என்று ராகுல் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

எழில்

சனி, 17 அக் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon