மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 23 அக் 2020

கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்? பிரதமர் ஆய்வு

கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்?  பிரதமர் ஆய்வு

நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கைகள் வெளியிடப்படும் நிலையில், பிரதமர் மோடி இன்று (அக்டோபர் 17) கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்.

இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், பிரதமரின் முதன்மை செயலாளர், நிதி ஆயோக் உறுப்பினர்(சுகாதாரம்), முதன்மை அறிவியல் ஆலோசகர், மூத்த விஞ்ஞானிகள், பிரதமர் அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் விஞ்ஞானிகள், உயரதிகாரிகளின் கருத்துகளை கேட்டறிந்த பிரதமர் பிறகு பேசும்போது,

“கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மற்றும் தொற்று விகிதம் நிலையாக சரிந்து வருகிறது. இந்தியாவில் முன்னெடுக்கப்படும் மூன்று தடுப்பூசிகள் முன்னேற்ற நிலையில் இருக்கின்றன. இதில் இரண்டு தடுப்பூசிகள் இரண்டாம் கட்ட சோதனையிலும், ஒரு தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனையிலும் உள்ளது.

இந்திய விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வுக்குழுக்கள் ஆப்கானிஸ்தான், பூட்டான், வங்கதேசம், மாலத்தீவுகள், மொரீஷியஸ், நேபாளம் மற்றும் இலங்கை போன்ற அருகாமை நாடுகளுடன் ஒத்துழைப்பு மேற்கொண்டு ஆய்வு திறன்களை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். வங்கதேசம், மியான்மர், கத்தார் மற்றும் பூட்டான் நாடுகள் தங்கள் நாடுகளில் ஆய்வக பரிசோதனைகள் மேற்கொள்ளவும் வேண்டுகோள்கள் விடுத்துள்ளனர். சர்வதேச சமூகத்துக்கு உதவும் முயற்சியாக, நமது முயற்சிகளை நமது அருகில் உள்ள அண்டைநாடுகளுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளக்கூடாது, தடுப்பூசி வழங்கும் முறைக்காக தகவல் தொழில்நுட்ப தளங்கள் மற்றும் மருந்துகள், தடுப்பூசிகளை ஒட்டு மொத்த உலகத்துக்கும் வழங்க வேண்டும்” என்றும் பிரதமர் உத்தரவிட்டார்.

மேலும், “கொரோனா தடுப்பூசி நிர்வாகத்துக்கான தேசிய வல்லுநர் குழுவானது, மாநில அரசுகள் மற்றும் இது தொடர்பான அனைத்து பங்குதார ர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு தடுப்பூசியை சேமித்து வைத்தல் விநியோகம் செய்தல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பான விரிவான செயல் திட்டத்தை தயாரித்து வழங்கும். தடுப்பூசி விநியோகித்தல் மற்றும் தடுப்பூசிக்கான முன்னுரிமை ஆகியவற்றுக்காக தீவிரமாக பணியாற்றும் வகையில் மாநில அரசுகளுடன் நிபுணர் குழு ஆலோசனை மேற்கொள்ளும்.

நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் புவியல் ரீதியான பரப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தடுப்பூசிகள் விரைவாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசிகளை எடுத்துச் செல்லல், வழங்குதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றுக்கான ஒவ்வொரு நடவடிக்கையும் கடுமையாகத் திட்டமிடப்பட வேண்டும். இதற்கான சங்கிலித்தொடர் குளிர் சேமிப்பு வசதிகள், விநியோக இணைப்புகள், கண்காணிப்பு முறை, முன்னோக்கிய மதிப்பீடு மற்றும் மருந்து குப்பிகள் சிரிஞ்ச்கள் உள்ளிட்ட தேவைப்படும் துணை கருவிகளை தயார் செய்தல் ஆகியவற்றுக்கான திட்டமிடலை முன்கூட்டியே முடிக்க வேண்டும்

பேரிடர் மேலாண்மை திட்டம், தேர்தல் நடத்துதல் போன்றவற்றிலுள்ள நமது கட்டமைப்பு அனுபவத்தை தடுப்பூசி நிர்வாகத்திலும் பயன்படுத்த வேண்டும். தடுப்பூசி வழங்கும் பொறிமுறை என்பது பொதுமக்கள், தன்னார்வலர்கள், பொது சமூக அமைப்புகள், மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள் ஆகியோரை ஈடுபடுத்துவதாக இருக்க வேண்டும். நமது சுகாதார திட்டத்தின் மதிப்பீடு நீடித்திருக்கும் வகையிலான முறையில் ஒட்டு மொத்த செயல்பாடுகளும் வலுவான தகவல் தொழில்நுட்ப பின்னணி மற்றும் முறைகள் வடிவமைக்கப்பட வேண்டும்” என்றும் பிரதமர் கூறினார்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் பிறழ்வு அடைந்திருக்கிறதா என்றும் பிரதமர் கேட்டறிந்தார்.

ஐசிஎம்ஆர் அமைப்பு மற்றும் பயோ-டெக்னாலஜி துறையால் இந்தியாவில் கொரோனா வைரஸ் மரபணு தொடர்பாக இரண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவில் வைரஸ் மரபணு ரீதியாக நிலையானது மற்றும் வைரஸில் பெரிய பிறழ்வு எதுவும் இல்லை என்றும் பரிந்துரைக்கப்பட்டது.

இதைக் குறிப்பிட்ட பிரதமர், “ பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வீழ்ச்சி காரணமாக மனநிறைவு கொள்ளக் கூடாது எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர வேண்டும். குறிப்பாக வர இருக்கும் விழாக்காலங்களை கருத்தில் கொண்டு தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிதல் போன்ற தற்காப்பு முறைகள், தொடர்ந்து கைகளைக் கழுவதுதல் மற்றும் சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளுதலை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்” என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

-வேந்தன்

சனி, 17 அக் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon