அதிகாரத்தில் தலையிட முடியாது: சூரப்பாவிற்கு பாஜக ஆதரவு!

politics

அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தில் துணைவேந்தருக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக துணை வேந்தர் சூரப்பா, மத்திய அரசுக்கு எழுதிய கடிதம் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநில அரசை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக கடிதம் எழுதிய சூரப்பாவை, டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதையெல்லாம் விட சட்ட அமைச்சரான சி.வி.சண்முகம், சூரப்பாவின் செயல் ஒழுங்கீனமானது என விமர்சித்தார்.

ஆனால், மாநில அரசுக்குத் தெரியாமல் எந்தக் கடிதமும் எழுதவில்லை என அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்தார். இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் அவரிடம் விளக்கம் கேட்கப்பட்ட நிலையில், 69 சதவிகித இடஒதுக்கீட்டை பாதிக்கும் வகையில் உள்ள சிறப்பு அந்தஸ்தை ஏற்க மாட்டோம் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்த நிலையில் பாஜகவின் சார்பில் சூரப்பாவிற்கு ஆதரவு குரல் எழுப்பபட்டுள்ளது.

வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்டபொம்மனின் உருவப்படத்திற்கு நேற்று (அக்டோபர் 16) மலர் தூவி மரியாதை செலுத்திய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

“அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சுதந்திரமாக செயல்பட முயற்சிக்கிறார். அவரை சுதந்திரமாக செயல்பட விடாமல் சிலர் தடுக்கின்றனர். அரசின் நடைமுறைகளை அவரும் பின்பற்ற வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு” என்ற முருகன், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினால் இடஒதுக்கீடு பாதிக்கும் என சிலர் தவறாக பேசி வருகின்றனர். சிறப்பு அந்தஸ்து வழங்கினாலும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எந்த நேரத்திலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. அது அரசியலமைப்பு நமக்கு கொடுத்துள்ள உரிமை எனச் சுட்டிக்காட்டினார்.

“துணை வேந்தர் தனது பணியை செய்துவருகிறார். அண்ணா பல்கலைக் கழகத்தை தரம் உயர்த்த வேண்டும் என்று முயற்சி எடுக்கிறார். இந்த நேரத்தில் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லையே? அதுமட்டுமின்றி துணைவேந்தரின் அதிகாரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரமில்லை” என்று தெரிவித்தார்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *