மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 23 அக் 2020

கொரோனா வென்றுகாட்டிய 90 வயதைக் கடந்தவர்கள்!

கொரோனா வென்றுகாட்டிய 90 வயதைக் கடந்தவர்கள்!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படும் 60 வயதைக் கடந்தவர்கள்தான் அதிகளவில் உயிரிழக்கிறார்கள் என்பது புள்ளிவிவரம். இதனால் 60 வயதுக்கு மேற்பட்டோர் கவனமாக இருக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் 100 வயது தம்பதியினர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். 1921ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு கடந்த அக்டோபர் 2ஆம் தேதி வயது 100 ஆனது. வைத்தியநாதன் கடந்த 4 ஆம் தேதி காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினைகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. ஒருநாள் மட்டும் ஆக்சிஜன் ஆதரவு வழங்கப்பட்டது, மேலும் பொருத்தமான மருந்துகளுடன் சிகிச்சையளிக்கப்பட்டது.

வைத்தியநாதன் மனைவி 93 வயதான ஜானகி அக்டோபர் 5ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிடி ஸ்கேன் செய்யப்பட்டதில் அவருக்கு நுரையீரலில் 20 சதவிகித பாதிப்பு இருந்தது.

“வைத்தியநாதனுக்கு சர்க்கரை, இதயம் உள்ளிட்ட இணை நோய்கள் எதுவுமில்லை. அவர் ஆக்டிவாகத்தான் இருந்தார். அவர் தினமும் காலையில் யோகா செய்வார். தம்பதியினர் மருத்துவமனையில் தங்களின் தனிப்பட்ட தேவைகளை அவர்களே கவனித்துக்கொண்டனர்” என மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் தெரிவித்தார்.

மேலும், “முதியவா்கள் பலா் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவதைக் காண முடிகிறது. அதிலும் பலர் சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், கடுமையான நுரையீரல் பாதிப்புடன் சிகிச்சை பெற்றவா்களாவார். கொரோனாவை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றுக் கொண்டால் பாதிப்புகளையும், உயிரிழப்பையும் தடுக்கலாம்” என்று விவரித்தார்.

இதுபோலவே 93 வயதைக் கடந்த மற்றொரு பெண் ராஜலட்சுமி என்பவர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினார். அவருக்கு சுவாசப் பிரச்சினை இருந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 45 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்திருக்கிறார்.

இந்த வாரத்தில் மட்டும் 90-99 வயதுடைய 3 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் 90 வயதுக்கு மேற்பட்ட 27 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழில்

சனி, 17 அக் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon